Published:Updated:

“ ’சமையல் மந்திரம்’ நிகழ்ச்சில இருந்து ஏன் விலகினேன்னா...” - திவ்யா சேட்டை சாட்!

“ ’சமையல் மந்திரம்’ நிகழ்ச்சில இருந்து ஏன் விலகினேன்னா...” - திவ்யா சேட்டை சாட்!
“ ’சமையல் மந்திரம்’ நிகழ்ச்சில இருந்து ஏன் விலகினேன்னா...” - திவ்யா சேட்டை சாட்!

`சமையல் மந்திரம்' நிகழ்ச்சி மூலம் இளசுகளைச் சுண்டி இழுத்து, சின்னத்திரைத் தொடர்கள் வழியே மக்கள் மனங்களில் நிறைந்தவர் நடிகை திவ்யா. இவர், தற்போது `வம்சம்', `மரகதவீணை' போன்ற தொடர்களில் தன் நடிப்புத்திறனை  வெளிப்படுத்திவருகிறார்.  சின்னத்திரை, வெள்ளித்திரை, ஜாலி கேலி... எனத் திரைத் திரையாகப் பறந்துகொண்டிருந்த திவ்யாவை, சீரியல் இடைவேளையில் சந்தித்தோம்...

``சினிமா டு சின்னத்திரை அனுபவம் எப்படி?''

``என் சினிமா வாழ்க்கையே ரொம்ப சுவாரஸ்யமான ஒண்ணு. ஆரம்பத்துல வெள்ளித்திரையிலதான் அறிமுகமானேன். சின்னச் சின்ன

சீன்கள்ல நடிச்சு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி, `மன்னாரு'னு ஒரு படத்துல ஹீரோயினாவும் பண்ணேன். அதுல என் நடிப்பைப் பார்த்துட்டு, பல பிரபலங்கள் என்னைப் பாராட்டினாங்க. பலரும் பல வாய்ப்புகளைக் கொடுத்தாங்க. கூடவே சீரியல் வாய்ப்புகளும் வந்தது. வருவதை ஏன் விடணும்னு சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சேன். சீரியலோ, திரைப்படமோ நான் எப்பவும் துறுதுறுன்னு இருப்பேன். டக் டக்னு பதில் சொல்லிடுவேன். எல்லாரையும் நினைச்ச மாதிரி கேலி கிண்டல் செய்வேன். என் சுறுசுறுப்பையும் ஸ்பாட் ரிப்ளேவையும் பார்த்துட்டுதான் `சமையல் மந்திரம்' மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும், சவால்விடும் கதாபாத்திரங்கள்ல நடிக்கவும் வாய்ப்பு கிடைச்சது. இப்படித்தான் `வம்சம்', `மரகதவீணை'னு பல சீரியல்கள் எனக்கு கமீட் ஆச்சு. இப்போ நான் மக்களின் மகள். ஆமா, தொடர்கள் மூலமா தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் வாழும் மகளா வாழ்ந்துக்கிட்டிருக்கேன்னா பார்த்துக்கோங்க.''

`` `சமையல் மந்திரம்' நிகழ்ச்சியிலிருந்து ஏன் விலகுனீங்க?''

``வாழ்க்கையில நாம வளருணும்னா ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கக் கூடாது. சவாலாவே இருந்தாலும் வித்தியாசமான சவாலா இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யப்படும். நமக்கான தளங்கள் நாடு முழுக்கக் காத்திருக்கும்போது நாம ஏன் ஒரே இடத்துல இருக்கணும்? அந்த நிகழ்ச்சியைவிட்டுதான் விலகினேனே தவிர, மீடியாவின் அத்தனை அப்டேட்டும் ஃபிங்கர் டிப்ல இருக்கு. வெள்ளித்திரை உள்பட. இப்போ `குலேபகாவலி' படத்துல மொட்டை ராஜேந்திரன் சாருக்கு மனைவியா நடிக்கிறேன். திரைத்துறையில் தடம் பதிக்காம விட மாட்டா இந்த திவ்யா!''

``நடிப்பு தவிர்த்து வேற என்னெல்லாம் பண்றீங்க?"

``என்னைப் பற்றி நானே சொல்லிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்றேன்... நான் 24 மணி நேரமும் பிஸி. எவ்வளவுக்கு எவ்வளவு பிஸியா இருக்கோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம். ஆனா, ஏதோ ஒண்ணு என் மனசை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருந்தது. என்னடா... என்னடானு ரொம்ப நாளா யோசிச்சேன். `சமுதாயத்துக்கு நாம ஏதாவது செய்யணும். நம்மால் யாருக்காவது நல்லது நடக்கணும்'னு கொஞ்ச நாள் முன்னாடிதான் தோணுச்சு. நாலு பேருக்கு நாம நல்லது செஞ்சு அதனால அவங்க நம்மைக் கையெடுத்துக் கும்பிடும்போது, நமக்குள்ள எழும் பாருங்க ஒரு தன்னம்பிக்கை... அதுக்கு ஈடுஇணை எதுவுமே இல்லை. அப்பதான் நாமே நம்மைப் புரிஞ்சுப்போம்... நமக்குள்ளேயே நாம உயர்ந்து நிப்போம். இதை மனசுல வெச்சுதான் ஏதோ என்னால முடிஞ்ச உதவிகளை, வேண்டியவங்க/வேண்டாதவங்கன்னு பாகுபாடு பார்க்காம பண்ணிக்கிட்டிருக்கேன். அப்படி செய்ற சேவைக்கு ஒரு அடையாளம் வேணும்னுதான் `ஶ்ரீ ஆரோக்கியா ஹெல்த் & எஜுகேஷன்'னு ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன். இதன் மூலம் படிக்க வசதியில்லாத பிள்ளைங்களுக்கு உதவி, தொழில் தொடங்க வசதி இல்லாதவங்களுக்கு என்னால் ஆன சிறு தொகையைக் கொடுக்கிறதோடு, அரசு உதவி பெறுவதற்கான சகலவிதமான உதவிகளையும் என் அறக்கட்டளை செய்துவருது. இதோடு, இலவசமா மருத்துவ உதவிகளையும் பண்றோம். தன்னார்வலர்களும் அவங்களால முடிஞ்ச உதவியைச் செய்றாங்க. இப்பதான் நான் பிறந்ததுக்கான பயனை அடைய ஆரம்பிச்சிருக்கேன்.''

``படிச்சாச்சு, நடிச்சாச்சு, சம்பாதிச்சாச்சு, பேர் புகழ் எல்லாம் சேர்த்தாச்சு... அப்புறம்?''

``நீங்க எங்க வர்றீங்கன்னு நல்ல புரியுது. எனக்கும் நிறைய லவ் புரப்போசல் வந்திருக்கு. ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணுவாங்க. அதுல ஒருத்தர் `திவ்யா ஐ லவ் யூ... ப்ளீஸ் ரிப்ளை பண்ணுமா! நீ ரிப்ளை பண்ணலைன்னா என் சாவுக்கு நீதான் காரணம்னு எழுதிவெச்சுட்டு செத்துருவேன்'னு அனுப்பியிருந்தார். அதைப் பார்த்துட்டு அன்னிக்கு முழு நாளும் சிரிச்சு சிரிச்சே டயர்டாகிட்டேன். காதல்கிறது கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடியது இல்லைங்கிறதையே அவர் இன்னும் தெரிஞ்சுக்கலை. `ஏதோ ஒரு இன்ஃபேச்சுவேஷன்ல பேசுறதெல்லாம் `புரப்போசல்' இல்லை'ன்னு ரிப்ளே அனுப்பிவெச்சேன். அதுக்கு அப்புறம்  அவர் லைன்லேயே காணும்.

பண்ணுவோம்... நாம செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் முடிச்சுட்டு, நமக்கான நல்ல உலகத்தை உருவாக்கிட்டு, அப்படியே நம்ம ஆளையும் தேர்ந்தெடுத்துட்டு, உங்களுக்கும் சொல்லி அனுப்புறேன். கல்யாணத்துக்கு கட்டாயம் வந்துடுங்க.''

``எதிர்கால திட்டம் என்ன?''

``பெற்றோரை இழந்த குழந்தைங்களைத் தத்தெடுக்கணும். அதுக்காகதான் இப்போ கடினமா உழைச்சிட்டிருக்கேன். அதே மாதிரி ஒரு ஏழை, கடைசி வரைக்கும் ஏழையாவே இருக்கான். அதை ஒழிக்கிறதுதான் என் லட்சியம், எதிர்காலம் எல்லாமே!''