Published:Updated:

பச்சை டிராகனைக் காப்பாற்றப் போராடும் குட்டிச் சிறுவன்! #PetesDragon

சுரேஷ் கண்ணன்
பச்சை டிராகனைக் காப்பாற்றப் போராடும் குட்டிச் சிறுவன்! #PetesDragon
பச்சை டிராகனைக் காப்பாற்றப் போராடும் குட்டிச் சிறுவன்! #PetesDragon

ஒரு சிறுவன், பச்சை நிற டிராகன் இரண்டு பேருக்குமான அன்பை நெகிழ்ச்சியோடும் சுவாரசியத்தோடும் சித்தரிக்கும் Pet's dragon.. டிராகன்கள் கொடூரமானவை என்கிற கதைகள் வரிசை கட்டிவருகின்றன. அப்படியெல்லாமல் இல்லை, உயிரினங்கள் எல்லமே அன்பானவை, மனிதர்கள்தான் அவற்றின் வசிப்பிடங்களை அழித்து துன்புறுத்துகிறார்கள் என்கிற உண்மையை ஃபேண்டஸியாகச் சொல்லும் படம் இது.

ஐந்து வயது சிறுவனான பீட், தனது பெற்றோர்களுடன் சாகசப் பயணமாக வனத்துக்குள் செல்கிறான். வழியில் ஏற்படும் விபத்தில், பெற்றோர் இறந்துவிட, காட்டின் தனிமையில் கிடக்கிறான். கரடி ஒன்று அவனைத் தாக்க வரும்போது, மிகப் பெரிய உருவம் வந்து அவனைக் காப்பாற்றுகிறது. அது பச்சை நிற டிராகன். பறக்கவும், தேவைப்படும்போது மாயமாக மறையவும் தெரிந்த டிராகன் அது.

கதைப் புத்தகத்தில் வாசித்த நினைவில், அந்த டிராகனுக்கு 'எலியட்' என்று பெயர் வைக்கிறான் பீட். வருடங்கள் கடக்கின்றன. இப்போது, சிறுவனின் வயது 11. அவனும் டிராகனும் நட்புடன் பழகுகிறார்கள். மனித நடமாட்டமில்லாத அந்த வனத்தில் பயங்கர லூட்டி அடிக்கிறார்கள். அந்தச் சமயத்தில், காட்டுக்குள் வருகிறாள் ஒரு பெண். அவள் பெயர் கிரேஸ். வன இலாகா அதிகாரி. வனங்கள் அழியக்கூடாது என்பதில் அக்கறைக்கொண்டவள். அவளை ஒளிந்திருந்து பார்க்கிறான் பீட்.

கிரேஸின் மகள் நட்டாலியா. காட்டுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவனைக் கண்டு வியக்கிறாள். அவனைப் பின்தொடர்கிறாள். பீட் பயந்து ஒளிகிறான். இருவருக்கும் நடக்கும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டின்போது, நடக்கும் ஓர் ஆபத்திலிருந்து சிறுமியைக் காப்பாற்றும் பீட், காயப்பட்டு மயங்கி விழுகிறான். கிரேஸ் அவனை வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்கிறாள். அதேநேரம், சிறுவனைக் காணாமல் டிராகன் தவித்துவிடுகிறது. மருத்துவமனையில் கண் விழிக்கும் சிறுவனும், டிராகனை காணாமல் பதற்றமடைகிறான். மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடுகிறான். இன்னொரு பக்கம், டிராகனை அழிப்பதற்காக சிலர் ஆவேசமாக வனத்துக்குள் செல்கிறார்கள். சிறுவனுக்கும் டிராகனுக்கும் என்னவானது, அவர்கள் மறுபடியும் இணைந்தார்களா என்பதை பரபரப்பான காட்சிகளின் வழியாக சொல்லியிருக்கிறார்கள்.

சிறுவன் பீட் வேடத்தில் Oakes Fegley அற்புதமாக நடித்திருக்கிறான். டிராகனுடன் இருக்கும்போது அடைகிற குதூகலத்தையும், நகரத்தின் புதிய சூழலுக்குள் பொருந்த முடியாமல் தவிப்பதையும், கிரேஸ் குடும்பத்துடன் ஏற்படுகிற அன்பையும் தன் அபாரமான முகபாவங்களால் வெளிப்படுத்தியுள்ளான். கிரேஸாக நடித்திருக்கும் Bryce Dallas Howard மற்றும் நட்டாலியாவாக வரும் சிறுமியும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். டேவிட் லோரே (David Lowery) படத்தை இயக்கியிருக்கிறார்.

இதுபோன்ற ஃபேண்டஸி படங்களின் ஆதாரமான அம்சம், வரைகலை நுட்பம். டிராகனின் அசைவுகளை நிஜம்போல உருவாக்க வேண்டும். இந்தக் கற்பனைக்கு ஏற்ப ஈடுகொடுத்து நிஜக் கலைஞர்கள் நடிப்பை நிகழ்த்த வேண்டும். இந்தத் திரைப்படத்தில் இது மிக அற்புதமான ஒத்திசைவுடன் உருவாகியுள்ளது. காட்சிகளுக்குத் தேவையான அளவுக்கே கிராபிக்ஸ் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவனைத் தேடிக்கொண்டு நகரத்துக்கு வரும் டிராகன், கிரேஸின் குடும்பத்துடன் அவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, காட்டுக்கே திரும்பிவிடுவது நெகிழ்ச்சியான காட்சி. பேராசைக்காரர்களிடம் சிறைப்படும் டிராகனை, பீட்டும் நட்டாலியாவும் இணைந்து மீட்பது சுவாரசியமானவை. சிறுவனும் டிராகனும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்துமே அற்புதமான கற்பனை.

மனிதர்களால் கொடூரமாகச் சித்தரிக்கப்படும், கற்பனை செய்யப்படும் உயிரினங்கள், உண்மையில் அப்படியல்ல. அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளைக்கொண்டவை என்கிற அற்புதமான செய்தியை பதிவுசெய்கிறது இந்தத் திரைப்படம். இது, உயிரினங்கள்மீது குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சம், அருவெருப்பு சார்ந்த எண்ணங்களை மாற்றும்.

பல விருதுகளைப் பெற்றுள்ள இத்திரைப்படம், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. குழந்தைகளுடன் இணைந்து பார்க்க வேண்டிய திரைப்படம்.