Published:Updated:

அல்லு அர்ஜுன் ஓ.கே... அப்போ மத்ததெல்லாம்?! #DJ

அல்லு அர்ஜுன் ஓ.கே... அப்போ மத்ததெல்லாம்?! #DJ
அல்லு அர்ஜுன் ஓ.கே... அப்போ மத்ததெல்லாம்?! #DJ

அல்லு அர்ஜுன் ஓ.கே... அப்போ மத்ததெல்லாம்?! #DJ

“கண்ணுக்கு முன்னால அநியாயம் நடக்கும் போது, பார்த்துட்டு எப்படி சும்மா இருக்கறது" என்கிற ஒரு ஃபார்மேட்தான் பல மாஸ் மசாலாக்களுக்கு அஸ்திவாரம். இதையே இரண்டு டைப்பாக பிரிக்கலாம், பொட்டிக்கடையில் கூல்ட்ரிங்க்ஸுக்கு 2 ரூபாய் அதிகமாக கேட்டார்கள் என்கிற அநியாத்தைத் தட்டிக் கேட்கும் 'எவனோ ஒருவன்' மாதவன் ஒரு டைப். இன்னொன்று சகல தப்புகளையும் செய்யும் ஒருவனை அல்டிமேட் வில்லனாக எடுத்துக் கொண்டோ, அல்லது அவனுடன் எதோ ஒரு சூழலில் எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டோ, வில்லனுடன் மோதும் ஹீரோ இன்னொரு டைப். இதில் இரண்டாவது டைப்தான் பெரும்பாலும் ஹிட் படமாக மாறும். இன்று டாப் ஸ்டார்களாக பல மொழிகளிலும் உருவாகியிருக்கும் எல்லோரும் இப்படியான மாஸ் சப்ஜெக்டில் நடித்திருப்பார்கள். அல்லு அர்ஜுன் கூட முந்தைய படத்தில் (சரைனோடு) இதே மாதிரி ஒரு ரோலில்தான் நடித்திருப்பார். 'துவ்வாட ஜெகன்னாதம்' படமும் இதில் இரண்டாம் டைப் படம்தான்.

'துஷ்ட சிக்‌ஷனா'  - தீயது தண்டிக்கப்படும் என்ற லைன்தான் படத்தினுடையது. அக்ரஹாரத்தில் வசிக்கும் துவ்வாட ஜெகன்னாதம் (எ) டிஜே (அல்லு அர்ஜுன்), தப்பு செய்பவர்கள்  தண்டிக்கப்பட வேண்டும் என்கிற மனநிலை கொண்டவன். அன்னபூர்ணா கேட்ரிங்ஸ் நடத்தும்போது அன்பான ஜெகன்னாதமாகவும், லோக்கல் காவல்துறை அதிகாரி முரளி ஷர்மா உதவியுடன் கிரிமினல்களைக் கொல்லும் அடங்காத டிகேவாகவும் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் ராயல நாயுடுவை (ராவ் ரமேஷ்) எதிர்க்க நேரிடுகிறது. இதற்கு நடுவில் நடக்கும் காதல், காமெடி, பாட்டு, ஆட்டம், சென்டிமென்ட், சண்டைக்காட்சிகள்தான் படம்.

அல்லு அர்ஜுன் படங்களுக்கு என எப்போதும் ஒரு சிறப்பு உண்டு. படத்தில் என்ன இருக்கிறதோ, என்ன இல்லையோ உங்களைத் தனி ஆளாக என்டெர்டெய்ன் செய்ய அல்லு மட்டும் இருப்பார். துவ்வாட ஜெகன்னாதம் பொறுத்தவரையில் அது மறுபடி ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. "சிகரெட்டு, மந்து ஆரோக்யானிக்கி சீத்தா... சீத்தஸ்யா... சீத்தோபவா" என படத்தின் ஹெல்த் அட்வைசரியில் துவங்கி முழுப்படத்தையும் கதகதப்பாக வைத்திருப்பது அல்லு அர்ஜுன்தான். படமும் அவரை மட்டுமே ஃபோக்கஸ் செய்து நகர்வதால் வேறு யாருக்கும் பெரிய வேலை எதுவும் இல்லை. 'முகமூடி', 'முகுந்தா முராரி', 'மொஹஞ்ச தாரோ' போல இந்தப் படமும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு சரிவுதான். படத்தின் க்ளாமர் காட்சிகளுக்கும், பாடலுக்கு மட்டுமே பயன்படும் ரோல்தான். படத்தின் மெய்ன் வில்லன் ராவ் ரமேஷுக்கே கூட "ஓ என்னையவே கொன்னுடுவியா, ஐ வெய்ட்டிங்' என சுமாரான டயலாக் பேசும் வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தோளில் இருக்கும் துண்டை உதறி  உதறி பன்ச் பேசுவது, ருத்ராட்சத்தைக் கழற்றி வைத்துவிட்டு அடியாட்களைப் பறக்கவிடுவது தவிர வலுவான மாஸ் படத்திற்கு அவசியமான எந்த விஷயமும் உள்ளே கிடையாது. இவ்வளவு பலமான ஹீரோவுக்கு வில்லன்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ராவ் ரமேஷ் கதாபாத்திரம் மிகப் பலவீனமாக இருக்கிறது. அல்லு அர்ஜுன் சொல்லும் ஆவி கதைகளை நம்பு அளவுக்கு அப்பாவியாக இருக்கும் வில்லனின் மகன் சுப்பாராஜு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிக்க வைத்தாலும் நம்பவே முடியாதது (படத்தில் பலகாட்சிகள் அப்படித்தான்). அல்லுவின் ஸ்லோமோஷன்களுக்கு மாஸ் ஃபீல் கொடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நன்று. பாடல்கள் கலாட்டாவாக இருந்தாலும் படத்தில் தேவையே இல்லாத இடங்களில் இருப்பது எரிச்சலூட்டுகிறது. ராம்-லக்‌ஷ்மணின் சண்டை வடிவமைப்பு மிரட்டல். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக்காட்சி பாராட்டுக்குரியது. 

படத்தில் ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ், சென்டிமென்ட், காதல் எல்லாவற்றையும் அல்லு அர்ஜுன் மட்டுமே வெளிப்படுத்தும் படி எழுதியிருக்கும் இயக்குநர் ஹரீஷ் ஷங்கரின் கதை, திரைக்கதைதான் மிகப் பெரிய மைனஸ். அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தில் காட்டிய மெனக்கெடலை, கதை மீதும் காட்டியிருந்தால் பக்கா ஆக்‌ஷன் என்டெர்டெய்னராக இருந்திருக்கும் இந்த டிஜே.

அடுத்த கட்டுரைக்கு