Published:Updated:

ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம்
ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம்

​காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’. 

கார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா. நகரச் சுழலில் ஜெயம்ரவி படும் திண்டாட்டம், சதித்திட்டம் தீட்டும் அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் யாருடையது, ஜெயம்ரவியின் மீது சயிஷாவிற்கு ஏன் காதலும் புரிதலும் வந்தது, அந்தப் பழங்குயின மக்களின் நிலை என்னவானது என்பதுதான் கதை. 

ஜெயம்ரவி பக்கா ஃபிட். காட்டுமனிதனாக முரட்டு உருவத்துடன் மிரட்டுகிறார். மரங்களில் அசால்டாகத் தாவுவது, புரட்டிப் போட்டு எல்லோரையும் அடிப்பது, சயிஷாவிற்கு மட்டும் கட்டுப்படுவது என ஒரிஜினல் காட்டுத்தனம். ஜெயம்ரவிக்கு வசனம் குறைவு என்பதால் நடிப்பதற்கான ஸ்கோப் இல்லை. ஆனால், சின்னச் சின்ன மேனரிஸங்கள் மூலம் சுவாரஸ்யம் காட்டுகிறார். கூடவே ஆக்‌ஷன் காட்சிகளில் மெர்சல் காட்டுகிறார்.  

ஜெயம்ரவிக்கும் சேர்த்து, நிறையவே வச​ன​ங்கள் பேசுகிறார் நாயகி சயிஷா. டிஜிட்டல் தமிழச்சிக்கான கெத்தும், ‘எலைட்’ மனுஷிக்கான தோரணையும் என பளிச்சிடுகிறார். முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடனமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. ‘டேம் டேம்..’ பாடலில் இவரின் நடனத்திற்கு ஆயிரம் லைக்ஸ். காட்டுக்குள் உருண்டு புரண்டாலும் மேக்கப்புடன் ஃப்ரெஷாகவே இருப்ப​தற்கு​ டிஸ்லைக்ஸ். 

‘சிட்டிக்குள்ள கூகுள் மேப்னா, காட்டுக்குள்ள ஈகிள் மேப்’ என்று சில இடங்களில் மட்டுமே தம்பிராமையா காமெடி தெரிகிறது.​ நெகட்டிவ்​ கேரக்டரா, பாஸிடிவ் கேரக்டரா என்ற குழப்பத்தில்​ ​ வரும் பிரகாஷ்ராஜ், அந்தக் கேரக்டருக்கு ஏற்ற உடலமைப்புடன் பொருந்தும் வேலராமமூர்த்தி என காஸ்டிங் குட்.

கா​ட்​டையும்​,​ காடுசார்ந்த இடங்களையும் அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் மக்கள் என வழக்கமான கான்செப்ட்தான். வசனங்களில் வலு இல்லை. காட்டுமனிதன் சிட்டிக்குள் வந்தால் என்னாவாகும் என்ற முதல்பாதி காட்சிகள் சுவாரஸ்யம். இருப்பினும் ‘டார்சான்’, ‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்’  போன்ற ஹாலிவுட் படங்கள் மனதிற்குள் வந்துபோவதையும் தவிர்க்கமுடியவில்லை. 'TARZAN'-ன் நடுவில் உள்ள நான்கு எழுத்துகளை மாற்றிப்போட்டு ‘ஜாரா’ என்று ஜெயம்ரவிக்கு பெயர்வைத்தது ஹாலிவுட் படத்திற்கே ட்ரிப்யூட் செய்துவிட்டார் இயக்குநர். 

டிவியில் வரும் புலி காட்சிகளை பார்த்துவிட்டு, நிஜத்தில் புலி வந்துவிட்டதென அம்பினால் டிவியை உடப்பது, நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு துப்புவது, ஏசி ரூம் பிடிக்காமல் ஜன்னலைத் திறந்துவைப்பது என்று சில காட்சிகள் ஓகே. புலி வரும் சி.ஜி காட்சிகள் நேர்த்தி. ஆனால், சில 500 ரூபாய் நோட்டுகளைப் புரட்டும் காட்சியைக் கூட சி.ஜியில் உருவாக்கியிருப்பது ஆர்வக்கோளாறு. 

‘மனிதர்களுடைய குணங்கள் இல்லாத சில மனிதர்களின் கதை....’ என ஆரம்பத்தில் இடம்பெறும் நாசரின் வாய்ஸ் ஓவரும், கடைசியில் 'உலகெங்கும் வாழும் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு சமர்ப்பணம்' என்ற டைட்டில் கார்டிலும் சொல்கிறார்கள். இந்த இரண்டும் நன்றாக இருக்கிறது. 'ஆதிவாசிகள்' என்ற பொருளடக்கத்தை 'கொஞ்சம் ஊறுகாய்' என்ற ரீதியிலேயே தொட்டிருக்கிறார்கள். முழுமையாக பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், பிரச்னையும் காட்சிப்படுத்தத் தவறிவிட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் 50-வது படம் என்பது எண்ணிக்கையில் ஓகே. ஆனால் ஒரே ஒரு பிஜிஎம் தவிர மற்ற இடங்களில் ஹாரிஸ் தென்படவில்லை. காடு சார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பதில் எலைட் இசைதான் ஒலிக்கிறது. ‘டேம் டேம்..’ ,‘யம்மா ஏ அழகம்மா..’ பாடல்கள்  ரசிக்கும் ரகம். சயிஷாவுக்கும், தம்பி ராமையாவுக்கும் காட்டில் உணவு தேடி ஜெயம் ரவி ஓடும்போது ஒலிக்கும் தபேலா சற்று ஆறுதல். ஆனாலும் காட்டுக்குள் ஆப்பிள், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி எப்படி ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பது மட்டும்​ இயக்குநருக்கே தெரிந்த ரகசியம். ​ 

மனிதர்களுடைய வாடையே படாத காட்டில் இருந்து வரும் மனிதன், இந்தப் பரபரப்பான நகரத்திற்குள் நுழைகிறார் என்பது ஹைவோல்டேஜ் ஒன்லைன். ஆனால், அதைத் திரைக்கதை வடிவத்திற்குள் கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் இயக்குநர் விஜய். 

பட்டணம் ரஷீதின் ஒப்பனையில் அழகான ஜெயம் ரவி, அழுக்கு முகத்துடன் 'பளிச்'சென பதிகிறார். காவ்யாவின் இண்டஸ்டிரி, காடு என ஏரியல் வ்யூக்களில் திருநாவுக்கரசின் கேமரா க்ளியர்!  

சக ஆதிவாசிகள் குரங்குபோல நெஞ்சில் அடித்துக்கொள்வது, மரம் ஏறுவது, தாவுவது, குதிப்பது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, ஆதிவாசிகளின் அடிப்படை இயல்புகளைக்கூட இயக்குநர் ஆய்வு செய்யவில்லை என்பது தெரிகிறது. எமோஷனலாக மனதில் நச்செனப் பதியவேண்டிய படம். ஆனால், அண்ணன் மகளைக் காண அலைந்துகொண்டிருக்கும் சித்தப்பா, போலீஸ்காரரின் மகளைப் புலியிடம் இருந்து காப்பாற்றுவது, செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் கணவன் - மனைவியை நேரில் சந்திக்கவைத்து சேர்த்து வைப்பது, இதற்கு நடுவே இரண்டு பாடல்கள் வேறு, என ​பல​ காட்சிகள் வலிந்து திணித்த ரகம்.​ போலீஸ், ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் என்று எல்லாரையுமே பணக்காரர்கள் ஏவலுக்கு வேலை செய்யும் ரகங்களாகக் காட்டியிருப்பது சினிமாத்தனம்.​ 

புகழ், போட்டி, பொறாமை, வஞ்சம், வறுமை என்று எதுவும் இந்தக் காட்டுநாயகனான வனமகனுக்குத் தெரியாது​ என்கிறார்கள்​. அத்தோடு கதையும் தெரியாமல் போனதுதான் கொஞ்சம் நெருடல். ஆதிவாசிகள்... அவர்கள் இருப்பிடத்திற்கு வரும் ஆபத்து, இறுதியில் சுபம் என்ற வழக்கமான கதைதான் என்றாலும்​ இந்த​ ‘வனமக​னுடன் காட்டுக்குள் ஒரு வலம் வரலாம்.

பின் செல்ல