Published:Updated:

கேமராமேனை அறைந்த புது டைரக்டர்...! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 10

கேமராமேனை அறைந்த புது டைரக்டர்...! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 10
கேமராமேனை அறைந்த புது டைரக்டர்...! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 10

'புதுப் படத்தில் பணியாற்ற நடிகர்கள், உதவி இயக்குநர்கள் தேவை'ன்னு நோட்டீஸைப் பார்த்ததுமே பாலசந்தர்கிட்ட சான்ஸ் கிடைச்ச ரஜினிகாந்த் மாதிரி முகம் பளிச்னு பிரகாசமாகிறக் கூடாது. இந்த பேஷன்ட்களை எல்லாம் பார்த்துப் பக்குவமா அணுகணும் பாஸு. மஞ்சத்தண்ணியை வாளி நிறைய ரொப்பி வெச்சுக்கிட்டு ஆடுகளுக்காகக் காத்திருப்பாய்ங்க. அவிங்ககிட்ட அட்ரஸ் கேட்டுப் போறவிங்களையே டைரக்டர் ஆக்குறோம்னு சொல்லி விபூதி அடிக்கப் பார்ப்பாய்ங்க. நீங்க டைரக்டராவே ஆகணும்னு போனா... அவிங்களுக்கு அன்னிக்கு யாவாரம் அமோகம்தான். 

அப்படித்தான் நம்மாளு ஒரு படத்துல உதவி இயக்குநரா சேரலாம்னு போனாப்ள. பார்க்கவே தேசிய விருது வாங்குன டைரக்டர் லுக்குல இருந்திருக்கார் அந்தப் படத்தோட இயக்குநர். வாய்ப்புக் கேட்டுப் போனவர்கிட்ட, கத்திரிச்செடிக்கு மருந்தடிக்கிற மாதிரி மொத்த வித்தையையும் வாயாலேயே தெளிச்சிருக்கார்.  'தம்பி ஒண்ணும் கவலைப்படாதீக... உங்களை மாதிரி இளம் ரத்தங்களைப் பீய்ச்சி அடிச்சித் தமிழ் சினிமாவில் புரட்சி பண்றதுதான் நம்ம நோக்கம்' எனக் கைகால்களே புல்லரிக்கும் அளவுக்குப் பேசினவர், 'அதுக்காகத்தான் படத்துக்கு டைட்டிலே 'என் உயிர் நீதானே'னு வெச்சிருக்கோம். இதுல என் உயிர்ங்கிறது யார் தெரியுமா... நீங்கதான் தம்பி...' என நெஞ்சில் குழி விழுற அளவுக்கு போர் போட்ருக்கார். எல்லாம் முடிஞ்சு முக்கியக் கட்டம்... அதாங்க முடிஞ்ச அளவுக்கு பணத்தைக் கறக்குற திட்டம்.. அதுலயும் 300 ரூபாயை சேவை வரியாக் கட்டி முடிச்சதும், நாலு நாள் காத்திருக்கச் சொல்லிருக்காய்ங்க. அன்னிக்குக் காத்திருக்க ஆரம்பிச்சவர்தான்... இப்போ நாலு வருசமாச்சு. இதுவரைக்கும் அங்கேயிருந்து ஒருத்தரும் கூப்பிடலை. 

இன்னொரு முறை வாய்ப்புத் தேடிப்போனது 'சொப்பனத்துறை' வாழும் வடபழனிப் பக்கம். தூரத்துல நின்னு குறுகுறுன்னு பார்த்த ஒருத்தர் கொஞ்சநேரம் போனதும் கிட்ட வந்து, 'நீங்க சினிமா சான்ஸ் கேட்டுத்தானே வந்திருக்கீங்க..?' எனப் பசையைத் தடவியிருக்கார். 'மூஞ்சியே சொல்லுதே... பேரரசு மாதிரி பிரகாசமா மின்னும்போதே பெரிய ஆளா வருவனு தெரியுதே...' என லாஜிக்லயே குந்தாங்கூறாக ஓட்டையைப் போட்ருக்கார். சரி... லாஜிக் இல்லாம ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்குறவர் போலன்னு மனசைத் திடப்படுத்திக்கிட்டு சிரிச்சி வெச்சா 'வாங்க கதையை டிஸ்கஸ் பண்ணுவோம்'னு அணைக்கட்டி ஆபிஸ் ரூமுக்குப் கூட்டிட்டுப் போயிருக்கார். 

ஆபிஸ் ரூம் பூட்டைத் திறந்தாலும் அவ்வளவு ஈஸியா கதவைத் தொறக்கமுடியாத டெக்னாலஜிய யூஸ் பண்ணிக் கட்டியிருப்பாய்ங்க போல. 'பூங்கதவே... தாழ் திறவாய்...' னு பாட்டு மட்டும்தான் பாடல. படத்துல கல்யாணத்தை நிறுத்துற காட்சியில தாம்பூலத் தட்டைத் தட்டிவிடுற மாதிரி ஆவேசமா எத்துனாத்தான் கதவு தொறக்குது. உள்ள ரெண்டு சேர். அதுல ஒண்ணுல உட்காரமுடியாது. ஃபேன் ரெண்டு. ஒண்ணுல சுவிட்ச் போட்டாலும் காத்து வராது. இப்படியாக அந்த ரூம்ல இருந்ததுல பாதி ஆகாவளிப் பொருள்கள். அவரும் பாய விரிச்சு உட்காரவெச்சு, அவர் சினிமாவுக்கு வாய்ப்புத் தேடி அலைஞ்சப்ப பிளாட்பார்ம்ல படுத்துத் தூங்குனது, நாலஞ்சு வருசம் ஓம் முருகா ப்ரொடக்‌ஷன்ஸ்ல ஆபிஸ் பாயா வேலைபார்த்ததுல ஆரம்பிச்சு விஜய், அஜித்கூட போட்டோ எடுத்துக்கிட்ட கதை வரைக்கும் சொல்லிமுடிக்கிறதுக்குள்ள பாவம் பார்த்து இவங்களே ஐநூறு ரூபாயை நன்கொடை லிஸ்ட்ல எழுதியிருக்காங்க.

இப்ப நடிகரா, இயக்குநரா வளர்ந்திருக்குற ஒருத்தர் மெட்ராஸுக்கு வந்து நடிக்க சான்ஸ் தேடுனப்ப நடந்த அட்டூழியங்கள் அந்தலை சிந்தலை ரகம். 'நெல்லைச் சீமையிலே'னு ஒரு படத்துல நடிக்கிறதுக்கு சென்னையில இருந்து திருநெல்வேலிக்கு மொத்த யூனிட்டும் ஷூட்டிங் போயிருக்காங்க. நடிகர்கள் எல்லோரும் திருநெல்வேலியில இருக்கிற ஒரு ஹோட்டல்ல தங்கி இருந்திருக்காங்க. ரெண்டுநாள் ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் மூணாவது நாள் ஒருத்தரைக் காணோம். அது யார்னா அந்தப் படத்தோட டைரக்டர். ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டு நாள்ல என்ன நினைச்சு மனசு மாறுனாரோ தெரியல... யார்கிட்டயும் சொல்லாமக் கொள்ளாம எங்கேயோ கெளம்பிட்டார். தங்கியிருக்கிற லாட்ஜுக்கு வாடகை குடுக்காததால மொத்த யூனிட்டையும் உள்ளேயே வெச்சுப் பூட்டிட்டாங்க. மொத்தப் பணத்தையும் குடுக்குற வரைக்கும் ரூமை விட்டு அவசரத்துக்குக் கூட வெளிய போகவிடமாட்டோம்னு மிரட்டிருக்காக. மெட்ராஸ்ல இருக்குற ப்ரொடியூசருக்குத் தகவல் சொல்ல போன் நம்பரும் இல்லையாம். ஒருவழியா, எல்லோரும் சேர்ந்து ப்ளான் போட்டு, ஒருத்தர் மட்டும் வென்டிலேட்டர் வழியா வெளியே குதிச்சு எஸ்கேப்பாகி மெட்ராஸுக்குப் போயி ஆளுகட்டச் சொல்லி, மிச்சப்பேரை எல்லாம் மீட்டுக்கொண்டு வந்து சேத்துருக்காக.

திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல ஷூட்டிங். புதுமுகங்களா சேர்ந்து எடுக்குற படம். டைரக்டர், புரொடியூசருக்குச் சொந்தக்காரராம். பூஜை எல்லாம் முடிச்சிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது ஒரு தகராறு. 'யோவ்... தொப்பி எங்கய்யா... டவல் எங்கய்யா... அதெல்லாம் இல்லாம என்னைய டைரக்டர்னு எப்படியா நம்புவாய்ங்க'னு அசிஸ்டென்ட் டைரக்டர் மேல பாய்ஞ்சிருக்கார் டைரக்டர். அவரைச் சமாதானப்படுத்தி டவுனுக்குப் போய் வாங்கிட்டுவர ஆள் அனுப்பிருக்காக. கொஞ்சநேரம் கழிச்சு அசிஸ்டென்ட் டைரக்டர் கன்னத்துல கைய வெச்சுத் தடவிக்கிட்டு இருந்துருக்கார். என்னடான்னு விசாரிச்சா, 'நான் ஒரு டைரக்டர்... இந்தப்பய என்கிட்ட வந்து கேமராவ எங்க வெக்கணும்னு கேக்குறான்யா'னு மறுபடியும் தாவிருக்காப்ள. சுதாரிச்ச ப்ரொடியூசர், மொத்தத்தையும் பேக்கப் பண்ணச் சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிட்டாராம். 

இந்தமாதிரி வாய்ப்புத் தேடிப் போய் பணத்தைக் கோட்டைவிட்டவங்க, ஆழம் தெரியாம குட்டைக்குள்ள காலைவிட்டுத் தப்பிப்பிழைச்சு வந்தவங்கனு சினிமாவில் 'பல்பு' வாங்கின பங்காளிகளோட கதைகள் ஏராளம் இருக்கு. ஆகவே, மக்கழே... 'நாங்கள் தொடங்கவிருக்கும் புதுப்படத்தில் நடிக்க ஆறு வயது முதல் அறுபது வயது வரை புதுமுகங்கள் தேவை...'னு பேப்பர்ல மூணு இஞ்ச்ல விளம்பரம் கொடுத்திருக்கிறவங்களை முழுசா நம்பி ஏமாந்துறாதீங்க. அதுக்காக, சினிமாவைக் கண்டாலே விலகி ஓடிறணும்னு இல்ல. தடைகள் இல்லாத வாழ்க்கை போரடிச்சுரும். ஆனா... பார்த்து சூதானமப்பூ..!

"பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்; எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்."

                                                                                              - ஓஷோ 

- இன்னும் ஓடலாம்...