Published:Updated:

“ ‘பாகுபலி’ ராமாயணம்னா, ‘சங்கமித்ரா’ மகாபாரதம்!" - 'வனமகன்' ஜெயம் ரவி #VikatanExclusive

“ ‘பாகுபலி’ ராமாயணம்னா, ‘சங்கமித்ரா’ மகாபாரதம்!" - 'வனமகன்' ஜெயம் ரவி #VikatanExclusive
“ ‘பாகுபலி’ ராமாயணம்னா, ‘சங்கமித்ரா’ மகாபாரதம்!" - 'வனமகன்' ஜெயம் ரவி #VikatanExclusive

பிப்ரவரி மாதத்தில் போகனாய் கலக்கிய ஜெயம் ரவி, ஜூன் மாதம் வனமகனாய் வலம் வரவிருக்கிறார். ‘டிக் டிக் டிக்’, ‘சங்கமித்ரா’ என தனது கனவு படங்களை கையில் வைத்திருக்கும் ஜெயம் ரவியை சந்தித்து பேசினோம். 

‘வனமகன்’ ரிலீஸாக போகுது, எப்படி ஃபீல் பண்றீங்க..?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரதர். ‘பேராண்மை’ படம் படிச்ச இளைஞன் பழங்குடி மக்களின் ஒருத்தனா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. ‘வனமகன்’ படம் படிக்காத, வெளியுலகமே தெரியாத பழங்குடி இளைஞன் சிட்டிக்கு வந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இப்படி ரெண்டுமே வேற வேற சப்ஜெக்ட். அதனால், ‘பேராண்மை’ படமும் ‘வனமகன்’ படமும் எந்த இடத்திலையும் ஒத்துக்போகாது. இதை நான் முதல்ல சொல்லணும்னு நினைக்கிறேன்.

அதுபோக, இந்த ரெண்டு படத்திலும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ‘வனமகன்’ படத்தில் ஆதிவாசியாகவே மாறணும்னு சொன்னாங்க. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஜிம்முக்கு போகமலேயே உடம்பை ரெடி பண்ணுனேன். 15 கிலோ எடையை குறைச்சேன். நிறைய மரங்கள் ஏற வேண்டியிருந்தது. ஒரு நடிகனா இந்தப் படம் பண்ணும் போது அதிகமாகவே சிரமப்பட்டேன். இந்த சிரமங்களை எல்லாம் ஒரு நல்ல படத்துக்காக பண்ணிருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. நான் மட்டுமில்ல இந்த படத்தில் நடிச்ச, வேலைப் பார்த்த எல்லாரும் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் பண்ணியிருக்கோம்.”

‘மிருதன்’ படத்துக்கு அப்பறம் அதே கூட்டணியில் ‘டிக் டிக் டிக்’ படம் பண்றீங்க, அதைப்பற்றி..?

“ ‘மிருதன்’ படம் முடிஞ்சதுக்கு அப்பறம் அந்த படத்தோட இயக்குநர் ஷக்தி, ‘என்கிட்ட ஒரு சின்னப்படம், ஒரு பெரிய படம் இருக்கு. இதுல எதை நாம அடுத்து பண்ணலாம்’னு கேட்டார். அதுக்கு நான், ‘நீங்க 4, 5 சின்னப்படம் பண்றதுக்கு ஒரே ஒரு பெரிய படமா பண்ணிடுங்க’னு சொன்னேன். நான் சொன்னதுல ரொம்ப உற்சாகமான ஷக்தி, விண்வெளியில நடக்குற மாதிரி ஒரு கதையை ரெடி பண்ணிட்டு வந்துட்டார். ‘ஏங்க நான் பெரிய படம்னு தான் சொன்னேன். அதுக்காக இவ்வளவு பெரிய படமா’னு அவர்கிட்ட கேட்டேன். 

ஆனால், அவர் சொன்ன கதை சூப்பரா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம ‘மிருதன்’ படம் குழந்தைகள் பார்க்கிற மாதிரியான படமா இல்ல. அதுனால, நம்மளோட அடுத்த படம் குழந்தைகள் பார்க்கிற மாதிரி இருக்கணும்னு முதல்லையே முடிவு பண்ணிட்டோம். அதுக்கு ஏத்த மாதிரியே இந்தப் படத்தின் கதை குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி இருந்துச்சு. அதுனால, நான் ஓகே சொல்லிட்டேன். ‘டிக் டிக் டிக்’ படத்தோட டீசர் இன்னும் கொஞ்ச நாள்ல ரிலீஸ் ஆகப்போகுது. கண்டிப்பா அது உலக சினிமா தரத்துக்கு இருக்கும்.”

‘டிக் டிக் டிக்’ படத்தில் உங்க பையனும் நடிச்சிருக்காரே, அதைப் பற்றி சொல்லுங்க..?

“என் பையன் இந்தப் படத்தில் எனக்கு பையனாகவே நடிச்சிருக்கார். எனக்கு அவரை நடிக்க வைக்கணும்னு ஐடியாவே இல்ல. ஆனா, டைரக்டர் ஷக்தி தான், ‘இந்த ரோல் ரொம்ப முக்கியமானது. படம் முழுக்க ட்ராவல் பண்ற மாதிரி இருக்கும். உங்க பையனே நடிச்சா எமோஷனலா கனெக்ட் ஆகும்’னு சொன்னார். நானும் என் பையன்கிட்ட கேட்டேன். அவனும் ‘சரி, வரேன்’னு சொல்லிட்டான். ‘என்னடா, உடனே ஓகே சொல்லிட்டான். சரி, அவனுக்கு அந்த சீரியஸ்னெஸ் தெரியலை’னு விட்டுடேன். 

முதல் நாள் ஷூட்டிங்கிற்கு என்கூட தான் வந்தான். ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் செட்டுக்குள்ள ஓடி ஆடி விளையாடிக்கிட்டு இருந்தான். ஷூட் ஆரம்பம் ஆனதும் ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து என்ன நடக்குது, யார் என்ன பண்றாங்கனு ஆர்வமா கவனிச்சான். அவனோட சீன் ஷூட் பண்ணும் போதும் கொஞ்சம் கூட பயப்படல. டைலாக்ஸை மனப்பாடம் பண்ணி சூப்பரா பண்ணிட்டான். என்னோட முதல் படம் முதல் சீன் ஷூட் அப்போ நான் பயந்த மாதிரி என் பையன் எதுவும் பண்ணலை. என்னை விட ரொம்ப தெளிவா இருந்தான்.”

தமிழ் சினிமாவிலேயே அதிக பட்ஜெட்ல எடுக்குற படம் ‘சங்கமித்ரா’, அதுல நீங்க நடிக்கிறீங்க... எப்படி இருக்கு..?

“ ‘சங்கமித்ரா’ படத்தின் கதையை கேட்கும் போது எனக்குள்ள ஒரு பூரிப்பு ஏற்பட்டுச்சு. கதையில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகம் ஆகும். இல்ல, ஏதாவது பெரிய சுவாரஸ்யமான சம்பவம் நடக்கும். இப்படி படம் முழுக்கவே நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும். நான் கேட்டதுலையே சிறந்த கதைனு இதை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்காக சுந்தர்.சி சார் ஒரு வருஷத்துக்கும் மேல ஒர்க் பண்ணிட்டு இருக்கார். கண்டிப்பா இந்தப் படம் ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும். கேன்ஸ் விழாவில் இந்த படத்தை அறிமுகம் செய்ததில் இருந்து எதிர்பார்ப்பு அதிகமாகிருக்கு. 

இந்தப் படத்தில் நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கிறோம். எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கனால, எந்த ஈகோவும் இல்லாம இந்தப் படம் நல்லபடியா முடியும். ஒரே படத்துலையே நான் ஆசைப்பட்ட பல விஷயங்கள் நடந்திருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான், சுந்தர்.சி, தேனாண்டாள் பிலிம்ஸ்னு நான் யாரோடலாம் ஒர்க் பண்ணணும்னு நினைச்சேனோ அவங்க எல்லாரோடும் இந்தப் படத்தில் ஒர்க் பண்றேன். அதுமட்டுமில்லாம நான்கு மொழிகளிலும் உலகம் முழுக்க ரிலீஸாகுது. இது எல்லாமே யாருக்கும் ஒரே படத்துல கிடைச்சிடாது. எனக்கு அப்படி அமைஞ்சிருக்கு.” 

‘சங்கமித்ரா’ படத்தோட ஜானர்லையே ஏற்கெனவே ‘பாகுபலி’ வந்திருக்கனால உங்களுக்கு எதுவும் ப்ரஷர் இருக்கா..?

“நான் இதை ப்ரஷரா நினைக்கலை. ‘பாகுபலி’ ஒரு ராமாயணமா இருந்தா நாங்க ஒரு மகாபாரதமா இருப்போம். இல்ல, ‘பாகுபலி’ மகாபாரதமா இருந்தா நாங்க ராமாயணமா இருப்போம். ஆனால், ரெண்டுமே எபிக் தான். அதனால, ரெண்டையும் கம்பேர் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்.”