Published:Updated:

"ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் மெயில்..?!" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி

"ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் மெயில்..?!" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி
"ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் மெயில்..?!" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி

"ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் மெயில்..?!" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி

"ன் வாய்ஸ்...  கடவுள் கொடுத்த கிஃப்ட். அதை ரொம்பவே சரியா பயன்படுத்திக்கணும். என் குரலை எல்லோரும் ரசிக்கணும். அதுக்காகத்தான் என்னோட வேலையைக்கூட விட்டுட்டு பிடிச்ச இசைத்துறையிலயே முழுசா கவனம் செலுத்திகிட்டு இருக்கேன்" என தன் இனிமையான குரலில் அன்பாகப் பேசுகிறார் பாடகி சாந்தினி சத்தியநாதன். தனிப்பட்ட முறையில் பாடல்களைப் பாடி யூடியூபில் பதிவிட்டுவரும் இவருக்கு, லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் உண்டு. தற்போது சினிமாவில் பின்னணிப் பாடகியாகவும் தனக்கான இடத்தைப் பதிவு செய்துவருகிறார்.

"பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சின்ன வயசுல இருந்து இசை மேல ஆர்வம் அதிகம். 10 வயசுல மியூசிக் கிளாஸ்ல சேர்ந்தேன். தொடர்ந்து ஸ்கூல் நிகழ்ச்சிகள், கிளாஸ் ரூம், வீட்டுலயெல்லாம் பாடிகிட்டே இருப்பேன். இப்படி ஒரு ஆர்வமா மட்டுமே இருந்த இசைத்துறைமேல, பிளஸ் டூக்குப் பிறகு அதிக ஈடுபாடு வந்திடுச்சு. அதுவரைக்கும் கொஞ்சம் சுமாரா பாடிகிட்டு இருந்த நிலையில, 'இனிமேல் ரொம்ப நல்லா பாடணும். நமக்கும் ஃபாலோயர்ஸ் இருக்கணும். நாம பாடுறப் பாட்டை பலரும் ரசிக்கணும்'னு நினைச்சேன். அதனால கூடுதல் சிரத்தையோடு பிராக்டீஸ் பண்ணினேன். அந்த நேரத்துலதான் காலேஜ்ல என்ன கோர்ஸ் எடுக்கலாம்னு ஒரு யோசனை வந்துச்சு.

'இன்ஜினீயரிங் படிச்சுட்டு வேலைக்குப் போனா எந்த ரிஸ்க்கும் இல்லை. மாசமானா சம்பளம். கூடவே, ஓய்வு நேரத்துல இசைலயும் கவனம் செலுத்தலாம். ஆனா பாடகியாப்  போனா நிறைய ஏற்ற இறக்கங்கள் வரும். நல்ல நிலைக்கு வர ரொம்பவே மெனக்கெடணும்'னு வீட்டுல சொன்னாங்க. அதன்படி, நானும் இன்ஜினீயரிங் படிச்சேன். ஆனாலும் படிப்போடு சேர்த்து இசைல அதிக கவனம் செலுத்தினேன். காலேஜ் க்ளாஸ் ரூம்ல அடிக்கடிப் பாடுவேன். அப்போ  நண்பர்கள் எல்லோரும் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்த, காலேஜ் முடிக்கும் சமயத்துல தனியா பாடல்களைப் பாடி சோஷியல் மீடியாவுல ரிலீஸ் செய்யலாம்னு முடிவெடுத்தேன்" என்பவர், இப்போது இசை ஆர்வத்தினால் தன் வேலையை விட்டுவிட்டார். 

"படிப்பை முடிச்சதுமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியில வேலை கிடைக்க, ஒரு வருஷம் வேலை செஞ்சேன். அந்தச் சமயத்துலதான் நிறைய  பாடல்களைப் பாடி அந்த வீடியோக்களை யூடியூப்ல அப்லோடு செய்ய ஆரம்பிச்சேன். எனக்குன்னு நிறைய ஃபாலோயர்ஸ் உருவானாங்க. அதோடு அந்த இயந்திரத்தனமான அந்த  வேலைச் சூழல் எனக்குப் பிடிக்கல. என் குரலை நல்ல முறையில பயன்படுத்திக்கணும். அதுக்காக கஷ்டப்படவும் தயார்'னு முடிவெடுத்து, வேலையை ரிசைன் பண்ணிட்டேன். அடுத்து கூடுதலா இசையைக் கத்துக்கிட்டு, சினிமாவில் பாடும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பிச்சேன். அப்படி நிறைய இசைத்துறையைச் சார்ந்தவங்களோடு அறிமுகம் கிடைச்சு, இப்போ நிறைய முன்னணி இசையமைப்பாளர்கள்  பலருக்கும் டிராக் பாடிகிட்டு இருக்கேன். 

ஒருமுறை இளையராஜா சார்கிட்ட வாய்ஸ் ஆடிஷனுக்குப் போனேன். கண்ணை மூடி என்னோட பாட்டை முழுசா கேட்டவர், ஆடிஷன்ல கலந்துகிட்ட அஞ்சு பேர்ல என்னை மட்டும் செலெக்ட் பண்ணினார். ஆனா இன்னும் அவர்  இசைல பாடும் வாய்ப்பு வரல. அந்த வாய்ப்பு கூடிய சீக்கிரமே வரும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். மேலும், சமீபத்துல ரிலீஸ் ஆன 'பீச்சாங்கை' படத்துல ஒரு பாட்டைப் பாடியிருக்கேன். அடுத்து ரிலீஸ் ஆகவிருக்கிற ஒரு படத்துலயும் ஒரு பாட்டு பாடியிருக்கேன். அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்துகிட்டு இருந்தாலும் பெரிய பிரேக்குக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்த வந்த பாராட்டை உற்சாகமாகக் கூறுகிறார்.

"சில வருஷமாவே தொடர்ச்சியா வாரம்தோறும் ஒருபாட்டைப் பாடி, அதை சண்டே காலையில யூடியூப்பில் பதிவேற்றுவதை  வழக்கமா வெச்சிருக்கேன். அதனால அந்த நாள் எனக்கு எப்போமே ஸ்பெஷல்தான். 'ரொம்பவே அப்செட்டா இருந்தேன். உங்க பாட்டைக் கேட்டதும் கவலைகள் மறந்து ரொம்பவே மகிழ்ச்சியாகிட்டேன். இந்த வாரம் எனக்குப் பிடிச்ச பாட்டைப் பாடியிருக்கீங்க'ன்னு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துக்குவியும். ஏதாச்சும் சில காரணத்தால தாமதமா பாட்டை அப்லோடு செஞ்சா, அதுக்குள்ள அன்புகலந்த கண்டிப்புகளும் அன்புத் தொல்லைகளும் வரும். அதெல்லாம்தான் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்துது. 

இப்படிப் போன வருஷம் நறுமுகையே பாடலைப் பாடி யூடியூப்ல அப்லோடு செய்ய, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிஞ்சுது. ஆனா, கொஞ்சமும் நான் எதிர்பாக்காத நிகழ்வா, திடீர்னு ஒருநாள் 'உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குது. தொடர்ச்சியா நல்லா பாடுங்க. என்னோட வாழ்த்துகள்'னு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு. எப்படி அந்த மெயில் வந்துச்சுன்னு தெரியல. ஆனா அதைப் பார்த்ததும் திக்குமுக்காடிப்போயிட்டேன். தொடர்ந்து இன்னும் நல்லா பாடணும். ரஹ்மான் சாரே கூப்பிட்டு பாட, வாய்ப்பு  கொடுக்கணும்னு நினைச்சு அந்த வாய்ப்புக்காக என்னை இன்னும் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்" என்பவர் டப்பிங்கிலும் கவனம் செலுத்திவருகிறார்.

"முதன் முதல்ல நான் பாடி ரிலீஸ் செஞ்ச வீடியோவுக்கு 2,500  பார்வையாளர்கள்தான் கிடைச்சாங்க.   இப்போ சராசரியாக ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் வர்றாங்க.  அந்த அளவுக்கு பலருக்கும் என் குரல் பழகிருக்குனு நெனைக்கறப்ப மகிழ்ச்சியா இருக்கு.   நிறைய தனிப்பட்ட ஆல்பங்களுக்கு இசையமைக்கணும்; கிரியேட்டிவிட்டியோடு நிறைய பாடல்களைப் பாடி வெளியிடணும்னு ஆசைகள் பல இருக்கு. அதற்கான முயற்சிகளோடு, சினிமாவுலயும் கவனம் செலுத்திகிட்டு இருக்கேன். கூடவே படங்களுக்கு டப்பிங் பேசுறது, மியூசிக் கிளாஸ் எடுக்கறதுன்னு பிஸியா இருக்கேன்" என நறுமுகையே பாடலின் சில வரிகளைப் பாடிக்காட்டி புன்னகைக்கிறார் சாந்தினி. 

அடுத்த கட்டுரைக்கு