Published:Updated:

`அண்டாவ காணோம்’ முதல் `ஆந்திரா மெஸ்’ வரை... - மிஸ் பண்ணக் கூடாத படங்கள்!

`அண்டாவ காணோம்’ முதல் `ஆந்திரா மெஸ்’ வரை... - மிஸ் பண்ணக் கூடாத படங்கள்!
`அண்டாவ காணோம்’ முதல் `ஆந்திரா மெஸ்’ வரை... - மிஸ் பண்ணக் கூடாத படங்கள்!

'உறியடி', 'துருவங்கள் பதினாறு', 'மாநகரம்', 'எட்டு தோட்டாக்கள்', 'ஒரு கிடாயின் கருணை மனு' என சமீபகால படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தனைக்கும் இந்தப் படங்களில் மிகப் பிரபலமான நட்சத்திரங்கள் இல்லை, பெரிய இயக்குநர்கள் இயக்கவில்லை, ஃபாரின் லொகேஷன் பாடல்கள் இல்லை, பிரமாண்டம் இல்லை, அதிக  பொருட்செலவும் இல்லை. இவை எல்லாவற்றையும் மீறி இந்தப் படங்களின் ட்ரீட்மெண்ட்டும், புத்துணர்ச்சியான கதைக்களமும் பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் இந்தப் படங்களைப் பற்றி பாசிட்டிவ் விஷயங்களைப் பரப்பியது படம் பார்த்த ரசிகர்கள்தான். இதே போல டிரெய்லர்/டீசர் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்து, எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் படங்களின் தொகுப்புதான் இது.

அண்டாவ காணோம்:

ஒரு அண்டாவை வைத்துக் கதை சொல்ல முடியுமா? அது காணாமல் போவதை வைத்தே கதை சொல்லலாம் என டிரெய்லர் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர் வேல்மணி. ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் இப்படத்தில் அண்டாவிற்கு வாய்ஸ் கொடுத்திருப்பது நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான டிரெய்லர்களில் இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

குரங்கு பொம்மை:

சமீபத்தில்தான் வெளியானது இந்தப் படத்தின் டிரெய்லர். படத்தின் களமும் கதை ஓட்டமும் வித்தியாசமாக இருக்கும் என டிரெய்லர் சொல்கிறது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்கள் இயக்கியவர் நித்திலன். இவர் இயக்கியதில் 'புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்' குறும்படம் பிரபலம். 'குரங்கு பொம்மை' பற்றி கேட்டால், "படத்தின் கதை ரொம்ப பழசுதான். எல்லோரும் பார்த்து பார்த்து பழகின கதை. சொல்லப் போனா அதைக் கதைனு கூட சொல்ல முடியாது. ஏன்னா ஒரு சம்பவம் நடக்கும், அதை வெச்சு செய்யும் ப்ளேயாதான் படம் நகரும்" என சொல்கிறார். விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், டி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சைனா:

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் ஹர்ஷவர்தனா இயக்கியிருக்கும் படம். கலையரசன், ரித்துவர்மா, டேனியல் ஆனி போப், யோக் ஜேப்பி நடித்திருக்கிறார்கள். பர்மா பஜாரில் கடைவைத்திருக்கும் கலையரசனுக்கு ஒரு பொருள் தேடிவருகிறது. அது என்ன பொருள், அதனால் என்ன ஆகிறது, அவனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. 

பண்டிகை:

சூழ்நிலை காரணமாக சட்ட விரோதமான சண்டை போட்டிக்கு தள்ளப்படும் ஒருவனின் மோதலும் - காதலும்தான், 'பண்டிகை' படத்தின் கதை. கிருஷ்ணா - ஆனந்தி நடித்திருக்கும் இப்படத்தை ஃபெரோஸ் இயக்கியிருக்கிறார். 

ஆந்திரா மெஸ்:

"தயவுசெஞ்சு எதையும் எதிர்பார்க்காதீங்க! நம்ம திரைக்கதை அமைப்பு ஹாலிவுட் ஸ்டைலான மூன்று அடுக்கு பாணியில்தான் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல அப்படி இல்லை. அவ்ளோ ஏன்... படத்துல கதையே இல்லை. வெறும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். ஒரு சைக்கலாஜிக்கல் பயணம்னு வெச்சுக்கங்களேன்" - இதுதான் படம் பற்றி இயக்குநர் ஜெய் கொடுக்கும் டிஸ்க்ரிப்ஷன்.  படத்திற்கு இசையமைத்திருப்பது சமீப மலையாள சினிமாக்களில் கவனம் ஈர்த்த (அனுராக கரிக்கின் வெள்ளம், அங்கமாலி டைரீஸ், சகாவு) பிரசாந்த் பிள்ளை. 

இரவுக்கு ஆயிரம் கண்கள்:

ஒரே நாளில் நடக்கும் கதை. ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்ளும் ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை மு.மாறன் இயக்கியிருக்கிறார். 

கிரகணம்:

இரண்டு வெவ்வேறு சம்பவங்களால் படத்தின் கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் தொடர்பும் அதன் விளைவுகளும்தான் கிரகணம் படத்தின் கதை. முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே நகரும்படியான படத்தை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இளன். கிருஷ்ணா, சந்திரன், நந்தினி, கருணாகரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இதில் நடித்திருக்கிறார்கள். 

திரி:

நாம் தினமும் சந்திக்கும், சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் அன்றாடப் பிரச்னை ஒன்றுதான் படத்தின் களம். டிரெய்லர் பார்க்கும் பொழுது கல்வியை மையப்படுத்தி ஒரு கதாநாயகன் சந்திக்கும் பிரச்னைகளும், அதன் விளைவுகளுமே திரி படத்தின் கதைக்களம் எனத் தெரிகிறது. அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் அஸ்வின், ஸ்வாதி, கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அழகப்பன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் ஜூலை 7ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

கூட்டத்தில் ஒருத்தன்:

லாஸ்ட் பெஞ்ச்சும் இல்லாமல், ஃபர்ஸ்ட் பெஞ்ச்சும் இல்லாமல் மிடில் பெஞ்ச் மாணவனைப் பற்றிய படம். எல்லாவற்றிலும் ஆவரேஜாக இருக்கும் ஒருவனைப்பற்றிய கதைதான் 'கூட்டத்தில் ஒருத்தன்'. இந்தப் படம் மூலம் த.செ.ஞானவேல் இயக்குநராக அறிமுகமாகிறார். அஷோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, அனுபமா குமார், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. 

ஒரு பக்க கதை: 

"21 வயசுல ஒரு பையன், ஒரு பொண்ணு. அவங்க ரெண்டு பேருக்குள்ள நிகழும் ஒரு விஷயம், அவங்க லைஃபை எப்படியெல்லாம் புரட்டிப்போடுது; அதை இந்த உலகம் எப்படிப் புரிஞ்சுக்குது... அதான் 'ஒரு பக்க கதை’" என்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோ. ஹீரோயின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' நாயகி மேகா ஆகாஷ்.

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நிறைய நல்ல, தரமான படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து ஆதரவு தந்தால், சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ எல்லாம் தாண்டி மிக மிக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.