Published:Updated:

"வனமகன் படத்தை நெட்ல போடுறவங்களுக்கு ஒரு கோரிக்கை!'' - ஜெயம் ரவி

"வனமகன் படத்தை நெட்ல போடுறவங்களுக்கு ஒரு கோரிக்கை!'' - ஜெயம் ரவி
"வனமகன் படத்தை நெட்ல போடுறவங்களுக்கு ஒரு கோரிக்கை!'' - ஜெயம் ரவி

"வனமகன் படத்தை நெட்ல போடுறவங்களுக்கு ஒரு கோரிக்கை!'' - ஜெயம் ரவி

யக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், வருண், தம்பிராமையா எனப் பலர் நடித்திருக்கும் படம் `வனமகன்'. இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி ரிலீஸ். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஒவ்வொரு பிரபலமும் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் என படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

``நாங்க எல்லாரும் ஒரே ஃபேமிலியா இருந்து பண்ணின படம் இது. ஷூட் முடிஞ்சு கடைசி நாள் கிளம்பும்போது எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டோம். ஷூட் அப்போ எங்க யார் மொபைல்லயும் சிக்னல் கிடையாது. அந்தக் காட்டுக்குள்ள ஒருத்தர் முகத்தை ஒருத்தர்தான் பார்த்துக்கிட்டோம். இயற்கையோடு நாம எப்படி சேர்ந்திருக்கணும்கிறது பற்றிதான் விஜய் இந்தப் படத்துல சொல்லியிருக்கார். படத்துல ஃபைட்டர்ஸைவிட அதிகம் கஷ்டப்பட்டது ஜெயம் ரவி சார்தான். `நான் அசிஸ்டென்டா இருந்த காலத்திலிருந்து இப்ப வரை என்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறீங்க. உங்களை போட்டுத் தொவை தொவைனு தொவைச்சுட்டிருக்கேன்'னு அடிக்கடி அவர்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். படத்தில் மரம் ஏறும் சீனை எல்லாம் ட்ரெய்லர்ல பார்த்திருப்பீங்க. சட்டை எதுவும் போடாததுனால, ரோப் போட்டு சப்போர்ட் கொடுக்க முடியலை. அது எல்லாம் பிராக்டிஸ் பண்ணி ஏறினதுதான். அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார் ஜெயம் ரவி" எனக் கூறி அமர்ந்தார் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா.

``இந்தப் படத்தில் எல்லாரும் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து வேலை செஞ்சாங்கனு சொன்னாங்க. நானும் நிறைய விஷயம் கேள்விப்பட்டேன். ஆனா, இந்தப் படத்தில் எந்த ரிஸ்க்குமே எடுக்காம வேலைபார்த்த ஒரே ஆள் நான்தான்னு நினைக்கிறேன். படத்துடைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ஏசி ரூம்ல உட்கார்ந்து ஜாலியா பாட்டு எழுதிக் கொடுத்துட்டேன். ஆனா, அந்தப் பாடலை 12 மணி நேரம் டிராவல் பண்ணி எடுத்துட்டு வருவாங்க. `மனிதன் யார்?'னு ஒரு முக்கியமான கேள்வியை ஆதாரமா வெச்சு எடுக்கப்பட்ட படம்தான் `வனமகன்'. நாம எப்படி இருந்தோம், எவ்வளவு நல்ல உணவுமுறைகளைக் கடைப்பிடிச்சோம், எவ்வளவு நல்ல உறவுகளோடு உறவாடினோம், தொழிநுட்பமே இல்லாம மனிதர்கள் எவ்வளவு நெருக்கமா இருந்தாங்க. அப்படி இருந்த நாம, எப்படி மாறினோம்னு காட்டும் படம்தான் `வனமகன்'. ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவர் இப்படி வித்தியாசமான படங்கள் தேர்வுசெய்யறதால்தான் என்னால் வித்தியாசமான பாடல்களைக் கொடுக்க முடியுது. ஸோம்பியா நடிக்க மாட்டேன்னு முடிவு எடுத்திருந்தா, `மிருதா... மிருதா...' மாதிரியான பாடலை என்னால் எழுதியிருக்கவே முடியாது. விஜய் அவர்களுக்கும் மற்றும் படத்தில் வேலைபார்த்த எல்லா கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

`` `வனமகன்' மற்ற படங்களிலிருந்து மாறுபட்ட படம்னு சொல்வேன். ஏன்னா, மனித உழைப்பை அதிகமாகத் தின்ற படம். `மைனா', `கழுகு', `கும்கி'னு வரிசையா நடிச்சதால `பள்ளத்தாக்குப் படமா, கூப்பிடுங்கடா தம்பிராமையாவை'னு ஒரு பத்திரிகையிலகூட எழுதியிருந்தாங்க. அதிலிருந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்த `வனமகன்' நடிச்சிருக்கேன். குளத்துநீரைவிட, ஆற்றுநீரைவிட, கங்கைநீரைவிடப் புனிதமானது மழைநீர். `வனமகன்' படத்தின் குணம் ஒரு மழைநீரைப்போல பரிசுத்தமானது. வழக்கமா காட்டில் வாழக்கூடிய மக்களைப் பற்றி நாம் கேட்டு வளர்ந்த கருத்துகளை மாற்றியமைக்கும்படி இந்தப் படம் இருக்கும். ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் என சினிமாவில் 24 துறைகள் இருக்கின்றன என்றால், அத்தனை துறைகளும் ஒன்று சேர்ந்து உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோயின் சாயிஷா பழம்பெரும் நடிகர் திலீப் குமார் அவர்களின் மகள்வழிப் பேத்தி. மிக அழகாக நடித்திருக்கிறார். ட்ரெய்லரில் நான் அவரை `மேடம் பாப்பா' என அழைப்பது பற்றிக் கேட்கிறார்கள். கதைப்படி, அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இருக்க மாட்டார்கள். அவரை நான் வளர்ப்பதால் பாப்பா, அதே நேரம் நான் அந்தக் குடும்பத்துக்காக வேலை செய்வதால் மேடம். அதனால்தான் இந்த `மேடம் பாப்பா'. படம் வெளிவந்த பிறகு இதை வைத்து மீம் க்ரியேட்டர்ஸ் நிறைய மீம் போடுவாங்கனு நினைக்கிறேன். `தனி ஒருவன்' படத்தில் நடிக்கும்போது, ஜெயம் ரவிகூட நடிக்கும்படி ஒரு காட்சியும் அமையவில்லை என நினைத்தேன். அப்படி எடுத்த ஒரே ஒரு காட்சியும் படத்தின் தன்மை காரணமாக நீக்கவேண்டியதாகிவிட்டது. `தனி ஒருவனி'ல் விட்டதை `வனமகனி'ல் பிடித்துவிட்டேன். மிகுந்த மகிழ்ச்சி'' என்று தன் ஸ்டைலில் படபடவெனப் பேசி அமர்ந்தார் தம்பிராமையா. 

``ரெண்டு விதமான படங்கள் இருக்கு. நான் ஒரு பெரிய நடிகன். நான் நடிச்சா மக்கள் நிச்சயமா வந்து பார்ப்பாங்கனு நடிக்கிறது ஒண்ணு. நான் எடுத்துக்கொண்ட கதையை சின்ஸியராக நடிப்பேன் என நடிப்பது ரெண்டாவது. அந்த வகையில் ஜெயம் ரவி சின்ஸியரான நடிகர். படத்தின் ஸ்க்ரிப்டை என்கிட்ட விஜய் கொடுத்தபோது, `என்ன சார், ரவிக்கும் அவங்க ஆள்களுக்கும் டயலாக்கே இல்லை. இது பிரச்னை ஆகும்போல'னு சொன்னேன். `நான் விஷுவலா காமிக்கும்போது சரியா இருக்கும்'னு சொன்னார். அதுபோல படம் பார்த்ததும் எனக்கு விஜய் சொன்னது சரின்னு தோணுச்சு. நீங்க படம் பார்க்கும்போது `இந்த இடத்துல வசனம் இருந்திருந்தால் நல்லாயிருக்குமே!'னு உங்களுக்குத் தோணவே தோணாது. ஜெயம் ரவி பேசுவார். ஆனா, அவங்க மக்களுடைய மொழியைப் பேசுவார். அந்தக் காட்சிகள் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்துக்கு என்ன பட்ஜெட் செலவு பண்ணா கட்டுபடி ஆகும்னு நான் ஒரு லிஸ்ட் போட்டு விஜய்கிட்ட கொடுத்தேன். ஆனா, கூடுதலா செலவு பண்ணவேண்டி வந்தப்போகூட தன் சொந்த பணத்தை எடுத்து செலவுபண்ணி படத்துடைய குவாலிட்டிதான் முக்கியம்னு நின்னார். அந்த உழைப்பு வீண்போகாது. படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்றார் தனஞ்செயன்.

``காலையிலதான் முழுப்படத்தையும் பார்த்தேன். என்ன நினைச்சு எடுத்தேனோ அப்படியே வந்திருக்கு. ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்துக்கு முக்கியக் காரணமான ரவியும் படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாருடைய உழைப்பும் மிகப்பெரியது. இந்தப் படத்தின் பெரிய சாதனையா நான் நினைக்கிறது, சில்வா மாஸ்டரின் ஒரு மாத கால்ஷீட்டை வாங்கினதுதான். ஏன்னா, காலையில ஒண்ணு, சாயங்காலம் ஒண்ணுன்னு ஷிஃப்ட் போட்டு படங்கள் பண்ணிட்டிருக்கார். அவர் ஒரு மாசம் முழுக்க எங்களோடு இருந்து படத்தின் சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொடுத்தார். முதல்முறையா கார்க்கி-ஹாரீஸ் கூட்டணியோடு இணைஞ்சிருக்கேன். நானே `ஓகே நல்லா இருக்கு!'னு சொன்னாலும் விடாம மெனக்கெடல் போட்டு சிறந்த பாடல்களைக் கொண்டுவந்திருக்காங்க. அதுக்கு பெரிய நன்றி.

இந்த இடத்தில எல்லா விநியோகஸ்தர்களுக்கும்  ஒரு கோரிக்கை வைக்க விரும்புறேன். ஒரு படத்தை அவங்க கன்டென்ட்படி பார்க்காம, வேற மாதிரி பார்க்கிறாங்க. மினிமம் கியாரன்டி படத்தை வாங்கக் கூடாதுனு ரூல்ஸ் போட்டிருக்காங்க. விநியோகஸ்தர்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு `பாகுபலி'யோ, ஒரு `சங்கமித்ரா'வோ உருவாகும். நான் ஒரு இயக்குநர், தயாரிப்பாளரா மாறியது விபத்துனுதான் சொல்லணும். இதுக்கு முன்னால் இந்தப் பிரச்னையைச் சந்திச்சது கிடையாது. புது அனுபவமா இருந்தது. இந்த விஷயங்களால் படத்தை நாங்களே விநியோகம் செய்யும்படி ஆகிடுச்சு. தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்கணும். ஒரு படத்தோட பட்ஜெட்டை, அதனுடைய கதைதான் நிர்ணயிக்கும். அதைத்தான் நீங்க பார்க்கணுமே தவிர, இந்தப் படத்துக்கு இவ்ளோதான் தர முடியும்னு பார்க்காதீங்கன்னு ஒரு கோரிகையை அன்போடு வைக்கிறேன்" எனப் பேச்சை சீரியஸாகத் தொடங்கி சீரியஸாகவே முடித்தார் இயக்குநர் விஜய்.

``சந்தோஷம்கிறதைத் தாண்டி பெருமையா இருக்கு, இப்படி ஒரு படம் நடிச்சதுக்கு. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணணும்னு ரொம்ப நாளா நினைச்சோம். ஆனா, அது பல காரணங்களால் முடியலை. அப்போ ஒருமுறை இந்தக் கதையை என்கிட்ட சொன்னார். `இதை ஏன் இவ்ளோ நாளா சொல்லலை?'னு கேட்டேன். `அது நீங்க நினைக்கிற மாதிரி சுலபம் இல்லை. ரொம்ப டஃப்பான படம்'னு சொன்னார். நாம பார்க்காததானு நினைச்சேன். ஆனா, படம் முடிச்சதுக்குப் பிறகுதான் அது எவ்ளோ டஃப்னு புரிஞ்சது. `நான் மட்டும்தான் இந்தப் படத்துல கஷ்டப்படாம வேலை செஞ்சிருக்கேன்'னு மதன் கார்க்கி சொன்னார். அதை நான் மறுக்கிறேன். அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பார்த்தீங்கனா அது புரியும். எப்பவும் என்னுடைய படத்துல நடிக்கும் நடிகைகள், விஜய் இயக்கத்தில் நடிக்கும் நடிகைகள் எல்லாரும் டாஃப்க்கு வந்திருவாங்கனு ஒரு ராசி இருக்குனு சொல்வாங்க. அது சாயிஷாவுக்கும் அமையும். ரொம்ப திறமையான நடிகை. படத்தின் விநியோகச் சிக்கல்கள் பற்றி விஜய் சொன்னார். கவலையேபடாதீங்க பிரதர், நீங்க போட்ட பணத்தைவிட பெரிய கலெக்‌ஷன் வரும். அப்படி ஒருவேளை வரலைன்னா, அடுத்த படம் பணமே வாங்காம நான் உங்களுக்கு நடிக்கிறேன்'' என்று ஜெயம் ரவி சொன்னதும் கைதட்டல்கள் அரங்கை அதிரவைத்தன. ``வேணும்னா இப்படிகூட பண்ணிக்கலாம், படத்தைத் தயாரிச்சுட்டு லாபத்தை ஷேர் பண்ணிக்கலாம். நமக்கும் வண்டி ஓடணும்ல" எனச் சொல்ல, மொத்தக் கூட்டமும் சிரிப்பலையில் மூழ்கியது.

``என் அப்பாவுக்கு அடுத்து பெரிய பட்ஜெட்ல என்னை நடிக்கவெச்சது விஜய்தான். அதனால, என் அப்பாவுக்கு அடுத்தபடியா நான் விஜய்யைப் பார்க்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிச் சொல்லணும். இதை நான் ஒரு ரிக்வெஸ்ட்டா கேட்கிறேன். சின்சியரா ஒரு படம் எடுத்திருக்கோம். யார் வேணும்னாலும் இதை நெட்ல போட்டுக்கோங்க. ஆனா, நீ உண்மையிலேயே ஒரு தமிழனா இருந்தால் நெட்ல போடாத! இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்று கூறி முடித்துவிட்டு தன் இருப்பிடம் நோக்கி ஜெயம் ரவி நகர, 

``இருங்க... எங்கே போறீங்க?'' என தம்பிராமையாவை அழைத்து சர்ப்பிரைஸாக கேக் வெட்டி, அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தது படக்குழு. 

அடுத்த கட்டுரைக்கு