Published:Updated:

மலையுச்சி வீடு... சைக்கோ கொலைகாரன்... தனியொருவள் - பயமுறுத்துகிறதா 'உரு'?

விகடன் விமர்சனக்குழு
மலையுச்சி வீடு... சைக்கோ கொலைகாரன்... தனியொருவள் - பயமுறுத்துகிறதா 'உரு'?
மலையுச்சி வீடு... சைக்கோ கொலைகாரன்... தனியொருவள் - பயமுறுத்துகிறதா 'உரு'?

மலையுச்சி வீடு... சைக்கோ கொலைகாரன்... தனியொருவள் - பயமுறுத்துகிறதா 'உரு'?

எத்தனை நாளைக்குத்தான் எஸ்டேட் பங்களாவை வச்சு பேய்ப்படம் மட்டுமே எடுப்பீங்க? த்ரில்லர் படமும் எடுக்கலாமே என்ற கருவில் உருவாகியிருக்கிறது இந்த 'உரு'. உரு என்றால் அச்சம் என்று பொருள். தலைப்பில் இருந்த அச்சத்தைப் படமும் தந்ததா?

காலாவதியான எழுத்தாளன் என்ற முத்திரை குத்தப்பட்டதால் புழுங்கித் தவிக்கும் ஹீரோவாக கலையரசன். 'நீ என்ன பண்ணாலும் உன்னை சப்போர்ட் பண்ணத்தான் போறேன்' என்ற பாசக்கார மனைவியாக தன்ஷிகா. தன்னுடைய கதைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் தன் பாணியை மாற்றி த்ரில்லர் கதை ஒன்றை எழுத முனைகிறார் கலை. அதற்காக மேகமலை காட்டுக்குள் அனாதையாய் நிற்கும் பங்களாவில் சென்று தங்குகிறார். இடம் பழகப் பழக அங்கே நடக்கும் விசித்திர சம்பவங்கள் கலை கண்ணை உறுத்துகின்றன. இதற்கு நடுவே, தன்ஷிகாவும் மேகமலை வந்து சேர்கிறார். ஏற்கெனவே மரணபயத்தில் இருக்கும் கலையரசன், ஜோடியாய் அங்கே தங்கியிருப்பது ஆபத்து என கிளம்ப முடிவெடுக்கிறார். ஆனால்... டூ லேட்! கொலைகரான் ஒருவனால் அங்கிருந்து தப்ப முடியாத சூழல் ஏற்படுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என நகரும் திக்திக் நிமிடங்கள்தான் மீதிக்கதை. 

தோற்றுப்போன எழுத்தாளனாய்க் கையறுநிலையில் குமுறும் வேடம் கலையரசனுக்கு. கற்பனை உலகில் சஞ்சரிக்க ஓயாமல் புகைப்பது, வெறுப்பில் பேனா நிப்பை உடைப்பது என டிபிக்கல் எழுத்தாளரை கண் முன் நிறுத்துவதற்காக சபாஷ். ஆனாலும் சில ஆங்கில வசனங்கள் பேசும் போது செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு தெரிகிறது. கலையரசனை அசால்ட்டாக ஓவர்டேக் செய்கிறார் தன்ஷிகா. கதையமைப்பு அப்படி. இரண்டாம் பாதியை முழுக்கத் தன் தோளில் தூக்கிச் சுமந்தாலும் அலுப்பே தெரியாமல் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் இந்த கபாலி லேடி. ஒவ்வொரு முறை அங்கிருந்து தப்ப நினைத்து வீட்டிலிருந்து வெளியே ஓடுவது, மரணபயத்தில் மீண்டும் வீட்டுக்குள் ஓடுவது என திக்திக் நிமிடங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார் தன்ஷிகா. ஃபாரஸ்ட் கார்டாக மைம் கோபி, அவரது உதவியாளர், குட்டி ரோலில் வரும் டேனியல் ஆண்டனி போப், திடீரென அறிமுகமாகும் பக்கத்து வீட்டு கர்ப்பிணிப் பெண், அவளது கணவன் என அத்தனை கதாபாத்திரங்களையும், முடிவில் இணைத்திருந்த விதம் நன்று. 

மாடர்ன் சிட்டியில் தொடங்கி மேகம் சூழ்ந்த மலைச் சாலைகளில் பயணித்து ரத்தமும் வெறியுமாய் முடியும் கதையில் தொய்வே இல்லாமல் ஏறி இறங்கிறது ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார் கேமரா. மேகங்கள் மிதக்கும் படி ஏரியல் வியூவில் ஊரைக் காண்பிப்பது, இருட்டிலேயே நகரும் முக்கால்வாசிப் படத்தை தெளிவாகப் படம்பிடித்திருப்பது என பிரசன்னாவின் உழைப்பு திரையில் தெரிகிறது. த்ரில்லர் கதையில் ஒரு ஃப்ரேம் மிஸ்ஸானாலும் ஓட்டை விழுந்த கப்பலாகிவிடும் என்பதை மனதில் வைத்து கவனமாய்த் தொகுத்திருக்கும் சான்லோகேஷின் எடிட்டர் ஷார்ப். 

ஆடியன்ஸை பயமுறுத்தவும், குழப்பவும் காட்டிய கவனத்தை, கதையை சுவாரஸ்யப்படுத்துவதிலும் காட்டியிருக்கலாம். இதெல்லாம் கலையரசனின் கற்பனையா, இல்லை கனவா, ஒருவேளை கலையரசன் தன்ஷிகாவின் கற்பனையில் மாட்டிக் கொண்டிருக்கிறாரா, யாரின் குழப்பத்தால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என க்ளைமாக்ஸ் வரை குழப்பியடிக்கிறது கதை. குடும்ப பொறுப்புகளை உடைக்க நினைக்கும் எழுத்தாளன், பெண் முயலின் மரணம், போதையால் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் என கண்டுபிடிக்கவே சிரமமான குறியீடுகளால், மிகவும் மெதுவாக நகர்கிறது கதை. எல்லாவற்றையும் கடந்து க்ளைமாக்ஸ் வருவதற்குள் பெரிய அலுப்பு உண்டாகிறது. 

முதல் பாதியில் திகிலாக சீட் நுனியிலேயே உட்கார வைக்கும் அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்தின் 'உரு' இரண்டாம் பாதியில் தொய்வடைந்து தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறது. படத்தின் இரண்டு முக்கிய திருப்பங்களில் ஒன்றை எளிதாகக் கணித்துவிடலாம், இன்னொரு திருப்பம் க்ளைமாக்ஸ் வரை நீடித்திருந்தாலும் சுவாரஸ்யமாக இல்லாததால் மிக சாதாரணமாக முடிந்து விடுகிறது. முகமூடி மனிதன் ஏன் இத்தனை பேரைக் கொல்கிறான் என்ற ஒரு நிமிட காரணத்தை இன்னும் அழுத்தமாக பதிவு சொல்லியிருந்தால், அந்த ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். படத்தில் அப்பட்டமாக Hush, The shining போன்ற படங்களின் சாயல் அடிப்பதையும். சிலபல லாஜிக் மீறல்களையும் மறந்துவிட்டுப் பார்த்தால் ஒரு டீசன்ட் த்ரில்லர்தான் இந்த 'உரு'.

அடுத்த கட்டுரைக்கு