Published:Updated:

விஜய் அண்ணாவுக்கு ஒரு அஜித் ரசிகனின் கடிதம்!

நமது நிருபர்
விஜய் அண்ணாவுக்கு ஒரு அஜித் ரசிகனின் கடிதம்!
விஜய் அண்ணாவுக்கு ஒரு அஜித் ரசிகனின் கடிதம்!

அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு...

தமிழ் சினிமாவின் இனிய தளபதி, இதயத் தளபதி, இளமைத் தளபதிக்கு இந்த அஜித் ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துகள்.  ரசிகன்னு சொன்னதும் ஃப்ளக்ஸ் வெச்சு, பால் ஊத்தி, பச்சை குத்திக்கிட்டு, `மனிதக் கடவுள் அஜித்... வாழ்க' னு அலறும் அளவுக்கு அஜித் வெறியன் கிடையாது. முதல் நாள், முதல் ஷோவில் `அல்டிமேட் ஸ்டார் அஜித்... வாழ்க'னு கத்துற சாதாரண அஜித் ரசிகன் நான். உங்க படங்களின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானாலும் சரி, இல்ல படமே ரிலீஸானாலும் சரி... மனசாற‌க் கலாய்ச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ் அன்னைக்கு உங்க ரசிகர்கள் எப்படி கண் விழிச்சுக் காத்திருப்பாங்களோ, நானும் அதேமாதிரி `கன்டென்ட் எதுவும் கிடைக்குமா'னு கண்கொத்திப் பாம்பா காத்திருப்பேன்.  காரணம், கர்மா இஸ் எ பூமராங். உங்க ரசிகர்கள் அஜித்தைக் கலாய்க்குறாங்க. அஜித் ரசிகர்களான நாங்க உங்களைக் கலாய்க்குறோம். அஜித்தும் நீங்களும் நிஜத்தில் நல்ல நண்பர்களா இருந்தாலும், சினிமானு பார்க்கும்போது உங்களை  அவரது எதிரியாகத்தான் பார்க்குறோம். 

`எனக்கு நண்பனா இருக்கத் தகுதி வேண்டாம். ஆனால், எதிரியா இருக்கத் தகுதி வேணும்'னு `பில்லா-2' படத்தில் ஒரு செம வசனம் வரும். அப்படி  மாஸ், கெத்து, ஸ்டைல்னு அஜித்துக்கு டஃப் ஃபைட் கொடுக்குற ஒருத்தர்னா அது நீங்க தான். உங்களை எங்க எதிரியா பார்த்தாலும், உங்ககிட்டே பிடிச்ச விஷயங்களும் நிறையவே இருக்கு. பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு உங்ககிட்டே பிடிச்சது `டான்ஸ்'. எனக்கும் தான். `அழகிய தமிழ் மகன்', `குருவி', `வில்லு', `சுறா'னு பல படங்கள்ல டான்ஸ் பட்டையைக் கிளப்பும். அதேமாதிரி, படத்தின் பாடல்கள். ஏ.ஆர்.ரஹ்மானோ, டி.இமானோ யார் இசையமைச்சாலும் ஆல்பம் `ஹிட்'. `குஷி', `கில்லி', 'போக்கிரி', `அழகிய தமிழ் மகன்', `தெறி'னு உங்க  பாடல்கள் பல என் ப்ளே-லிஸ்ட்டில் நிறைஞ்சு கிடக்கு. மாஸ் ஹீரோவா இருந்தாலும் காமெடியில் கலக்குறதெல்லாம் சத்தியமா செம. `போக்கிரி', `துப்பாக்கி' படங்கள்ல காட்டுன‌ அந்த அசால்ட்டான பாடி-லாங்வேஜுக்கு என்ன பண்ணாலும் மரண‌மாஸா இருந்துச்சு. பார்க்குறதுக்குப் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கிற லுக், காமிக்கல் சென்ஸ், டிரெஸ்ஸிங் சென்ஸ்னு ஆன்-ஸ்க்ரீன்ல உங்ககிட்ட‌ பிடிச்ச விஷயங்கள் நிறைய சொல்லலாம். 

நிஜ வாழ்க்கையில், உங்ககிட்ட பிடிச்ச விஷயம் ஒண்ணு.  எந்த விழாவுக்குப் போனாலும், எந்த மேடை ஏறினாலும்... தன் இருப்பை ரொம்ப அழுத்தமா பதியுறது. பத்து வார்த்தை பேசினாலும், வெயிட்டா பேசி மாஸ் காட்றது. இதைத்தாண்டி, உங்ககிட்ட பிடிக்காத விஷயங்களை விட, உங்ககிட்டே எதிர்பார்க்குற விஷயங்கள் சில‌ இருக்கு.  சட்டைக்கு மேல் இன்னொரு சட்டை, பறந்து பறந்து சண்டை, பக்கம் பக்கமா வசனம் பேசி நீங்க நடிக்குறதை விட, `நண்பன்', `துப்பாக்கி' மாதிரியான படங்கள்தான் உங்களுக்கு பக்காவா பொருந்திப்போவுது. அப்போ, மொக்க டயலாக்குகளையும் சரியான மாடுலேஷனில் பேச தெறிக்கும். 

பெரும்பாலான‌ அஜித் ரசிகர்கள் அவர்கிட்டே இருந்து மாஸ், ஸ்டைல், ஆக்ஷன், அதிரடியான படத்தைத் தான் எதிர்பார்ப்பாங்க. அதேபோல், உங்க ரசிகர்களும் உங்ககிட்டே இருந்து மாஸா, துறுதுறு, என்டர்டெயின்மென்ட்டான ஒரு படத்தைத்தான் எதிர்பார்ப்பாங்க. அதை நீங்க கொடுக்குறீங்க‌. ஆனாலும், கதையம்சம் இருக்கிற, உங்களோட நடிப்புத் திறமைக்கு தீனி போடுற மாதிரியான படங்களிலும் அப்பப்போ நடிக்கலாமே. வில்லன், வரலாறுக்கு பிறகு அஜித்தும் அப்படி ஒரு படம் கூட நடிக்கல. மாஸ், கமர்ஷியல் தாண்டி க்ளாஸான படங்களைத் தான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் இருந்து எதிர்பார்க்குறோம். அப்படி நீங்க ரெண்டு பேருமே  நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிச்சா, மகிழ்ச்சி. அதில் ரெண்டு பேருமே சேர்ந்து நடிச்சால் மிக்க மகிழ்ச்சி. ஏன்னா, இங்கே அஜித் இல்லாமல் விஜய் இல்லை, விஜய் இல்லாமல் அஜித் இல்லை.

அரசியலை நோக்கிய உங்க செயல்பாடுகள், உங்க தைரியம், உங்க ரசிகர்களுக்கு நீங்க‌ முக்கியத்துவம் கொடுக்குறது, உங்ககிட்டே பிடிக்காதது, உங்ககிட்டே கத்துக்க வேண்டியதுனு சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. கண்டிப்பா இன்னொரு நாள் சொல்றேன். மறுபடியும், பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிட்டு எண்ட் கார்டு போட்டுக்குறேன்.

இப்படிக்கு,
                                                                                                                                                                                                                                       அஜித் ரசிகன்.