Published:Updated:

“ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம்!” - ரஜினி சந்திப்பு பற்றி விவரிக்கிறார் கஸ்தூரி #VikatanExclusive

கே.ஜி.மணிகண்டன்
“ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம்!” - ரஜினி சந்திப்பு பற்றி விவரிக்கிறார் கஸ்தூரி #VikatanExclusive
“ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம்!” - ரஜினி சந்திப்பு பற்றி விவரிக்கிறார் கஸ்தூரி #VikatanExclusive

ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுத்தார், ரஜினிகாந்தைச் சந்தித்தார், மோடி மீதும் மத்திய அரசு மீதும் விமர்சனம் வைத்தார், ‘மாட்டுக்கறி சாப்பிடப் போராட்டம் நடத்தினால் ஹீரோவா?’ என மாணவர்கள் மீதும் திரும்பினார். ‘அரசியலுக்கு வருவேன்’ என்றவர், ‘பார்க்கலாம்’ எனவும் நழுவுகிறார். அவர் எதையும் பேசுவார், அவரிடம் எதைப் பற்றியும் பேசலாம்... அவர்தான் கஸ்தூரி.

“ரஜினியைச் சந்தித்தது குறித்து, ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’னு சொல்றீங்க. இது எல்லோரும் சொல்ற பதில்தான். சந்திப்பின் உண்மையான காரணம் என்ன?”

“ஏற்கெனவே ரஜினிகாந்தின் செயல்பாடுகளுக்கு விமர்சனம் பண்ணேன். என்னுடைய கருத்திலிருந்த வன்மையைப் பாராட்டுறதுக்காக போன் பண்ணிப் பேசினார். நேரில் சந்திச்சா நிறைய விஷயங்களைப் பேசலாம். என்னுடைய கேள்விகளையெல்லாம் நேரடியாகவே கேட்கலாம்னு என் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெறுவதற்காகப் போனேன். ‘உன் இன்டர்வியூஸ் எல்லாம் பார்த்தேன். உன் கருத்துகளையெல்லாம் படிச்சேன். ஐ'யம் இம்ப்ரஸ்'னு சொன்னார் ரஜினி. சும்மா சொல்றார்னு நினைச்சேன். ஆனா, எங்கெங்க என்னென்ன பேசினேன்னு அவர் குறிப்பிட்டுச் சொல்ல ஆரம்பிச்சப்போ, அசந்துட்டேன். என் துணிச்சலைப் பாராட்டிப் பேசினார்.”

“ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்த விவாதத்தில் பல ஆளுமைகளோடு நீங்களும் கலந்துக்கிட்டீங்க. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்துப் பேசியவர்கள் மீது அவரின் ரசிகர்கள் காட்டிய எதிர்வினைகள் சரியா?"

ரஜினியை நேரடியா எதிர்க்கிறவங்களைவிட, வரம்பு மீறும்... இல்லை, வரம்பு என்னன்னுகூடத் தெரியாத சில ரஜினி ரசிகர்கள்தான் அவருக்குப் பெரிய சவால். நடந்து முடிந்த விவாதத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் அதுக்குச் சிறந்த உதாரணம். அந்த நிகழ்வுல நான் தெரிஞ்சுக்கிட்டது ஒண்ணுதான், ரஜினியுடைய மிகப்பெரிய பலமும் அவருடைய மிகப்பெரிய பலவீனமும் அவரோட ரசிகர்கள்தான்!''.

‘‘ரஜினிக்கு எதிர் கருத்து சொன்னப்போ விமர்சனம் பண்ணுண ரசிகர்கள், இந்த விவாதத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவா பேசினதுனால, பாராட்டுகள் குவிந்திருக்குமே?”

“ரெண்டு விஷயங்களை நான் பதிவுபண்றேன். சமீபத்துல ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்தப்போ நான் அவருக்கு எதிரா ட்விட் பண்ணேன். அதுக்குத்தான் எதிர்வினைகள் வந்தது. பிறகு, என் நிலைப்பாட்டை பல பேட்டிகள் மூலமா தெளிவுபடுத்தினேன். தவிர, `மக்கள் மன்றம்' நிகழ்ச்சியில `ரஜினி அரசியலுக்கு வருவது எதார்த்தமே - எதிர்க்கவேண்டியதே!' இதுதான் தலைப்பு. ரஜினியோட ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனிக்கிற ஆள்கள்ல நானும் ஒருத்தி. ரஜினி என்ன பண்ணாலும் அதை முழு மனசோடு வரவேற்கிற, அவரோட தீவிரமான ரசிகர்கள் ஒருபக்கம் இருக்காங்க. அதே சமயம், அவருடைய நிலைப்பாடுகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் சரியான புரிதல் இல்லாம நிறைய கேள்விகளோடு காத்துக்கிட்டிருக்கிற ரசிகர்கள் மறுபக்கம் இருக்காங்க. பலரும் ரெண்டாவது வகையைச் சேர்ந்தவங்கதான். நான் உள்பட!

இதனால்தான், அவரைச் சந்திச்சப்போ என் மனசுல இருந்த அத்தனை கேள்விகளையும் கேட்டேன். தவிர, நான் அவருடைய தீவிர எதிர்ப்பாளரா இருந்ததுமில்லை; ஆதரவாளரா காட்டிக்கிட்டதுமில்லை. ஆனா, அவர் அரசியலுக்கு வரப்போறது நிதர்சனம். அதை என்கிட்ட அவர் சொன்னார். அவர் அரசியலுக்கு வர்றதை நானும் மனப்பூர்வமா வரவேற்கிறேன். அதனால்தான், அவர் அரசியலுக்கு வரப்போற எதார்த்தத்தை நான் பேசினேன். இதுக்கு ரசிகர்கள்கிட்ட இருந்து எதிர்ப்பு வராது, ஆதரவுதான் கிடைக்கும். ஆனா, கைத்தட்டல் கிடைக்குதேனு நான் என்னுடைய நடுநிலையை என்னிக்கும் விட்டுட மாட்டேன். ரஜினியின் உண்மையான ரசிகை நான். மனசுல பட்டதை முகத்துக்கு நேரா கேட்பேன்.''

“பா.ஜ.க-வில் நீங்க இணையவிருப்பதான தகவலுக்கு உங்க பதில்?"

“நான் தமிழ் வெறியை. இது எல்லோருக்கும் தெரியும். கட்சிப்பாகுபாடு இல்லாம என் கருத்துகளைச் சொல்றேன். பல விஷயங்கள்ல மத்திய அரசின் ஆட்சித் திமிரையும் இந்தித் திணிப்பையும் நான் விமர்சிக்காத நேரமே இல்லை. மாட்டிறைச்சிக்குத் தடை பண்ணப்போ, `மாட்டிறைச்சித் திருவிழா' நடத்திய மாணவர்களுக்கு எதிரா கருத்து சொன்னேன். அதே சமயம், மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகவும் கருத்து சொன்னேன். இந்த ஒரு விஷயத்தால் நான் பா.ஜ.க ஆதரவாளர் ஆகிட்டேனா என்ன? மாணவர்களுக்கு எதிரா நான் கருத்து சொன்னது, `மாணவர்கள் மாணவர்களாக இருக்கணும்'கிற காரணத்துக்காக மட்டும்தான்!''

``வேறு கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்ததா?"

``ட்விட்டர்ல நான் தீவிரமா இயங்க ஆரம்பிச்ச பிறகு, எந்தக் கட்சியிடமிருந்தும் அழைப்பு வரலை. ஆனா, அதுக்கு முன்னாடி வந்தது உண்மை. எல்லோரையும் ட்விட்டர்ல திட்டுறதால கூப்பிட மாட்டேங்கிறாங்கனு நினைக்கிறேன்.''

“அரசியலுக்கு வர்ற ஐடியா இல்லை... அப்படித்தானே?"

“நான் ரொம்ப வாயாடி. எனக்கு அரசியல் செட் ஆகுமானு தெரியலை. தவிர, ரொம்ப ரோசக்காரியும்கூட. பார்க்கலாம்... ஆனா, அரசியல்ல எனக்குப் பிடிச்ச ஆளுமை ஸ்டாலின். ஜால்ரா தட்டுறதுக்காகச் சொல்லலை. சின்ன வயசுல இருந்து அவரோட நடவடிக்கைகளைப் பார்த்துக்கிட்டிருக்கேன். ரொம்ப எளிமையா இருக்கார். அவர் சென்னை மேயரா இருந்த சமயத்துல, நான் பீச்சுக்கு வாக்கிங் போவேன். ஃபாரின் பீச்சுல வாக்கிங் போய்க்கிட்டிருக்கிற மாதிரி ஒரு ஃபீல். அவ்வளவு தூய்மையா இருந்தது. தவிர, ஒவ்வொரு பெரிய கட்டடங்களுக்குப் பக்கத்துலேயும் ஒரு பார்க் வைக்கணும்னு இருந்த ரூலை, கட்டாயம்  ஃபாலோ பண்ணவெச்சார். 

என் அங்கிள் வீடு, கனிமொழி வீட்டுக்குப் பக்கத்துல இருக்கு. என் வீடு போயஸ் கார்டன்ல இருந்தது. போயஸ் கார்டன் வீட்டுல இருந்து வெளியே கிளம்பணும்னா வாசலுக்கு வெளியே தலையை நீட்டி, `சைரன் வண்டி எதுவும் வருதா?'னு ஒரு பதற்றத்துலேயே பார்த்துட்டு வரணும். ஆனா, கனிமொழி வீட்டுக்கு ஸ்டாலின் அடிக்கடி வருவார். அவர் வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. அவங்கதான் அப்போ ஆட்சியில் இருந்தாங்க. எளிமையாவே இருந்தார். இன்னிக்கு வரைக்கும் அதே எளிமையைக் கடைப்பிடிக்கிறார். ஸ்டாலினோட `சிம்ப்ளிசிட்டி' எனக்குப் பிடிச்சிருக்கு. தவிர, பிருந்தாகாரத், ஜெயந்தி நடராஜன், நடராஜ் உள்ளிட்ட சில தலைவர்களும் எனக்குப் பிடிச்சவங்க!''

“கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லோருமே `சிம்ப்ளிசிட்டி'க்கு உதாரணம்தானே?"

“அவங்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை டெல்லிக்குப் போயிருந்த சமயம் நல்லகண்ணு ஐயாவைப் பார்த்த உடனேயே அவர்கிட்ட போய்ப் பேசி, `அரசியல்ல நான் உங்களோட தீவிர ரசிகை'னு சொல்லி போட்டோ எடுத்துக்கிட்டேன். அவர் மட்டுமில்ல, எல்லா கம்யூனிஸ்ட் தலைவர்களும் ரொம்ப எளிமையானவர்கள். `நிறைகுடம் தளும்பாது'ங்கிற பழமொழிக்குச் சிறந்த உதாரணம் அவர்கள். கம்யூனிசச் சித்தாந்தத்தை என்னால் வரவேற்க முடியாதுன்னாலும், அவங்கதான் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியா இருக்காங்க.''

“ட்விட்டர்ல நீங்க பண்ற பதிவுகளுக்கு நிறைய விமர்சனங்கள் வருதே... ஏன் இப்படி?"

“நான் ரொம்ப ஜாலியா, என் பேச்சுல நக்கல், நையாண்டி நிறைய இருக்கணும்னு நினைக்கிறேன். மத்தவங்களைக் கிண்டல் பண்றதோடு, என்னை நானே கிண்டல் பண்ணிக்கிறேன். இதுல என்ன தப்பு இருக்கு? `லட்சுமி மிட்டலுக்கும் எனக்கு ஒரு லிங்க் இருக்கு அது என்னனு சொல்லுங்க?'னு ஜாலி ட்விட் பண்ணேன். ஆக்சுவலா, அவருக்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள். அதைத்தான் கொஞ்சம் ஜாலியா சொன்னேன்.''

“கடந்த சில மாதங்களாதான் கருத்து சொல்லக் கிளம்பியிருக்கீங்க. இவ்ளோ நாள் இல்லாம, திடீர்னு ஏன்?”

“அதுக்கு முன்னாடி நான் இந்த ஊர்ல இல்லை. என் பொண்ணோட உயிரை மீட்டு எடுக்கிறதுல கவனமா இருந்தேன். காப்பாத்திட்டேன். அதுவரை எனக்கு நேரமே இல்லை. இப்போ நேரமும் காலமும் கிடைச்சிருக்கு பண்றேன்... அவ்வளவுதான்!''