Published:Updated:

“ ‘வெண்ணிலா கபடிகுழு’ ப்ளேயர்தான் இரண்டாம் பாக இயக்குநர்!” - நெகிழும் சுசீந்திரன் #VikatanExclusive

“ ‘வெண்ணிலா கபடிகுழு’ ப்ளேயர்தான் இரண்டாம் பாக இயக்குநர்!” - நெகிழும் சுசீந்திரன் #VikatanExclusive
“ ‘வெண்ணிலா கபடிகுழு’ ப்ளேயர்தான் இரண்டாம் பாக இயக்குநர்!” - நெகிழும் சுசீந்திரன் #VikatanExclusive

ன் படைப்பு கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும் சரி,  கதையம்சம் உள்ள சினிமாவாக இருந்தாலும் சரி... வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதிக்கு எதிராக சாட்டை வீசுவதில் இயக்குநர் சுசீந்திரன் கைதேர்ந்தவர். `வெண்ணிலா கபடிகுழு'வில் ஆரம்பித்த இவரது பயணம், தற்போதைய `அறம் செய்து பழகு' வரை தொய்வில்லாமல் தொடர்கிறது.

“ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் பெரிய இடைவெளி கொடுக்க மாட்டேங்குறீங்களே ஏன்?"

“அப்படி அமைஞ்சுடுது. 'வெண்ணிலா கபடிகுழு' எடுத்து முடிச்சதுமே, `நான் மகான் அல்ல' ஸ்க்ரிட்டுக்குப் போயிட்டேன். அந்தப் படம் முடியும்போதே `அழகர்சாமியின் குதிரை' பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதோ, இப்பகூட `அறம் செய்து பழகு' டப்பிங் வொர்க் முடியுறதுக்குள்ள அடுத்த படத்தோட பாதி ஷூட்டிங்கை முடிச்சுட்டேன். இப்போதைக்கு `இளமை ஊஞ்சலாடுகிறது'னு பெயர் வெச்சிருக்கேன். `கண் சிமிட்டும் நேரத்தில்'னு ஒரு தலைப்பும் பரிசீலனையில் இருக்கு. ஆனா, இந்தப் படத்துக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுக்கலாம்னு முடிவுபண்ணியிருக்கேன். ஏன்னா, சினிமா ரொம்பவே மாறிக்கிட்டிருக்கு. இந்த இடைவெளியில் இன்னும் நிறைய கத்துக்கிட்டு ஃப்ரெஷ்ஷா சினிமாவை அணுகலாம்ல?!''

“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் சமீபகாலப் பிரச்னைகளில் விஷாலின் செயல்பாடுகள் எப்படி?”

“ஒரு தயாரிப்பாளரா சொல்றேன், சமீபத்துல திருட்டு வி.சி.டி-க்கு எதிரா விஷால் எடுத்த முடிவு ஆரோக்கியமானது. அந்தப் போராட்டம் தள்ளிவெச்சதுக்குப் பின்னாடி நிறைய அரசியல் காரணங்கள் இருக்கு. ஏற்கெனவே சொன்னேனே, நல்லது பண்ணணும்னு நினைக்கிறவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கணும்னு நினைக்கிறவங்க இங்கே நிறையபேர் இருக்காங்க. ஏன்னா, இடைஞ்சல் பண்ணாதான் அவங்களுக்கு வருமானம். அதைப் பற்றிப் பேச வேணாம் பிரதர். சுருக்கமா சொல்றேன், விஷால் எடுக்கிற முயற்சிகள் வெற்றி அடைஞ்சா, தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்கும்னு நான் நம்புறேன்.

தவிர, ஹாலிவுட், பாலிவுட்ல எல்லாம் படம் ரிலீஸான சில காலத்துலேயே அந்தப் படத்தோட ஒரிஜினல் டிவிடி வந்துடுது. இங்கே இருக்கிற தியேட்டர் அதிபர்கள், `டிவிடி-யில் படத்தை விட்டா, தியேட்டருக்கு வருமானம் வராது'ங்கிறாங்க. ஆனா, எந்தப் படமும் தியேட்டரில மட்டுமே ஓடுறதில்லைங்கிறதுதானே நிஜம். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு. அதுக்குப் பின்னாடி அரசியல் இருக்கு. இன்றைய தேதியில் ஒரு தயாரிப்பாளருக்கு தன்னோட செலவுல 30 சதவிகித வருமானம்தான் கிடைக்குது. மீதி 70 சதவிகிதம் அந்தப் படத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஆள்களுக்குப் போகுது. இந்தச் சிக்கல்களையெல்லாம் கலையறதுக்கு சினிமா சங்கங்கள் மட்டுமில்ல, அரசும் கை கொடுக்கணும்!''

“ ‘வெண்ணிலா கபடிகுழு-2’ படத்துல என்ன ஸ்பெஷல்?”

“இந்தப் படமே எனக்கு ஸ்பெஷல்தான். என் சித்தப்பா, சினிமாவுல உதவி இயக்குநரா இருந்தவர். சிலபல முயற்சிகளுக்குப் பிறகு `புத்தம்புது பூவே'னு ஒரு படம் இயக்கினார். ராம்கி, கரண், வடிவேலுனு பலரும் நடிச்ச படம். ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அந்தப் படத்துக்கு மூணு, நாலு தயாரிப்பாளர்கள் மாறினாங்க. அவங்களுக்குள்ள நடந்த சிலபல பிரச்னைகளால், அந்தப் படம் ரிலீஸ் ஆகவே இல்லை.

ஒருத்தர் 40 வயசு வரைக்கும் இயக்குநர் ஆக முடியலைங்கிறதுக்குப் பின்னாடி இருக்கும் வலியும் வேதனையும் சித்தப்பா மூலமா எனக்குத் தெரியும். இருபது வருடங்களுக்கு முன்னாடி அடைய முடியாத அவரோட லட்சியத்தை, இந்தப் படம் மூலமா அவர் அடைஞ்சிருக்கார். யெஸ்... `வெண்ணிலா கபடிகுழு-2' படத்தோட இயக்குநர் செல்வசேகரன், என் சித்தப்பா. அவரோட `இயக்குநர்' கனவுக்கான வாசலைத் திறந்துவிட்டதுல எனக்கு சந்தோஷம். இது, நான் அவருக்குப் பண்ணவேண்டிய நன்றிக்கடனும்கூட!

தவிர, ஊர்ல இருந்த உண்மையான 'வெண்ணிலா கபடிகுழு' டீம்ல அவரும் ஒரு பிளேயர். அவர் சொன்ன கதையைக் கேட்டுதான் நான் `வெண்ணிலா கபடிகுழு' எடுத்தேன். இப்போ அவரே, இந்தப் படத்தை இயக்கினா இன்னும் யதார்த்தமா, நேர்த்தியா இருக்கும். விக்ராந்த், பசுபதி, கிஷோர், சூரி, அப்புக்குட்டி, யோகிபாபு, ரவிமரியானு பல நடிகர்கள் இருக்காங்க. இந்தப் படம் விக்ராந்த் கரியர்ல முக்கியமான இடத்தைப் பிடிக்கும்!''

இயக்குநர் சுசீந்திரனின் முழுமையான பேட்டியை இந்த இணைப்பில் படிக்கலாம்.