Published:Updated:

“விருது இருக்கட்டும்... வாய்ப்பு கொடுங்க!” 'ஜோக்கர்' தேசிய விருது பாடகர் சுந்தரையரின் வேண்டுகோள்

“விருது இருக்கட்டும்... வாய்ப்பு கொடுங்க!” 'ஜோக்கர்' தேசிய விருது பாடகர் சுந்தரையரின் வேண்டுகோள்
“விருது இருக்கட்டும்... வாய்ப்பு கொடுங்க!” 'ஜோக்கர்' தேசிய விருது பாடகர் சுந்தரையரின் வேண்டுகோள்

‘‘விருதுகள் போதும் சார். வாய்ப்புகள்தான் வேணும்’’ என்கிறார் ‘ஜோக்கர்’ படப் பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்ற சுந்தரையர். அதே பாடலுக்காக, தற்போது ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றிருக்கிறார். 

சுந்தரையர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கூத்துக்கலைஞர், நல்ல பாடகர், சிறந்த நடிகரும்கூட. நாடகக்கலைஞர் முருகபூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவைச் சேர்ந்தவர். இயக்குநர் ராஜுமுருகனும் இசையமைப்பாளர் ஷான்ரோல்டனும் சேர்ந்து இவரை ‘ஜோக்கர்’ படத்தில் `லவ்யூ லவ்யூ லவ்யூ லவ்யூ ஜாஸ்மினு...' என்ற பாடலைப் பாடவைத்தனர். இந்தப் பாடலுக்காக சுந்தரையருக்குச் சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது சுந்தரையருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அவரிடம் பேசினேன்...

‘‘நாடகங்கள்ல நடிக்கிறது, பாடுறதுனு சுத்திட்டிருக்கிறதைப் பார்த்துட்டு, ‘ஏதோ `பாடுறே'ங்கிறான், `நாடகத்துக்குப் போறேன்'கிறான். ஆனா, எங்கே போறான்... எங்கே வர்றான்னு ஒண்ணும் தெரியலை’னு ஊர்ல நம்மளை ஒருமாதிரி பேசுவாங்க; ஒருத்தரும் மதிக்க மாட்டாங்க. ஆனா, தேசிய விருது வாங்கிய பிறகு அப்படிக் கொண்டாடுறாங்க சார். ‘பரவாயில்லையே இந்தப் பய எங்கேயோ போறான் வர்றான்னு நினைச்சுட்டிருந்தோம், நம்ம தர்மபுரி மாவட்டத்துக்கே பெருமை சேர்த்துட்டானேய்யா’னு உயர்வா பேசுறாங்க.

மத்திய அரசு அங்கீகரிச்ச அளவுக்கு மாநில அரசு அங்கீகாரம் தரலைங்கிறது பெரிய வருத்தம்தான். தமிழக அரசு, தர்மபுரி மாவட்ட ஆட்சியர், உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி.,னு ஒருத்தரும் போன் பண்ணி ஒரு வாழ்த்துகூட சொல்லலை. ஆனா, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் என்னைக் கூப்பிட்டு விஷால் சார் பொன்னாடை போத்தி கெளரவிச்சதை இந்தச் சமயத்துல சொல்லியே ஆகணும். பெருசா வேற எதுவும் நடக்கலை சார்’’ என்கிறார். 

‘‘நாடக நடிப்பு எப்படிப் போயிட்டிருக்கு?’’ என்றதும் உற்சாகமாகிறார்.

‘‘கூத்துக்கலைஞர்களோட வாழ்க்கை ரொம்ப ரொம்பச் சிரமம். கிட்டத்தட்ட கூத்து அழிஞ்சேபோச்சுனு சொல்லலாம். குறிப்பா, தர்மபுரி மாவட்டத்துலதான் கூத்துக்கலைஞர்கள் அதிகம். அதில் பாதிபேர் செத்தாச்சு, மீதிபேர் வெளியிலேயே தலை காட்ட முடியாத அளவுக்கு வறுமையில் முடங்கிக் கிடக்குறாங்க. இப்ப யாராவது இறந்தால்தான் கூத்துக்கே கூப்பிடுறாங்க. அதுவும் காசு இருக்கிறவன் செத்தால்தான் உண்டு. இல்லைன்னா அதுவும் போச்சு. திருவிழாவுலயும் முன்னாடி மாதிரி கூத்து கட்டுறது இல்லை. 

தவிர, இது காசுக்காக மட்டும் பண்ற வேலை கிடையாது. நாடகம் போட்டோம்னா மனசுக்கு சந்தோஷம். கூடவே காசும் வரும். இப்ப நான் முருகபூபதி அண்ணனின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவுல இருக்கேன். பெரிய பெரிய  காலேஜ்கள்ல, கேரளா, கர்நாடகானு வெளி மாநில நாடக விழாக்கள்ல நாடகம் போட்டிருக்கோம். இவை நவீன நாடக அமைப்பு முறையைச் சேர்ந்தவை. சொல்ல வர்ற கருத்தை உடல்மொழி மூலம் கடத்துவோம். இந்த நாடகங்களைப் பார்க்கிறவங்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிஞ்சுப்பாங்க. உடல்மொழி, அரங்க அமைப்பு...னு பார்க்கவே வித்தியாசமா இருக்கும். இதுக்குள்ள வந்த பிறகுதான் எனக்கு நடிப்பு மேல அப்படி ஒரு ஆர்வம் வந்துச்சு.

ஜூலையில்கூட சென்னைக்கு வர்றோம். ‘மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடிகள்’, ‘நீர் நாடோடிகள்’, ‘மிருக விதூஷகம்’னு மூணு நாடகங்கள் அங்கே போடப்போறோம். இதுதவிர முருகபூபதி அண்ணன் இன்னொரு நாடகம் ரெடி பண்ணிட்டிருக்கார். அதுல எனக்கு பெண் வேஷம்னு சொல்லியிருக்கார்’' என்று சிரித்தவரிடம், ‘‘அப்ப சினிமாவில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கீங்க?'’ என்றேன். 

‘‘நிச்சயமா சார். அதுக்கான முயற்சிகளும் போயிட்டிருக்கு. இயக்குநர்களைப் பார்த்து வாய்ப்பு கேட்டுட்டிருக்கேன். ஒண்ணு சொன்னா ‘இவன் காமெடி பண்றானோ... இல்லை அநியாயத்துக்கு ஆசைப்படுறான்னோ'ன்னு நினைப்பீங்க. ஆனா, என் மேல உள்ள நம்பிக்கையில் சொல்றேன். ஆமாம் சார், ஆஸ்கர் வாங்கிற மாதிரி நடிக்கணும்னு ஆர்வமா இருக்கேன்’’ என்கிறார். 

‘‘ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் என்ன ஸ்பெஷல்?’’ என்றதும் குஷியாகப் பேசுகிறார்.

‘‘அங்கே ஏ.ஆர்.ரஹ்மான் சாரைப் பார்த்தேன். ‘உங்க இசையில் பாட வாய்ப்பு கொடுங்க சார்’னு கேட்டேன். ‘நிச்சயம் பாடலாம். நானே உங்களைக் கூப்பிடுறேன்’னு சொல்லி என் போன் நம்பரை அவரோட மேனேஜர்கிட்ட கொடுக்கச் சொன்னார். ரொம்ப நம்பிக்கையா இருந்துச்சு. ஆமாம் சார், எனக்கு விருதுகள் போதும்; நிறைய வாய்ப்புகள்தான் இப்ப வேணும். 

நயன்தாரா மேடம் நடிச்சு கோபி நயினார் இயக்கும் ‘அறம்’ படத்துல ஜிப்ரான் இசையில் உமாதேவி மேடம் எழுதிய ‘புது வரலாறு... புறநானூறு...’னு ஒரு பாட்டு பாடியிருக்கேன். வேற யாரும் இதுவரைக்கும் கூப்பிடலை. அது ஒண்ணுதான் பெரிய வருத்தமா இருக்கு. எல்லா வகையான பாடல்களையும் பாடணும்னு ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கேன். ஆனா, கூப்பிடத்தான் ஆள் இல்லை. அதுக்கு ஏதாவது வழி பண்ணிவிடுங்க சார். ‘சுந்தரையருக்கு விருது போதும். நிறைய பாட்டு கொடுங்க’ன எழுதிடுங்க சார்’’ என்கிறார் வெள்ளந்தியாக. 

‘‘வீட்டுல என்ன சொல்றாங்க. தேசிய விருது வாங்கிய பிறகு வீட்டுல உள்ளவங்களுக்கு சந்தோஷம்தானே?’’ என்றால், வெட்கத்தில் பேச்சு வரவில்லை.

‘‘படிப்பை முடிச்சுட்டு பெரியார் இயக்கத் தோழர்கள், முருகபூபதி அண்ணனோடு சேர்ந்து, ஊர் ஊராப் போய் பகுத்தறிவு நாடகங்கள்ல பாடுறது, நடிக்கிறதுனு இருந்தப்ப, ஒருமுறை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கம் போயிருந்தோம். அங்கேதான் கவிதாவைச் சந்திச்சேன். அவங்களும் நாடகக்கலைஞர்தான். பழகினோம். ‘கல்யாணம் பண்ணிக்கணும்’னு பிடிவாதமா இருந்தாங்க. ‘சோத்துக்கே வழி இல்லை. பிறகெப்படி கல்யாணம்?’னு கேட்டேன். ‘சமாளிப்பேன்’னு சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. 

நான் இன்னிக்கு ஓரளவுக்கு உருப்படியா வளர்ந்து நிக்கிறேன்னா அதுக்கு என்னைப் பெத்தம்மா சின்னப்பொண்ணும், என் வளர்க்கிற அம்மா மனைவி கவிதாவும்தான் காரணம். இயற்கை, இசைமழைனு ரெண்டு பசங்க. இயற்கை அஞ்சாவது போறான். இசைமழை சின்னக் குழந்தை. ‘அவ கொஞ்ச நாள் ஜாலியா விளையாடட்டுமே இப்ப எதுக்கு ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டு?’னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா அவ, ‘ஸ்கூலுக்கு போறேம்பா’னு சொல்லிட்டு அண்ணனோடு புத்தக மூட்டையைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருந்தா. ‘சரி அவளும் ஸ்கூலுக்குப் போகட்டும்’னு நினைச்சு எல்.கே.ஜி சேர்த்துவிட்டிருக்கேன். இப்பதான் சார் ஓரளவுக்கு சந்தோஷமா இருக்கேன். பாட, நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சுன்னா இன்னும் சந்தோஷமா இருப்பேன் சார்’’ என்று சிரிக்கிறார் சுந்தரையர். 

இந்த நல்ல கலைஞனைச் சந்தோஷப்படுத்துங்களேன்!