Published:Updated:

"தனுஷை அப்படிப் பார்த்து அழுதுட்டேன்!" - ராஜசேகர் மகள் ஷிவானி!

"தனுஷை அப்படிப் பார்த்து அழுதுட்டேன்!" - ராஜசேகர் மகள் ஷிவானி!
"தனுஷை அப்படிப் பார்த்து அழுதுட்டேன்!" - ராஜசேகர் மகள் ஷிவானி!

‘‘ஸ்கூல் படிக்கும்போது மேடைனா எனக்கு ரொம்ப பயம். வழக்கமா அப்பாவோட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரே எங்களை அழைச்சுட்டுப் போவார். அப்படி ஒருமுறை போனப்போ, என்னை மேடையில் ஏறி பாடச் சொன்னாங்க. பயந்துட்டேன். இன்னிக்கு உங்ககிட்ட முதல்முறையா பேசும்போதுகூட எந்தத் தயக்கமும் இல்லாமப் பேசக் காரணம், அன்னிக்கு அப்பா என்கிட்ட சொன்ன அந்த வார்த்தைகள்தான்... ‘எதுக்கு பயப்படுற... அப்பா-அம்மா முன்னாடிப் பாடச்சொன்னா பயப்படுவியா? இங்கே இருக்கிற எல்லாரையும் நம்ம குடும்பத்துல உள்ளவங்களா நினைச்சுக்க. இவங்க உன்மேல அன்பு வெச்சிருக்காங்க. உன் பாட்டைக் கேட்டுப் பாராட்ட வந்திருக்காங்க. நீ உன் குடும்ப உறுப்பினர்களுக்காகப் பாடுறதா நினைச்சு பாடு. ஜெயிக்கணும்னா பயம் கூடாது’ன்னார். எனக்குள் இருந்த பயம் அப்பவே ஓடிடுச்சு. அந்த கான்ஃபிடன்ஸ்தான் என் அப்பா.

இதேபோல அம்மா எதுக்குமே ‘நோ’ சொல்ல மாட்டாங்க. தப்பு பண்ணினாக்கூட எங்களைத் திட்டவோ அடிக்கவோ மாட்டாங்க. ‘ஐயய்யோ... இப்படி வளர்த்துட்டேனே!’னு சொல்லி தன்னைத்தானே அடிச்சுப்பாங்க. அதுக்கு அப்புறம் நான் தப்பு பண்ணுவேன்..? இந்த அன்புதான் என் அம்மா. இவங்க வழியில் நானும் சினிமாவுக்கு வர்றேன்’’  என்ற டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மூத்த மகள் ஷிவானி, சினிமாவுக்கு வருகிறார்.

‘‘ வால்டார்ப் மெத்தட் ஆஃப் டீச்சிங். இது, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் கல்விமுறை. இதில் டெஸ்ட், மார்க், ரேங்கிங்னு ஒருத்தரை உயர்த்தி இன்னொருத்தரைத் தாழ்த்தி பார்க்கிற எந்த வேறுபாடும் இருக்காது. புத்தகப் படிப்பைத் தாண்டி நம்மோட மற்ற திறமைகளை வெளியே கொண்டுவர்ற மாதிரியான கற்றல் முறை. நான் படிச்ச இந்த ஸ்கூல், ஹைதராபாத்ல இருந்து ஊருக்கு வெளியே ரொம்பத் தூரம் இடம்பெயர்ந்தப்ப, ‘அவ்வளவு தூரம் அனுப்புறது சிரமமாச்சே!’னு நினைச்ச அப்பா, அதே கல்விமுறை கொண்ட ஸ்கூலை எங்களுக்காக ஹைதராபாத் சிட்டியிலேயே ஆரம்பிச்சார். அதில்தான் நான் ஸ்கூலிங் முடிச்சேன். பிறகு, ஹைதராபாத் அப்போலோ மெடிக்கல் காலேஜில் மெடிசின் சேர்ந்தேன். இப்ப ரெண்டாவது வருஷம் முடிஞ்சு, மூணாவது வருஷம் க்ளாஸ் ஆரம்பிக்கப்போகுது. அதோடு என் சினிமா கெரியரும்.’’

‘‘அப்பாவைப் பார்த்துதான் டாக்டருக்குப் படிக்கணும்னு முடிவுபண்ணீங்களா?’’

‘‘ஆமாம். அப்பாவைப் பொறுத்தவரை, ‘ஒரு அவசரத்துக்கோ, ஆபரேஷன் பண்ணவேண்டிய விஷயங்களுக்கோ அலோபதி நல்ல மருத்துவம்தான். ஆனா, குணப்படுத்துவதில் அலோபதியைவிட ஆல்டர்நேடிவ் தெரபி மருத்துவம்தான் பெஸ்ட். ஏன்னா, பக்கவிளைவுகள் குறைவு. சீக்கிரம் குணமாகும்’னு அப்பா நம்புவார். இதை நிரூபிக்கவும் செஞ்சார். நண்பர்கள், ஃபேமிலி எல்லாருக்கும் இவர்தான் மருத்துவம் பார்ப்பார். அவர் தர்ற அந்த ஆல்டர்நேடிவ் மருந்துகள் ரொம்ப நல்லா வேலைசெய்யும்.

அப்பாவுடன் படித்த  மருத்துவக் கல்லூரி நண்பர், இப்போ அமெரிக்காவில் பெரிய கண் மருத்துவர். அவருக்கு ஹார்ட் ப்ராப்ளம் வந்தப்போ, அவரை ஆல்டர்நேடிவ் தெரபி மருத்துவம் மூலமாத்தான் குணப்படுத்தினார். பலரும் நோய் குணமான பிறகு, ‘டாக்டர், நீங்கதான் என் கடவுள்’னு சொல்லி, அப்பாவுக்கு நன்றி சொல்லிட்டு போவாங்க. அப்பாவின் நண்பர்கள், ‘யூ ஆர் மிராக்கிள் மேன்’னு சொல்வாங்க. ‘நம்மை கடவுளுக்கு நிகரா பார்க்கிற இந்த ஃபீல், எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்களும் இதை ஃபீல் பண்ணணும்னா மருத்துவத்தை முழுமையா கத்துக்கங்க’னு அப்பா சொல்வார். எனக்கு அந்த ஃபீல் வேணும். அதனால்தான் நானும் மருத்துவம் படிச்சிட்டிருக்கேன்.’’

‘‘படிப்பு ஓகே. நடிக்கணும்கிற ஆர்வம் எப்போ வந்துச்சு?’’

‘‘சின்ன வயசுல இருந்தே நடிப்பு மீது எனக்கு ஆர்வம் உண்டு. தவிர, அப்பா எங்கே போனாலும் என்னையும் தங்கச்சி சுவாஸ்திகாவையும் அழைச்சுட்டுப் போவார். ஷூட்டிங் ஸ்பாட்லதான் வளர்ந்தோம்னுகூட சொல்லலாம். அப்படி சினிமா ஷூட்டிங் பார்த்துப் பார்த்து நடிப்பு மீது ஆசை தொத்திக்கிச்சு!’’

‘‘நடிக்கணும்னு முடிவுபண்ணீட்டீங்க. அதுக்கு எப்படித் தயாராகிட்டிருக்கீங்க?’’

‘‘ஆரம்பத்தில் டான்ஸ், பாட்டு, மியூசிக்னு அப்பப்ப கத்துக்கிட்டு, அப்பப்ப விட்டுட்டுனு ஒருமாதிரி பண்ணிட்டிருந்தேன். சின்ன வயசுல இருந்தே கதக், குச்சுப்புடி கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல டான்ஸ் மாஸ்டர், கோ ஸ்டாரோடு கமர்ஷியல் டான்ஸ் பண்ணுவோம். ஃபேமிலி பார்ட்டிகள்ல ஆடுவோம். தவிர, கடவுள் புண்ணியத்தில் நானும் தங்கச்சியும் நல்லாப் பாடுவோம். படங்கள்லகூட பாடச்சொல்லிக் கேட்பாங்க. பத்து வருஷங்களா கீபோர்ட் கத்துக்கிறேன். வெஸ்டர்ன் வாசிக்காம அதில் கர்னாடிக் கத்துக்கிட்டேன். அதில் நானே பாடலை கம்போஸ் பண்ணி பிளே பண்ணுவேன். இதுதவிர, வீணையும் கொஞ்ச நாள் கத்துக்கிட்டேன். புல்லாங்குழல் வாசிப்பேன். இப்ப கிதார் கத்துக்கிட்டிருக்கேன்.’’

‘‘சினிமாவுக்குப் பயிற்சி முக்கியம்தான். ஆனா, இவ்வளவு விஷயங்கள் கத்துக்கணுமா?’’

‘‘வழக்கமா சினிமா ஃபேமிலியிலிருந்து யார் சினிமாவுக்கு வந்தாலும், ‘அவங்க சினிமாவுக்கு வர்றது ஈஸி’னு ஒரே வார்த்தையில் சொல்லிடுறாங்க. ஆனா, இதுக்கான தகுதியும் முயற்சியும் எல்லாருக்கும் ஒண்ணுதான். முயற்சியும் பயிற்சியும் இல்லைன்னா இங்கே நீடிக்க முடியாது. அதுக்காகத்தான் நாலஞ்சு வருஷங்களா நான் ட்ரெயின் ஆகிட்டிருக்கேன். முன்னாடியெல்லாம், இப்ப இருக்கிறதைவிட ரொம்ப ஒல்லியா இருப்பேன். இப்போ கொஞ்சம் உடம்பை ஏத்தியிருக்கேன். ஆரம்பத்துல ஜிம், க்ளாசிக்கல் டான்ஸ், மூவி டான்ஸ்னு ஒழுங்கா போவோம். அதைத் தொடரணும்னா நமக்குள் டிசிப்பிளின் அவசியம். நாலஞ்சு வருஷங்களா டான்ஸ், பாட்டு, கிக் பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்னு நிறைய கத்துக்கிட்டிருக்கேன்.

`ஏன் இவ்வளவு?'னு நீங்க கேட்கலாம். முழுமையான நடிகையா இருக்கணும். லேடி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி. அதுக்குதான் இந்த ஆல் ரவுண்ட் பிராக்டீஸ். ஆனா, இது ஒரேநாள் நைட்ல நடந்துடாது. அதுக்கு நிறைய தியாகம் பண்ணணும். எனக்கு அரிசி சாதம் பிடிக்கும். இருந்தாலும் அதை மறந்துட்டு, இப்போ கோதுமை ரைஸ்ல செஞ்ச பிரியாணிதான் சாப்பிடுறேன். ‘வேற வேலை கிடைக்கலைன்னா சினிமாவுக்குப் போகலாம்’னு நினைக்காதீங்க. அது முடியாது. ஏன்னா, இது ரொம்ப கஷ்டமான துறை. இப்படிப் பயிற்சிகளோடு வர்ற என்னை யாரும் ராஜசேகர் மகளாப் பார்க்காதீங்க. ஷிவானியாப் பாருங்க. என் தனித்திறமையைப் பார்த்து என்னை அங்கீகரிங்க. அது போதும்.’’

‘‘அப்பா-அம்மா என்ன சொல்றாங்க... அவங்களோட திரை அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துப்பாங்களா?’’

‘‘மற்ற சினிமா நட்சத்திரங்கள் தங்களோட ஃபேமிலியையும் சினிமாவையும் தனித்தனியா வெச்சிப்பாங்க. மிக்ஸ் பண்ண மாட்டாங்க. சிலர் சினிமாவையும் குடும்பத்தையும் ஒண்ணாவே வெச்சிருப்பாங்க. இதில் எங்க குடும்பத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ், தெலுங்கு சினிமாவில் உள்ள பெரும்பாலானவங்களை எனக்கு பெர்சனலா தெரியும். அது வெளிநாடோ, உள்நாடோ அப்பா ஷூட்டிங் எங்கே இருந்தாலும் நாங்க எல்லோரும் அங்கே இருப்போம். அதேபோல பெரும்பாலான சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஃபேமிலியாத்தான் போவோம். இதனால ஃபிலிம் இண்டஸ்ட்ரி மேல எங்களுக்கு எந்தப் பயமோ, இங்கே வர எந்தத் தயக்கமோ இல்லை.

சீனியர் சினிமா ஸ்டார்களோட மகன், மகள்கள்ல பலர் என் நண்பர்கள். ‘நாங்களும் சினிமா ஃபேமிலிதான். ஆனா, உங்க அப்பா-அம்மா உங்களுக்கு சினிமாவைச் சொல்லித்தந்த அளவுக்கு எங்க வீட்ல சொல்லித்தரலை. அந்த வகையில் நீங்க கொடுத்துவெச்சவங்க’னு சொல்வாங்க. உண்மைதான். இப்பகூட இந்த போட்டோ ஷூட் முடிச்சதும், ‘இப்படி ஒரு ஐடியா இருக்கு’னு சிலருக்கு என் போட்டோக்களை வாட்ஸ்அப் பண்ணினாங்க அம்மா. அதில் பலர், ‘ஷிவானியை நான்தான் முதலில் அறிமுககப்படுத்துவேன்’னு ஆர்வமா முன்வர்றாங்க. இதுக்கு அம்மா-அப்பா எங்களுக்குத் தர்ற சுதந்திரமும் மற்றவர்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பும்தான் காரணம்.’’

‘‘அப்பாவை ஒரு நடிகரா எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘அப்பா சினிமாவுக்கு வந்த இந்த 35 வருஷங்கள்ல நிறைய வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். ஆனா, இப்பவும் முதல் பட முயற்சி மாதிரிதான் ஒவ்வொரு படத்துக்கும் தயாராகிறார். மறுநாள் ஷூட்டிங்னா, முதல் நாள் நைட்டே தெலுங்கு டயலாக்ஸைத் தமிழ்ல எழுதிவெச்சு, எங்ககிட்ட பேசிக்காட்டி பிராக்டிஸ் பண்ணுவார். அவருக்கு டான்ஸ் அவ்வளவு ஈஸியா வராது. எப்படியாவது நல்லா டான்ஸ் ஆடுற மாதிரி மேனேஜ் பண்ணணும்னு மெனக்கெடுவார். ‘பிராக்டிஸ் பண்ணுங்க டாக்டர்’னு நானும் தங்கச்சியும் அவரை பயங்கரமா டீஸ் பண்ணுவோம்.

அவருக்குக் குளிர்ச்சியான இடங்கள், கூல்டிரிங்க்  பிடிக்காது. வீட்டுலகூட ஏசி போட்டுக்க மாட்டார். அப்படிப்பட்டவர் இப்ப நடிக்கிற படத்துக்காக ஜார்ஜியாவுல மைனஸ் ஒன் டிகிரி குளிர்ல டூப் போடாம ஆக்‌ஷன் சீக்வென்ஸ் பண்ணிட்டு வந்திருக்கார். அவருக்கு நீச்சல் வராது. ஆனா, அந்தப் படத்துல ஒரு அண்டர்வாட்டர் சீக்வென்ஸ். ஒருநாள் முழுக்க நீச்சல்குளத்துல பிராக்டிஸ் பண்ணிட்டு, 300 அடி ஆழத்துல ரோப் கட்டிக்கிட்டு டூப் போடாமல் இவரே அதில் நடிச்சார். தண்ணியிலிருந்து வெளியே வரும்போது பேன்ட், சட்டையெல்லாம் கிழிஞ்சு, கை-கால்கள்ல அவ்வளவு கீறல்கள். இப்படி ஏதாவது அடிபட்டுகிட்டே இருக்கும். ஆனா, எதையும் நிறுத்த மாட்டார். உடம்பை வெச்சுக்கிறதுலயும் இதே பிடிவாதத்தோடு இருப்பார்.

நானும் தங்கச்சியும் ‘ஒருநாள்தானே, இன்னிக்கு ஜிம்முக்குப் போகலைன்னா நாளைக்குப் போவோம்’னு ஈஸியா எடுத்துப்போம். ஆனா, அப்பா அப்படி இல்லை. ஒருநாள் தவறாமல் ஜிம்முக்குப் போவார். காலையில பண்ண முடியலைனா மிட்நைட் வந்து பண்ணிடுவாரே தவிர, அதை ஸ்கிப் பண்ண மாட்டார். இந்த வயசுலயும் எவ்வளவு ஃபிட்டா இருக்கார் பாருங்க. படிப்பு, நடிப்பு ரெண்டிலும் அவர்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்.’’

‘‘அம்மா ஜீவிதா என்ன சொல்றாங்க. அவங்க எப்படி உங்களை வழிநடத்துறாங்க?’’

‘‘ஸ்வீட் ஹார்ட். எங்களுக்கு எல்லாம் அவங்கதான். இப்ப அப்பா பண்ணிட்டிருக்கிற படத்தோட பட்ஜெட் 25 கோடி. அந்தப் படத்துக்கு அம்மாதான் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர். எல்லாத்தையும் அவங்கதான் கோஆர்டினேட் பண்றாங்க. வீட்டையும் பார்த்துட்டு சினிமாவையும் கவனிச்சுட்டு பரபரப்பா இருக்கும் வொண்டர் வுமன் என் அம்மா!’’

‘‘தங்கச்சிக்கு சினிமா ஐடியா இருக்கா?’’

‘‘என்னைவிட அதிகமாவே இருக்கு. அவங்களும் மெடிசின்தான் படிக்கப்போறாங்க. அவங்க அத்தலெட் மற்றும் பாக்ஸிங் பெர்சன். உடம்பை ஸ்ட்ராங்கா வெச்சிருப்பாங்க. அவங்களுக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும். டெக்னாலஜியில் அப்டேட்டா இருப்பாங்க. அவங்களை ஃபீமேல் ஹீரோன்னு சொல்லலாம்.’’

‘‘அப்பா-அம்மா நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?’’

‘‘ ‘அண்ணா’. அப்பா, கவுதமி, ரோஜா நடிச்ச படம். என் சின்ன வயசுல பார்த்தது. வில்லேஜ் சென்டிமென்ட் கதை. நம்மை அழ வெச்சுடும். ‘ஓம்காரம்’. உபேந்திரா சார் டைரக்ட் பண்ணின படம். அதுலயும் அப்பாவைப் பிடிக்கும். அம்மா-அப்பா சேர்ந்து நடிச்ச வேறொரு படம். நான் சின்னப்பொண்ணா இருந்தப்ப அம்மா மடியில் படுத்துக்கிட்டே அந்தப் படத்தைப் பார்த்தேனாம். அதில் அப்பாவை, அம்மா ஷூட் பண்ணிக் கொல்றது மாதிரியான காட்சி. அதைப் பார்த்துட்டு அம்மாவை ஓங்கி அறைஞ்சிட்டேனாம். இதை அம்மா இப்பகூட சொல்வாங்க. அம்மா நடிச்சதுல இப்ப பார்க்கும்போது அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.’’

‘‘சென்னைப் பக்கம் வருவீங்களா... சொந்த ஊர் தேனிக்குப் போயிருக்கீங்களா?’’

‘‘அப்பாவோட அப்பா-அம்மாவுக்கு ஆந்திரா சித்தூர் பக்கம்தான் சொந்த ஊர். அது ஆந்திராவும் தமிழ்நாடும் சேர்ந்திருந்த சமயம். அப்புறம் தேனி பக்கத்துல லெட்சுமிபுரம்னு ஒரு கிராமத்துல செட்டிலானாங்க. அது ஒரு தெலுங்கு வில்லேஜ். அப்பா அங்கேதான் பிறந்தார். பிறகு, எம்.பி.பி.எஸ் படிக்க சென்னை வந்தவர், சென்னையிலேயே செட்டிலாகிட்டார். இப்ப அப்பாவின் அம்மா-அப்பா, செல்வா சித்தப்பா, ரெண்டு அத்தைகள், அம்மாவின் உறவினர்கள்னு எல்லாரும் சென்னையில்தான் இருக்காங்க. எங்க இன்னொரு சித்தப்பாவும் நாங்களும்தான் ஹைதராபாத்ல இருக்கோம். சென்னை எங்களுக்கு ரெண்டாவது ஹோம்டவுன். அடிக்கடி போயிட்டு வருவோம்.’’

‘‘நல்லா தமிழ் பேசுறீங்களே. அங்கே தனியா தமிழ் படிக்கிறீங்களா?’’

‘‘அப்பா இன்னமும் தமிழ், இங்கிலீஷ் ரெண்டும் நல்லா பேசுவார். தெலுங்கும் பேசுவார். ஆனா, எழுதப் படிக்கத் தெரியாது. டயலாக்ஸைக்கூட ஒருத்தரைக் கூட வெச்சுக்கிட்டு தமிழ்லயோ, இங்கிலீஷ்லயோ எழுதித்தான் படிச்சு பிராக்டீஸ் பண்ணுவார். எனக்கும் தங்கச்சிக்கும் தமிழ் கத்துக்கொடுக்கணும்கிறதுக்காகவே அம்மாவும் அப்பாவும் வீட்டுல தமிழ்தான் பேசுவாங்க. அவங்க பேசுறதைக் கேட்டுக் கேட்டு சின்ன வயசுலேயே நாங்களும் தமிழ் பேச ஆரம்பிச்சுட்டோம்.’’

‘‘தமிழ்ல பிடிச்ச நடிகர், நடிகைகள் யார்?’’

‘‘தெலுங்குல பாட்டு, காமெடி, டான்ஸ், ஹீரோயிசம்னு கமர்ஷியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா, தமிழ்ல கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து சென்சிபிளா எடுக்கிறாங்க. அப்படி எனக்கு விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப் பிடிக்கும். சிவகார்த்திகேயனின் காமெடியும் பிடிக்கும். தனுஷ் பிடிச்ச நடிகர். ‘3’  படத்துல தனுஷைப் பார்த்துட்டு அரை மணி நேரத்துக்கும்மேல தியேட்டர்ல அழுதுட்டே இருந்தேன்.

இப்ப உள்ள ஹீரோயின்ஸ்ல சமந்தா, தமன்னா, ஸ்ருதிஹாசனைப் பிடிக்கும். இவர்களில் டான்ஸ், நடிப்புனு வெர்சடைலா பண்ற தமன்னா ரொம்பவே ஸ்பெஷல். நடிப்பில் நயன்தாரா பிடிக்கும். தெலுங்குல அப்பாவுக்கு அப்புறம்தான் மத்தவங்களைப் பிடிக்கும். அப்படி இயல்பா நடிக்கிற நானி பிடிக்கும். எனர்ஜெடிக் காமெடி, மேனரிசம், ஆட்டிடியூட்னு அல்லு அர்ஜுனோட டிரான்ஸ்ஃபர்மேஷன் பிடிக்கும்.’’

‘‘நடிப்பையும் படிப்பையும் எப்படி மேனேஜ் பண்ணுவீங்க?’’

‘‘அப்பா இவ்வளவு தூரம் பரபரப்பா நடிச்சுட்டிருந்தாலும் மெடிக்கல் பிராக்டிஸை இன்னும் விடலை. உறவினர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் அப்பாதான் இப்பவும் ஃபேமிலி டாக்டர். அலோபதி தவிர ஆயுர்வேதா, சித்தா, யுனானினு ஆல்டர்நேடிவ் மெடிசினும் பிராக்டிஸ் பண்றார். அவரைப்போலவே நானும் நல்ல ஸ்டூடன்ட். அனாடமியில் டிஃபக்‌ஷன் முக்கியமான பிராக்டிக்கல் க்ளாஸ். அதாவது மனித உடலை ஓப்பன் பண்ணி உறுப்புகளைப் பற்றி தெரிஞ்சுக்கிறது. அந்த பிராக்டிக்கல் க்ளாஸ்ல இருக்கவே சிலர் ஆரம்பத்துல பயப்படுவாங்க. ஆனா, என் பேட்ச்ல டிஃபக்‌ஷன் பண்ணின முதல் ஸ்டூடன்ட் நான்தான். பாடிக்குள்ள உள்ள கொழுப்பை நீக்கி, உள்ளே இருக்கிற உறுப்புகளைப் பார்த்துத் தெரிஞ்சுக்கணும். அதுக்கு நான் டீச்சர்ஸுக்கு உதவி பண்ணுவேன். இப்படி சப்ஜெக்ட்லயும் நான் ஆர்வமா இருப்பேன்.

‘டாக்டர் என்பவர் கடவுளுக்கு நிகரானவர். நோபல் புரொஃபஷன்’னு அப்பா அடிக்கடி சொல்வார். நான் நிச்சயமா இதை விட மாட்டேன். என் காலேஜ்ல மெடிசினை முதல் ரெண்டு வருஷங்கள் இடைவெளி விடாம தொடர்ந்து படிக்கணும். அடுத்த மூணு வருஷப் படிப்பை, சில வருஷங்கள் அவகாசம் எடுத்துக்கூட முடிக்கலாம். சினிமாவில் ஹீரோயினா ரொம்ப நாள் இருக்க முடியாது. 25 வயசுல சினிமாவுக்குள்ள வந்தேன்னா, அதிகபட்சம் 30 வயசு வரை ஹீரோயினா இருக்கலாம். மெடிக்கல் முடிச்ச பிறகு ஹீரோயினா ஆகலாம்னு காத்திருந்தா, தாமதமாகிடும். அதனாலதான் இப்பவே சினிமாவுக்குள் வர்றேன். மெடிக்கலையும் சினிமாவையும் நிச்சயம் மேனேஜ் பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.’’

அடுத்த கட்டுரைக்கு