Published:Updated:

`தமிழ் திரையுலகம் என்னால் பெருமைப்படணும்!’ - வி.ஜே ஆதவன்

`தமிழ் திரையுலகம் என்னால் பெருமைப்படணும்!’ -  வி.ஜே ஆதவன்
`தமிழ் திரையுலகம் என்னால் பெருமைப்படணும்!’ - வி.ஜே ஆதவன்

`கொஞ்சம் நடிங்க பாஸ்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆதவன். தனியார் தொலைக்காட்சியில் கலகலப்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர், தற்போது `காமெடி ஜங்ஷன்', `நட்சத்திரக் கபடி', `சூப்பர் சேலெஞ்ச்' போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். பிஸியாக இருந்த அவரை, ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்.

``நீங்க யாரு... உங்களுக்கு மீடியா வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?''

``என்னோட சொந்த ஊர் தஞ்சாவூர். படிச்சது எல்லாமே சென்னைதான். படிப்பு முடிஞ்சதும் சென்னையிலேயே ஒரு ஐடி கம்பெனியில் வேலைபார்த்தேன். அப்போ சும்மா ஒரு நிகழ்ச்சியில் மிமிக்கிரி பண்ணேன். அதைப் பார்த்துட்டு 2007-ல ரேடியோ மிர்ச்சியில் வேலைக்குக் கூப்பிடாங்க. அப்படித்தான் மீடியாவுக்குள் நுழைஞ்சேன். அப்புறம் 2008-ல `கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். இப்படித்தான் மீடியாவுல என்னோட பயணம் ஆரம்பிச்சது.''

`` `கொஞ்சம் நடிங்க பாஸ்' சீஸன் 2 ஐடியா இருக்கா?''

``நிச்சயமா இருக்கு. ஆதவனுடைய பெயர் மக்கள் மனசுல நின்னதுக்குக் காரணமே அந்த நிகழ்ச்சிதானே! எனக்கு சினிமானா ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் இந்த நிகழ்ச்சியை விருப்பப்பட்டு செய்றேன். `எப்படிப் போனோமோ அப்படியே திரும்பி வருவோம்'னு மக்கள்கிட்ட சொல்லுங்க".

``ஸ்மூல்ல பாடுற அனுபவம்..?''

``பாட்டு பாடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்மூல்ல டாப் ரேட்டிங்ல என்னோட பாட்டு இருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப  சந்தோஷமா இருக்கு. நான்  இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை மட்டும்தான் கேட்டு வளர்ந்திருக்கேன். பாடகர் ஆகணும்னும் மனசுக்குள்ள ஆசை இருக்கு... பார்ப்போம்!''

``வெள்ளித்திரையில் உங்க நடிப்பு எப்படி?''

``எந்த கேரக்டருல நடிச்சாலும் பெஸ்ட்டா நடிக்கணும். அந்த நடிப்பு ஒருசிலருக்குப் பிடிக்கலைன்னாலும், நிறைய பேர் விரும்புறாங்க. நான் படபடனு பேசுவேன். அதனால சின்னத்திரை எனக்கு செட் ஆகாதுனு அதை முயற்சி பண்ணலை. இப்போ வெள்ளித்திரைக்குக் கொஞ்சம் பிரேக் விட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதுல பிஸியா இருக்கேன்.''

``உதவி இயக்குநரா இருந்தீங்களாமே?''

``ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய `3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உதவி இயக்குநரா அறிமுகமானேன். சகலத்தையும் கத்துக்கணும் பாஸ். சினிமா இயக்கணும்னு ஒரு ஆசையும் இருக்கு. அதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன்.''

``மறக்க முடியாத பாராட்டு?''

``ஒருநாள் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திச்சு, என்னை அறிமுகப்படுத்தினேன். `தெரியுமே, `கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சியில கலக்கிட்டிருக்கிற ஆதவன்தானே! அருமையா பண்றீங்க'னு சிரிச்சுட்டே சொன்னார். எளிமையான, எனக்குப் பிடித்த ரஜினிகாந்திடமிருந்து இப்படி ஒரு பாராட்டு வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுதான் என் வாழ்நாளின் மிகப்பெரிய பாராட்டு.''

``நீங்க அரசியலுக்கு வந்தால், ரஜினியுடன் சேர்ந்து பணிபுரிவீர்களா?''

``அது கடவுளுக்குத்தான் தெரியும். எல்லாத்துக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும். ரஜினி சார் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அவருடைய ரசிகனா, நானும் அவரோட அரசியல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கேன்.''

``உங்க எதிர்கால திட்டம் என்ன?''

`` இத்தனையும் கத்துக்கிறது, நடிக்கிறது, உதவி இயக்குநரா இருந்தது, இப்போ டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறது எல்லாமே, `ஆதவன்னு ஒருத்தன் இருந்தான்'னு வரலாற்றுல பதியணும்கிறதுக்காகத்தான். தமிழ் திரையுலகில் நானும் இருக்கேன் சொல்லிக்கிறதுல ரொம்பப் பெருமையா இருக்கு. அதே சமயம் என்னாலயும் தமிழ் திரையுலகம் பெருமைப்படணும். அதுக்கான முயற்சிகள்தான் இப்போ நான் செய்றது எல்லாமே!''

படம்:ப.பிரியங்கா