Published:Updated:

உங்கள் வாழ்க்கையை எடுத்தால் உலக சினிமா!

செஞ்சியில் வாகை சூட வழிகாட்டிய சற்குணம்

உங்கள் வாழ்க்கையை எடுத்தால் உலக சினிமா!

செஞ்சியில் வாகை சூட வழிகாட்டிய சற்குணம்

Published:Updated:
##~##

சினிமா என்பது ஒரு காலத்தில் உயரத்து நிலவாக மலைக்கவைத்தது. ஆனால், இப்போதோ சினிமா ஆர்வம்கொண்ட இளைஞர்கள், குறும்படம் என்ற கையளவு அகல் விளக்கோடு களம் இறங்கி முத்திரை பதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தகைய கனவு கொண்ட இளைஞர்களுக்கு, செஞ்சியின் 'நிழல்’ அமைப்பு கடந்த வாரம் குறும்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது!  

 மீரா கதிரவன், பாஸ்கர் ஷக்தி, மு.களஞ்சியம், சீனு ராமசாமி, குழந்தை வேலப்பன் என்று தினம் ஒரு திரை ஆளுமைகள் கலந்துகொண்டனர். இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கலகலப்பூட்டி யவர் 'களவாணி’ இயக்குநர் சற்குணம்.

''உலக சினிமா என்ற வார்த்தை, டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருப்ப வனைக்கூட இன்று சென்று அடைந்து இருக்கிறது. முன்பு எல்லாம் உலக சினிமாக்களை ஏதாவது படவிழாக்களில் தான் பார்க்க முடியும். ஆனால், இன்று குரோசேவாவின் படங்கள் முதல்  உலகப் புகழ்பெற்ற அத்தனை சினிமாப் படங் களையும், 25 ரூபாய் குறுந்தகட்டில் பார்த்துவிடலாம். உலகத் திரைப்படம் பற்றி தெரியாத காலத்தில் தமிழில் சிறந்த படங்கள் வெளிவந்து இருக்கிறது. எனவே சிறந்த உலக சினிமாக்களைப் பாருங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒரு சினிமா எடுங்கள். அதுதான் உலக சினிமாவாக இருக் கும். நம்முடைய கலாசாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் படமாக்குங்கள். டி.வி.டி-க்களில் படங்களைப் பார்த்துவிட்டு, 1,000 கோடியில் படம் எடுத்தால் அது ஆரோக்கியமான விஷயம் இல்லை.  

உங்கள் வாழ்க்கையை எடுத்தால் உலக சினிமா!

நல்ல திரைக்கதை இருந்தாலே இன்று முக்கிய மான இயக்குநர் ஆகிவிடலாம். அந்த அளவுக்கு சினிமாத் துறையில் நல்ல கதைகளுக்கான தேவை இருக்கிறது!'' என்று விரிவாகப் பேசினார். தொடர்ந்து குறும்பட இயக்குநர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சற்குணம் அளித்த பதில்களில் இருந்து இங்கே கொஞ்சம்...

''அது எப்படி 'களவாணி’யில் விமலுக்கு அவ்வளவு பொருத்தமாக அந்த கேரக்டர் அமைந்தது?''

''விமல் என் நண்பர். அவரோட  ஆர்வமும், உழைப்பும்தான் 'அவரைவிட்டால் இந்த கேரக்டர் வேற யாருக்கும் பொருந்தாது’ங்கிற  அளவுக்கு கேரக்டரை மெருகேத்தி இருக்கு!''

'' 'களவாணி’ படத்தில் 'இளங்கோ’ கேரக்டர் இயல்பா இல்லாம, திணிக்கப்பட்டதுபோல இருந்தது ஏன்?''

''உண்மையில் இளங்கோ கேரக்டர்தான் படத்தில் நல்லவன். 'அறிக்கி’தான் கெட்டவன். கடைசியில் தங்கச்சியைப் பத்தி யோசிக்கும்போதுகூட 'அறிக்கிப் பய அதை இதைச்சொல்லி ஏமாத்திடுவானோ’னு இளங்கோ சொல்ற மாதிரி காட்சி வரும். ஆனா, கதாநாயகன்தான் இறுதியில் ஜெயிக்கணும்ங்ற ஃபார்முலாவை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது!''

உங்கள் வாழ்க்கையை எடுத்தால் உலக சினிமா!

'' 'வாகைசூட வா’ களவாணிக்கு முன்னாடியே உருவான ஸ்க்ரிப்ட்டா?''

''ஆமாம். என்னதான் திறமையான இயக்குநரா இருந்தாலும், முழு யூனிட் முன்னால முதன்முதல்ல 'ஸ்டார்ட் ஆக்ஷன்’ சொல்லும் போது தன்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு பயம் ஓடும். அப்படி இருக்கும்போது முதல் படமே பீரியட் ஃபிலிம் எடுக்குற அளவுக்கு எனக்குத் தன்னம்பிக்கை இல்லை!''

''கமர்ஷியல் சினிமாவுக்கும், ஆர்ட் ஃபிலிமுக்கும் என்ன வித்தியாசம்?''

''நல்லா ஓடுற எல்லாப் படமுமே கமர்ஷியல் சினிமாதான். பார்வையாளரைச் சென்றடையும் மிடில் சினிமாதான் இப்போதைக்குத் தமிழில் சிறந்த சினிமாவா இருக்குன்னு நினைக்கி றேன்!''

கலந்துரையாடலுக்குப் பிறகு திரையிடப்பட்ட  தீர்வு, சத்திய சோதனை, என்னை நான் பார்க்கி றேன், 666 ஆகிய நான்கு குறும் படங்களுள் இருந்து 'சத்திய சோதனை’ படத்தைச் சிறந்தப் படமாகத் தேர்வு செய்தார் சற்குணம்.

நிகழ்ச்சி முடிந்து கலைந்த இளைஞர்களின் கண்களில் கலையாத கனவுகள்!

- காசி.வேம்பையன்