Published:Updated:

'சூரியவம்சம்' இப்போ ரிலீஸ் ஆகியிருந்தா என்ன நடந்திருக்கும்..?

தார்மிக் லீ
'சூரியவம்சம்' இப்போ ரிலீஸ் ஆகியிருந்தா என்ன நடந்திருக்கும்..?
'சூரியவம்சம்' இப்போ ரிலீஸ் ஆகியிருந்தா என்ன நடந்திருக்கும்..?

ப்போ சினிமாவோட நிலை என்ன, ஒரு படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி என்னவெல்லாம் நடக்குது, எப்படி நம்மைத் தலைகீழா போட்டு திருப்புது? விமர்சகர்கள் செய்ற அட்டகாசங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பார்க்கலாம். அப்போ சூப்பர்ஹிட்டான 'சூரியவம்சம்' படமெல்லாம் இந்தக்காலத்துல வந்திருந்தா... ஆத்தீ..!

ஃபர்ஸ்ட் லுக் :

ஒரு படத்தை வெளியிடுறதுக்கு முன்னாடி அந்தப் படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்குறதுக்காகச் செய்ற பரிசோதனைதான் இந்த ஃபர்ஸ்ட் லுக். படத்திலிருந்து ஒரு நல்ல ஸ்டில்லை எடுத்து அதை போட்டோஷாப்ங்கிற கிச்சனுக்குள்ள ஃபில்டர், எஃபெக்ட்ஸ் போன்ற பல ஐட்டங்களைக் கலந்து சமைச்சு ஆவிபறக்க சுடச்சுட எடுத்தால் அதுதான் படத்தோட ஃபர்ஸ்ட் லுக். படத்துல வேலை பார்க்குற ஆளுங்க எல்லாம் அவங்களோட அதிகாரபூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்கள்ல கொளுத்தி போடுவாங்க, நம்ம பசங்களும் அதை ரேஷன் கடையில ஜீனி வாங்க வரிசையில நிற்கிறமாதிரி வெயிட் பண்ணிப் பார்த்து அவங்களோட டி.பி.யா மாத்திக்குவாங்க. இதுதான் முதல் படி. 

சிங்கிள் ட்ராக் :

இது அடுத்த கட்ட நடவடிக்கை. தமிழ்நாட்டுல ஏதாவது ஒரு முக்கியமான ஊருக்குப்போய் அங்கே இருக்கிறவங்களை எல்லாம் தூங்கவிடாம ஏதாவது ஒரு இடத்துக்கு வரச்சொல்லி அந்தப் படத்துல இருக்குற நல்ல பாட்டை ரிலீஸ் பண்ணுவாங்க. அந்தப் பாட்டுக்கு போதிய வரவேற்பு கிடைக்கலைன்னா அந்தப் படத்துல இருக்கிற வேற ஒரு பாட்டை வேற ஏதாவது ஊருக்குப்போய் ரிலீஸ் பண்ணுவாங்க. இந்தச் சோதனை முயற்சியில் ரிலீஸ் பண்ணுன பாட்டு வெற்றியடைஞ்சா ஏதாவது ஒரு தேதியில படத்தோட மொத்தப் பாட்டையும் ரிலீஸ் பண்ணிடுவாங்க. அடுத்த ஜெனரேஷன்ல எல்லாம் வேற கிரகத்துல வெச்சு ரிலீஸ் பண்ணாம இருந்தா சரி. 

டீசர் :

இதுதான் ஒரு படத்தைப் பத்தி எல்லோரும் தெரிஞ்சுக்குற முக்கியமான கட்டம். குறிப்பிட்ட படம் சம்பந்தமாக ரசிகர்களோட ரியாக்‌ஷன்ஸ் எப்படி இருக்குன்னு டீசர்ல இருந்து தெரிஞ்சுக்கலாம். அந்தப் படத்துல 20 - 30 சீன் வரைக்கும் கட் பண்ணி ஃபாஸ்ட் ஃபார்வர்ட் மோட்ல எடிட் பண்ணி டீசர்னு யூ-ட்யூப்ல வெளியிடுவாங்க. ஜியோ இருக்கதால ரொம்ப வசதியா வேற போயிடுச்சு, வியூஸ் சும்மா பிச்சுக்கும். இதுக்கெல்லாம் படக்குழு அம்பானிக்குதான் நன்றி சொல்லணும். அதுவும் படத்தோட டீசரை பகல்ல எல்லாம் ரிலீஸ் பண்ணமாட்டாங்க. நடுச்சாமத்துலதான் ரிலீஸ் பண்ணுவாங்க. நம்ம பசங்களும் தூங்காம யூ-டியூப்பையே மொறைச்சுப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அடுத்தது படத்தோட ப்ளஸ் என்ன மைனஸ் என்னனு சமூக வளைதளங்களில் விமர்சனம் அனல் பறக்கும்.

ட்ரெய்லர் :

டீசரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது டிரெய்லருக்கு ரெஸ்பான்ஸ் குறைவாதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா தூறல் போடுற மழை மாதிரிதான் ரெஸ்பான்ஸ் இருக்கும். பட் இடி, மின்னல் எல்லாம் கண்டிப்பா இருக்கும். படத்தோட டீசர் ஒரு 1 நிமிஷம் இருந்தா, ட்ரெய்லர் 2 - 3 நிமிஷம் வரைக்கும் இருக்கும். அதுக்கு அப்புறம் என்ன, வழக்கம்போல விமர்சகர்களோட கழுகுக் கண்ணுல இருந்து தப்பிக்கவே முடியாது. கலர் கலரா சட்டை போட்டு ரிவ்யூ போடுறவங்கள்ல ஆரம்பிச்சு எல்லோரும் வெச்சு அடிப்பாங்க. ஹாலிவுட், கோலிவுட், டோலிவுட்னு எல்லா வுட்டுகளிலும் ரிலீஸ் பண்ற ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர்னு  ரிவ்யூ பண்றவங்ககிட்ட இருந்து தப்பவேமுடியாது.  

படம் :

டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் போன்ற விஷயங்களைக் கடக்கும் போதுதான் ரசிகனுக்கு படம் எனும் அந்தப் பழம் கிடைக்கும். எழுதுற எனக்கே மூச்சு வாங்குதே உங்களுக்கு எல்லாம் கஷ்டம்தான் பாஸ். மேல சொன்ன விஷயங்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு மக்களோட ரியாக்‌ஷன் எப்படி இருக்குதுங்கிறதையும் பார்த்துட்டு ஒரு நல்ல நாள்ல படம் ரிலீஸ் ஆகும். படம் ரிலீஸானதுக்கு அப்புறம் ரசிகர்களோட ரியாக்‌ஷன் என்ன? இப்போ இல்லாட்டியும் ஒரு இருபது வருஷம் கழிச்சு 'புதுப்பேட்டை' படத்தைக் கொண்டாடுற மாதிரி கொண்டாடுவாங்களா? விமர்சனங்கள் என்ன சொல்லுது? படத்தைப் பத்தி மீம் கிரியேட்டர்ஸ் எப்படி மீம் போடுறாங்க? இது மாதிரியான பல கேள்விகளுக்கு பதில் பாஸிடிவ்வா வந்தா அது 'வெற்றிப் படம்'.

என்னங்க வெற்றிப் படம்ங்கிற வார்த்தையை மட்டும் ஹைலைட் பண்ணிருக்கேன்னு குழப்பமா இருக்கா? இப்பவே சால்வ் பண்றேன். ஒரு படத்தோட வெற்றியை பல காரணங்களை வெச்சு முடிவு பண்ணலாம். ஆனால், ஒரு படம் மொக்கையா? ஓகேவா? ஹிட்டா? ப்ளாக்பஸ்டரா? இதெல்லாம் முடிவு பண்றது அந்தப் படத்தோட வசூல் மட்டும்தான். ரசிகர்களுக்குள்ள எந்தப் படம் பெஸ்ட்டுனு சண்டை வந்தாலும் அவங்க முன்வைக்கிற காரணம் 'ஏய் எங்க ஆளு படத்துக்கு 100 கோடி வசூல், உங்க ஆள் படத்துக்கு வெறும் 99 கோடிதான் கெளம்பிகிட்டே இரு'. இதுதான் மொதல்ல அவங்க சொல்ற காரணம். ஆனா முன்னாடி எல்லாம், படம் ரிலீஸாச்சா, வீட்டுல முறுக்கையும், அதிரசத்தையும் கட்டுனோமா, எதிர்பார்ப்பே இல்லாம குழந்தை குட்டியோட போய்ப் படத்தை பார்த்துட்டு என்ஜாய் பண்ணினோமாங்கிறது மட்டும்தான் பேச்சு.  இப்போவெல்லாம் நிலைமை அப்படியா இருக்கு..?