Published:Updated:

`லைட்னிங் ஆரம்பிச்ச ரேஸ முடிச்சது யாரு?’ #Cars3 படம் எப்படி?

`லைட்னிங் ஆரம்பிச்ச ரேஸ முடிச்சது யாரு?’ #Cars3 படம் எப்படி?
`லைட்னிங் ஆரம்பிச்ச ரேஸ முடிச்சது யாரு?’ #Cars3 படம் எப்படி?

`லைட்னிங் ஆரம்பிச்ச ரேஸ முடிச்சது யாரு?’ #Cars3 படம் எப்படி?

இளம் தலைமுறை கார்களின் வருகை, கார் பந்தய உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றத்தை முந்தைய தலைமுறையின் மகத்தான வீரன் லைட்னிங் எப்படி சமாளிக்கிறான், எப்படி எடுத்துக்கொள்கிறான் என்பதே `கார்ஸ் - 3' படத்தின் ஒன்-லைன்.

ஹீரோ லைட்னிங் மெக்குயின் தனது நண்பர்கள் பாபி மற்றும் காலுடன் கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறான். அவர்கள் மூவருமே மாறி மாறி கப் அடித்து கலக்குகிறார்கள். ஒருநாள், என்றும் போல் நண்பர்கள் மூவரும் எல்லக்கோட்டை தொட முண்டியத்து விரைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென மின்னல் வேகத்தில் கறுப்பு கார் ஒன்று மூவரையும் அசால்டாக ஓவர் டேக் செய்து எல்லை கோட்டை முதல் ஆளாய் தொடுகிறது. நண்பர்கள் மிரண்டு போகிறார்கள். அடுத்த தலைமுறை வீரனான ஸ்டார்ம் தான், அவர்களை கதிகலங்க வைத்த அந்த கறுப்பு கார். ஸ்டைலிஷான தோற்றம், நவீன தொழில்நுட்பம், மின்னல் வேகம் என அனைவரையும் ஸ்டார்ம் கவர்ந்திழுக்கிறான். அதன் தாக்கம், கார் பந்தய உலகத்தில் முந்தைய தலைமுறை கார்கள், புது தலைமுறை கார்களால் ஓரங்கப்பட்டப்படுகிறது. பாபி, கால் மற்றும் பல முந்தைய தலைமுறை கார்கள் பந்தயத்தில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கிறார்கள். இதனால், `அடுத்து நீங்க எப்போ ரிட்டையர்டு ஆகப்போறீங்க?' என்ற கேள்வியை லைட்னிங் முன் ஒட்டுமொத்த மீடியாவும் வைக்கிறது. ஆனால், லைட்னிங்கிற்கோ ஓய்வு பெறும் விருப்பம் துளிக்கூட இல்லை. முந்தைய தலைமுறை கார்கள் ஒன்றும் எந்த விதத்திலும் புது தலைமுறை கார்களுக்கு சளைத்தது இல்லை என நிரூபிக்க விரும்புகிறான். ஆனால், லைட்னிங்கின் புது ஓனர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறார். அடுத்து நடக்க இருக்கும் போட்டியில், லைட்னிங் வெற்றி பெற்றால், லைட்னிங்கின் விருப்பப்படி ஓய்வை முடிவு செய்யலாம்.தோற்றுவிட்டால், ஓனரின் முடிவு தான். கிட்டத்தட்ட `செய் அல்லது செத்துமடி' நிலைதான். லைட்னிங்கின் பயிற்சியாளராக க்ரூஸ் நியமிக்கப்படுகிறாள். பந்தயத்தில் வெற்றி பெற லைட்னிங் என்ன செய்தான், எப்படி செய்தான், அவனது வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் எப்படி அமைகிறது என்பதை `நச்' ட்விஸ்டோடு சொல்லியிருக்கிறார்கள்.

ஓவன் வில்சன் ,க்றிஸ்டெலா அலான்ஸோ, லேரி தி கேபிள் கை என கார்களுக்கு டப்பிங் கொடுத்தவர்களில் பெரும்பாலானோருக்கு இயல்பிலேயே நக்கலும், நையாண்டியும் வாய்க்கப்பெற்றது என்பதால் வசன உச்சரிப்புகளே கிச்சுகிச்சு மூட்டுகிறது. `கார்ஸ்' படங்களின் பெரும்பலமே அந்த கலர்ஃபுல்லான விஷுவல்கள் தான். இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கார் பந்தய காட்சிகளை காட்டிய கேமரா கோணங்களும், படத்தின் கலர்களும் 3டியில் பார்க்க சுக்ஹானுபவம். படத்தில் வரும் பாடல்கள் ஓகே. பின்னணி இசை தான் ' இதெல்லாம் எங்கேயோ கேட்டது ஆச்சே' என ஞாபகம் வர வைக்கிறது. க்ளீஷேவான கதைக்களமாக இருந்தாலும், அதை முடித்த விதம் `க்ளாஸ்'. அதிலும், லைட்னிங் எடுக்கும் அந்த இறுதி முடிவு. செம்ம...

பந்தயத்தில் ஓடும் வீரன் என்றுமே வீரனாக இருக்கவே நினைப்பான். அது மட்டுமே அவன் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணுவான். ஆனால், அதைவிட அவன் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் விஷயம் வேறொன்று இருக்கிறது. அது என்னவென்று தெரிய `கார்ஸ் 3' பாருங்கள். தோனி, கோலி ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். ஹிஹி... 

பத்து வருடங்களுக்கு முன் வாண்டுகளாய் `கார்ஸ் 1' பார்த்தவர்கள், இன்று ஹீரோ என்ட்ரிக்கு விசில் அடிக்கிறார்கள். இன்றைய வாண்டுகளும் காட்சிக்கு காட்சி கைத்தட்டி மகிழ்கிறார்கள். எல்லா அனிமேஷன் படங்களைப் போலவே படத்தில் வரும் லைட்னிங் கதாப்பாத்திரம், எல்லோருக்கும் வயசுன்னு ஒன்னு இருக்கு என்பதை ஏனோ நினைவூட்டுகிறது. இந்தப்படமும் நம்மை பால்யத்திற்கு டைம் டிராவல் செய்ய வைக்கும். 

அடுத்த கட்டுரைக்கு