Published:Updated:

க்ரூ vs ட்ரூ! இரட்டை வில்லன்கள் என்ன சொல்கிறார்கள்? - Despicable Me 3 படம் எப்படி?

கார்த்தி
க்ரூ vs ட்ரூ! இரட்டை வில்லன்கள் என்ன சொல்கிறார்கள்? - Despicable Me 3 படம் எப்படி?
க்ரூ vs ட்ரூ! இரட்டை வில்லன்கள் என்ன சொல்கிறார்கள்? - Despicable Me 3 படம் எப்படி?

இது சீக்வல் வாரம் போல. ஒரு பக்கம் 2006ம் ஆண்டு வெளியான கார்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் , மற்றொரு பக்கம், 2010ம் ஆண்டு வெளியான டெஸ்பிகபிள் மீ படத்தின் மூன்றாம் பாகம் (2015ம் ஆண்டு வெளியான மினியன்ஸ் தனிக்கதை என்பதால், அது ஆட்டத்துக்கு சேர்த்தி இல்லை). கடந்த வாரம் பார்த்த மம்மி ரீபூட் காட்டிய மரண பயத்தில், பயந்து பயந்துதான் படத்துக்கு போக வேண்டி இருக்கிறது . டிரெய்லரிலேயே, முழுப் படமும் இருப்பதால், எதிர்ப்பார்ப்பை குறைத்துக்கொண்டுதான் டெஸ்பிகபிள் 3ஐ பார்க்க வேண்டியிருந்தது. எப்படி இருக்கிறது டெஸ்பிகபிள் மீ 3.

ஹாலிவுட்டில் கொடூர கெட்டவனாக நடித்துக்கொண்டு இருந்த பிராட்டின் நிகழ்ச்சிகள் ஃபிளாப் ஆக, அவனது நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுகிறது. இதனால், கடும் கோபத்துக்கு ஆளான பிராட், உண்மையிலேயே வில்லனாகிறான். பபுள் கம் வைத்து எல்லோரையும் வென்று வில்லனாக வலம் வருகிறான்  பிராட். அவனைப் பிடிக்க முடியாமல் போக ஆன்ட்டி வில்லன் லீகில் (Anti villain league)ல் ஏஜென்ட்டாக இருக்கும் க்ரூ, அவனது மனைவி லூசி, இருவரது வேலையும் பறி போகிறது. அதே நேரத்தில் க்ரூவிடம் வேலை செய்யும் மினியன்களும் வேலை ரிசைன் செய்துவிட்டு கிளம்புகிறது. அப்போது வரும் செய்தி,அவர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது. குழந்தையாக இருக்கும் போது, பிரிந்த அவனது இரட்டையர் ட்ரூ அவனை சந்திக்க ஆசைப்பட, அங்கு குடும்பத்தோடு செல்கிறான். க்ரூவிற்கு மீண்டும் தன் வேலையைப் பெற வேண்டும். ட்ரூவிற்கு பெரிய அளவில் தங்கள் குடும்பப் பாரம்பரியப்படி கெட்டவனாக வேண்டும். வில்லன் பிராட்டுக்கு தன்னை நிராகரித்த ஹாலிவுட்டை பார்சல் செய்து இந்த கிரகத்தை விட்டே அனுப்ப வேண்டும். இதில் யார் யார் திட்டம் பலிக்கிறது, வேலையை விட்டுச் சென்ற மினியன்கள் என்ன ஆகின்றன, என்பதுதான் டெஸ்பிகபிள் மீ 3.

AAA சிம்பு ஸ்டைல் மீசை, எண்பதுகளின் பெல் பாட்டம் காஸ்டியூம் என காமெடியாக இருக்கிறார் பிராட். க்ரூவிற்கு முடி வைத்தால் ட்ரூ. க்ரூ தத்தெடுத்து வளர்க்கும் மூன்று குழந்தைகளும் அப்படியேதான் இருக்கிறார்கள். அதுக்கு ஏற்றார் போல், க்ரூ சொல்லும் வசனமும் செம. (மார்கோவின் வயது 12.எப்போதும் 12 ஆகத்தான் இருக்கும்) அடுத்த பாகத்திற்காக ட்ரூவின் கதாப்பத்திரத்திற்கு அதிகப்படியான காட்சிகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அது உச்சி குடுமி ஆக்னஸ், ஸ்பெக்ஸ் மார்கோ , எடித் சுட்டீஸின் நேரத்தை தின்றுவிட்டது. அதே போல், மினியன்ஸும் படம் முழுக்க தனியாகவே வருகிறார்கள். மினியன்ஸின் காட்சிகள் குறைவு என்றாலும், ஸ்டேஜில் பாடும் டிக்கி டிக்கி பாபேலுவும், சிறையில் செய்யும் அட்டகாசங்களும், சிரிப்பலைகள்தான். இறுதியில் மினியன்ஸ்க்கு புது பாஸூம் கிடைத்துவிடுகிறது. சுட்டீஸின் பகுதிகள் குறைக்கப்பட்டது படத்தில் இருக்கும் எமோஷனலை குறைத்து இருக்கிறது. மினியன்ஸின் குறும்புகள் மூலம் வரும் காமெடியை குறைத்து, வசனங்கள் மூலமாக காமெடி வைத்திருப்பது பெரிய ஏமாற்றம். வசன காமெடிகள் நன்றாகவே இருந்தாலும், அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது தனி ட்ராக்கில் வரும் மினியன்கள் செய்யும் சேட்டைகள்தான். 

2010ம் ஆண்டு முதல் பாகம் வெளியான போது, மினியன்ஸ் இவ்வளவு ஹிட் ஆகும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். சினிமா, வீடியோகேம், மொபைல் கேம், விளையாட்டு பொம்மைகள் தொடங்கி மொபைல் கவர் வரை மினியன்ஸின் ஆதிக்கம் அதிகம். அதிலும் அது பேசும் கொட்டச்சி பீட்டா டொபக்கோ ச்க்ட்டுகோ என புரியா மொழி கூட ஹிட் தான். இந்த மொழியை மட்டுமே வைத்து சப்டைட்டில் கூட இல்லாமல், தனியாக மினியன்ஸ் என்னும் படத்தை கல்லா லட்டியது இந்தக் குழு.

ஆனால், அது எல்லாவற்றையும் கடந்து ஏதோ ஒரு வகையில் நம்மை படத்தின் மீது ஈர்க்க செய்கிறது இந்த டிஸ்பிகபிள் மீ3, இந்த வாரம் வெளியான கார்ஸ்3, டிஸ்பிகபிள் மீ3 இரண்டுமே, குழந்தைகளுடன் சந்தோஷமாய் பார்த்து மகிழ வேண்டிய படங்கள்தான்.