Published:Updated:

''சுமார் மூஞ்சு குமாரைத்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு!'' - ஜாலிகேலி டேனியல்

''சுமார் மூஞ்சு குமாரைத்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு!'' - ஜாலிகேலி டேனியல்
''சுமார் மூஞ்சு குமாரைத்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு!'' - ஜாலிகேலி டேனியல்

''சுமார் மூஞ்சு குமாரைத்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு!'' - ஜாலிகேலி டேனியல்

“ஃப்ரெண்ட் லவ் மேட்டரு ஃபீல் ஆகிட்டாப்ல, ஆஃப் சாப்பிடா கூலாகிடுவாப்ல” என்று ஒற்றை வரி டயலாக்கில் படு ஃபேமஸானார் காமெடி நடிகர் டேனியல் போப். கடந்த வாரம் ‘ரங்கூன்’, இந்த வாரம் ‘மரகத நாணயம்’ அடுத்த வாரம் ‘திரி’ என செம ஆக்டிவ் காமெடியனாகிவிட்டார் டேனியல். விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இருவரும் நடிக்கும் ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ பட ஷூட்டிங்கில் இருந்த டேனியலைச் சந்தித்தேன். 

``ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க ஜி! எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க?''

``என்னோட முதல் அறிமுகம் கின்னஸ் சாதனைதான். கல்லூரி படிக்கும்போது 72 மணி நேரம் தொடர் நாடகம் போட்டு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணேன். விஸ்காம் முடிச்சதும் கூத்துப்பட்டறையில் தொடங்கி நாடகம் சார்ந்து செயல்படத் தொடங்கினேன். அப்படியே சினிமாவுக்குள்ளேயும் வந்துட்டேன்.  ‘பொல்லாதவன்’ என்னோட முதல் படம். ‘பையா’, ‘ரெளத்ரம்’ படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர் பண்ணேன். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ எனக்கான மிகப்பெரிய பிரேக். உடல்நிலை சரியில்லாததால, பெரிய இடைவெளி விழுந்திருச்சு. மறுபடியும் படம் நடிக்கத் தொடங்கிட்டேன்.''

``என்னது... கின்னஸ் ரெக்கார்டா?''

``கல்லூரியில் படிக்கும்போது பண்ணது. எந்தவித இடைவெளியும் இல்லாம 72 மணி நேரம் தொடர்ந்து நாடகம் நடிச்சோம். 13 பைபிள் ஸ்டோரிகளை வெச்சு 12 பேர் நடிச்சோம். இதுக்கு முன்னாடி 52 மணி நேரத்துக்கு நாடகம் போட்டிருக்காங்க. அதை நாங்க பிரேக் பண்ணோம். இந்த கின்னஸுக்காக ஒன்றரை வருடம் பயிற்சி எடுத்தோம்.''

``நடிப்பில் எப்படி ஆர்வம் வந்துச்சு?''

``சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போகப் பிடிக்காம லீவ் போட்டிருவேன். அடுத்த நாள் சார் கேட்டா, ஏதாவது பொய் சொல்லி வாத்தியாரை நம்பவெச்சுடுவேன். ஆனா, என் நண்பர்கள் பொய் சொன்னா மாட்டிப்பாங்க. நான் நடிச்சா மட்டும் ஈஸியா எல்லோரும் நம்பிடுவாங்க. நடிப்புதான் நல்லாவே வருதே, இதை நல்லதுக்காகப் பயன்படுத்தலாமேனு தோணுச்சு. அதனால நடிப்பையே என் வாழ்க்கையா மாத்திக்கிட்டேன். ''

``சுமார் மூஞ்சி குமாரா டேனியல் மாறிய கதை?''

`` ‘ரெளத்ரம்’ படத்துல நிறைய சீன்கள்ல நடிச்சேன். ஆனா, எடிட்டிங்கில் தூக்கிட்டாங்க. படத்துல கொஞ்ச நேரம்கூட வரலை. இனிமே சின்னச் சின்ன ரோல்தான் கிடைக்கும்போல, டம்மி ஆக்டராகிடுவேனோனு பயந்துட்டு, டிவி-யில் வேலை செய்யலாம்னு போயிட்டேன். அப்போதான் இயக்குநர் கோகுல் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  கதை சொன்னார். இருந்தாலும் முதல்ல நம்பிக்கையில்லை. விஜய் சேதுபதி, நந்திதானு டீம் பெருசாகும்போதுதான் எனக்கே தைரியம் கிடைச்சது. நடிப்போட முக்கியத்துவத்தை நடிச்சுக் காட்டிட்டோம்னா, நிச்சயமா நாம நடிக்கிற சீன் படத்துல எடிட் ஆகாதுனு புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படத்துல விஜய் சேதுபதி அண்ணாதான் என்னோட எனர்ஜி டானிக்.  நடிப்பைக்கூட அண்ணே ரியலாத்தான் பண்ணுவார். அடிக்கிற சீன்ல உண்மையிலேயே அடிப்பார். அவர் கையால் பல முறை அடிவாங்கியிருக்கேன். இன்று வரைக்கும் டேனியல்னா யாருக்கும் தெரியாது. சுமார் மூஞ்சு குமாரைத்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.''

``இரட்டை வசன காமெடியெல்லாம் இப்போ அதிகமாகிட்டிருக்கே?''

``நாம வெளியே தெரியணும்கிறதுக்காக நெறி தவறி எதையும் செய்யக் கூடாது.  நம்ம காமெடிக்குச் சிரிக்கணும்கிறதுக்காக டபுள் மீனிங் டயலாக் எல்லாம் பயன்படுத்தக் கூடாது. காமெடியிலும் நேர்மை இருக்கணும். மத்தவங்களைப் பார்த்துக் கெட்டுப்போறது சுலபம். ஆனா, கத்துக்கிறது கஷ்டம். எல்லோருக்குமே ஒரு தனித்திறமை இருக்கு. மத்தவங்க மனசைப் புண்படுத்தாம, சந்தோஷப்படுத்துற மாதிரி காமெடி பண்ணணும். சிவகார்த்திகேயன் அண்ணா யார் மனசையும் புண்படுத்தாம காமெடி பண்ணுவார். அவர் மாதிரியான நடிகனா வரணும்கிறதுதான் என் ஆசையும். என் வீட்டுல இருக்கிறவங்களும் தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பாங்கங்கிறதை மனசுல வெச்சுதான் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். அவங்க முகம் சுளிக்கிற மாதிரி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.''

``அப்பாவை ரொம்ப மிஸ்பண்றீங்களா?''

``கடந்த ஐந்து வருஷங்களா நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, எதுவுமே ரிலீஸ் ஆகாமத் தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. படம் `எப்போ ரிலீஸாகும்?னு ஒவ்வொரு மாசமும் கேட்டுட்டே இருந்தார். ‘ரங்கூன்’ படம் அவர் பார்க்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டார். படம் ரிலீஸாகிடுச்சு. ஆனா அவரால்தான் படத்தைப் பார்க்க முடியலை. அவரோட இறப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு . நிறைய பேர் படம் பார்த்துப் பாராட்டும்போது, அப்பாவே வாழ்த்து சொல்றதா நினைச்சுக்குவேன்.''

``சினிமாவில் என்னவாகணும்னு ஆசை? ''

``நடிப்பு மட்டுமில்லாம, இயக்கத்திலும் இறங்கணும். ‘குதிரை முட்டை’ங்கிற டைட்டில்ல ஏற்கெனவே ஸ்க்ரிப்ட் ரெடி.  கிராமத்துல இருக்கும் மூன்று நண்பர்களோட கதை. தயாரிப்பாளரிடமும் பேசிவெச்சிருக்கேன். சீக்கிரமே இயக்கத்திலும் இறங்கிடுவேன்.'' 

``சின்ன வயசுல நீங்க பண்ண சேட்டை ஏதாவது சொல்லுங்க!''

``பிரபுதேவானா ரொம்பப் பிடிக்கும். எப்படியாவது அவரைச் சந்திக்கணும்னு அவரோட முகவரியைக் கண்டுப்பிடிச்சு லெட்டர் ஒண்ணு போட்டேன். `நான் உங்க ரசிகன். உங்களைப் பார்க்கணும்'னு எழுதியிருந்தேன். பிரபுதேவா சார் போன் பண்ணுவார்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். ஒருநாள் என் பெயர்ல வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துச்சு. பிரபுதேவா சார் கூப்பிட்டார்னு செம ஹேப்பியாகிட்டேன். அப்பா அந்த லெட்டரை வாங்கி பார்த்துட்டு, என்னை அடிவெளுத்துட்டார். எதுக்கு அடிச்சார் தெரியுமா..? முகவரி எழுதும்போது, அனுப்புநர், பெறுநர் மாத்திப் போட்டுட்டேன். அதனால, கடிதம் திரும்பி எனக்கே வந்திடுச்சு.''  

`` `இனி டேனியல் ஹீரோவாத்தான் நடிப்பார்'னு ஒரு பேச்சு உலாவுதே?''

``நானும் கேள்விப்பட்டேன்ஜி. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. நடிப்புனு வந்துட்டா பெரியது சிறியதுனு எதுவுமே கிடையாது. கதைக்கு நாம பொருத்தமா இருந்தா, எந்த ரோல்லயும் நடிக்கலாம். யாரோ ஊதிவிட்ட பலூன் இது. நான் எப்பவுமே நல்ல நடிகனா இருக்கத்தான் ஆசைப்படுறேன்.''

படம்: ப.பிரியங்கா 

அடுத்த கட்டுரைக்கு