Published:Updated:

ரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்! #VikatanFun

விக்னேஷ் செ
ரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்! #VikatanFun
ரஜினி.. வைகோ.. சமுத்திரக்கனி... - விவேகம் 'சர்வைவா' பாடலுக்கு இவங்கதான் ரெஃபரென்ஸ்! #VikatanFun

அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' படத்தோட சிங்கிள் ஆடியோ ட்ராக் ரிலீஸ் ஆகியிருக்கு. அனிருத் இசையில் யோகி பி பாடின பாட்டுக்கு 'ஒரு கடையடைப்பு இல்ல... கல்வீச்சு இல்ல' மொமென்ட்டா வழக்கமா அக்குவேறு ஆணிவேரா பிடிச்சுப்போட்டு ஜாதகம் பார்க்குற ஆன்லைன் குறியீட்டு விமர்சகர்கள் யாரையும் காணோம். பாட்டுல யாரையெல்லாம் ரெஃபரென்ஸா எடுத்திருக்காங்கனு நம்ம பங்குக்கு நாமளாவது தூர்வாருவோம். 

வைகோ - சரித்திரம் புரட்டு...

'சரித்திரத்த ஒரு நிமிஷம் பாருங்க... அது நமக்குக் கத்துத் கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழணும்னா யார வேணாலும் எத்தனை பேர வேணும்னாலும் கொல்லலாம்'னு இதை அஜித் ரெஃபரென்ஸாகவும் எடுத்துக்கலாம். 'முதுகு எலும்பு சிதைந்திடும்...மை கேம் இஸ் பியாண்ட் பெயின்' னு அஜித்துக்கு பண்ணின ஆபரேஷன்களை அடிநாதமா வெச்சும் எழுதிருக்கலாம். அஜித் படத்தோட பாட்டுக்கு அஜித் ரெஃபரென்ஸையே எடுத்துக்கிட்டா அதுல என்ன என்டெர்டெயின்மென்ட் இருக்கப்போவுது... அதனால், இந்த இடத்துக்கு புரட்சிப்புயல்தான் பொருத்தமா இருப்பார். தனது ஒவ்வொரு பேச்சிலும் சரித்திரத்தைத் துணைக்கு அழைத்து வரலாற்றை மல்லாக்கப் படுக்கப்போட்டு சோவியத் யூனியனிலே, கிரேக்கத்திலே என ஃபாரின் ரெஃபரென்ஸ் எடுக்கும் வைகோவின் ரெஃபரென்ஸை இந்த வரிகளில் காணலாம். 

சமுத்திரக்கனி - பாடங்கள் கற்றதால்... 

பள்ளிக்கூடத்து டீச்சர்களைப் பார்த்துப் பயப்படுவதைவிட சமுத்திரக்கனியை டி.வி-யில் பார்த்தால்தான் குழந்தைகள் அலறுகிறார்களாம். 'முயன்றால்தான் சாத்தியம்' 'ஹோம் வொர்க் பண்ணனும்...', 'ஸ்லேட் குச்சியைத் தொலைக்கக்கூடாது...', என அட்வைஸ் மழையை அள்ளித்தெளித்து விடுகிறாராம். ஆள் பார்க்கவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் கெட்டப்பில் திரிவதால் பள்ளிக்கூட இன்ஸ்பெக்‌ஷனுக்கு வரும் சி.இ.ஓ எனவும் குழந்தைகளும், வாத்தியார்களும் மிரளுகிறார்களாம். ஆக, பாடம் எடுக்குற ரெஃபரென்ஸ் சமுத்திரக்கனி கொடுத்தது. 

ரஜினி - போர்க்களம் 

அரசியல் களத்தில் குடிபுகும் யோசனையில், பல வருடங்களாகப் படுக்கப்போட்டுப் பால் காய்ச்சிக்கொண்டிருந்த ரஜினி, இன்னமும் போர் வரும்வரை காத்திருப்போம்னு அதே தோசையைத் திருப்பித் திருப்பிப்போட்டுக் கருகவிட்டிருக்கார். 'போர்க்களம் ரெடியாகிடுச்சு... அச்சமின்றி தைரியமா...' களமாடத் தயாராகுங்கனு ரஜினிக்கு அனிருத் இசையிலேயே மோட்டிவேட் பண்ணியிருக்காங்க. 

கமல் - ஆண்டவன் Bless me higher... 

ரஜினியை மட்டும் சொல்லிட்டு ஆண்டவர் கமலைச் சொல்லலைன்னா எப்படி..? தமிழ் சினிமாவுக்கு பல புதிய டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய கமல்ஹாசனோட ரெஃபரென்ஸ் இல்லாம இருக்குமா..? 
"சரித்திரம் புரட்டு... 
போராட்டம் பல்லாயிரம்... 
தடைகள் வென்றவர் யார்...
சாமானியன் எல்லோரும்..!"
இதை அப்படியே கமல் போட்ட ட்வீட்னு நினைச்சு வாசிச்சுப் பாருங்க. ஆங்... அப்படியே பொருந்துதா அப்புறமென்ன உலகநாயகன் ரெஃபரென்ஸ்! 

டார்வின் - சர்வைவா

'Survival of the fittest' சார்லஸ் டார்வினின் வாக்கு. 'தகுந்தன தப்பிப் பிழைக்கும்' என்பதைத்தான் இந்த 'விவேகம்' 'சர்வைவா...' பாடலின் மூலம் உணர்த்த வருகிறதோ என்னவோ? இதுவும் அதேதான்.... 'நாம வாழணும்னா...'.  லேசா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆனாலும், 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா... இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?னு பாரதியார் பாடின பாட்டுவரிகள் ஞாபகம் வரும் வாய்ப்பு இருப்பதால் பாரதியாரையும் இந்த சிங்கிள் ட்ராக் பஞ்சாயத்தில் இழுத்துவிடுவோம். 

விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் - லாலாலா

பாடலுக்கு இடையிடையே எஸ்.ஏ.ராஜ்குமாரின் மோஸ்ட் ஃபேவரைட் வரிகளான 'லாலாலா...' வைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு காப்பிரைட் வாங்கப்பட்டதா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும். 'நாம மட்டும் வாழ்ந்தா போதும்'னு சொல்ல நினைக்கிற பாட்டுலேயே அப்பப்போ 'லாலாலா'னு நெஞ்சைத்தொடும் குடும்ப சென்ட்டிமென்ட் வரிகளை எல்லாம் இணைத்து விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ரெஃபரென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்போ இதுவும், குடும்பத்துக்காக எதிரிகளைப் பழிவாங்குற கதையா இருக்குமோ..? 

நீங்களும் 'விவேகம்' பாடல்வரிகளை நான்கு முறை கேட்டு இன்னும் யாரெல்லாம் ரெஃபரென்ஸாகப் பயன்பட்டிருக்கிறார்கள்னு கமென்ட்ல சொல்லலாமே...