Published:Updated:

‘நான் விஜய் மாதிரி ஆகணும்!’ - ‘ரங்கூன்’ லல்லு

‘நான் விஜய் மாதிரி ஆகணும்!’ - ‘ரங்கூன்’  லல்லு
‘நான் விஜய் மாதிரி ஆகணும்!’ - ‘ரங்கூன்’ லல்லு

“சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் போது துண்டுச் சீட்டுல லெட்டர் எழுதி அதை தூது அனுப்பிவிட்டு விளையாடுற பழக்கம் என்னோட நண்பர்கள் வட்டத்துல இருந்துச்சு. அதை பார்த்துட்டு, 'இவன் லவ் லெட்டர் எழுதி அனுப்புறான்'னு எவனோப் புரளியை கெளப்பிவிட்டுட்டான். அதுதான் வாழ்க்கைல நான் சந்திச்ச முதல் அசிங்கம்” கலகலப்பாக பேசுகிறார் நடிகர் லல்லு. ‘ரங்கூன்’ ஹிட் இவருக்கு சினிமாவில் நெக்ஸ்ட் லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 

சினிமா என்ட்ரி எப்படி? 

“நடிகனாகணும்னுதான் விஸ்காம் சேர்ந்தேன். அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது நடிப்புக்கும், படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு. என்னோட படிச்சவங்க எல்லோருமே இப்போ சினிமாவில் டெக்னிஷியன்களா இருக்காங்க. எங்க கிளாஸ்ல யாரு கேமராவை தூக்கினாலும், முதல் ஆளா நடிக்கப் போய்டுவேன். நண்பர்கள் ஆதரவு இருந்ததுனால, நெறைய குறும்படங்களும் பண்ணேன். அதை பாத்துட்டு நடிகர் பார்த்திபன் சாரோட பொண்ணு கீர்த்தனா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துல எனக்கொரு வாய்ப்பு வாங்கித் தந்தாங்க. அதுதான் முதல் படம்”. 

ரங்கூன் வாய்ப்பு ? 

“‘ரங்கூன்’ வாய்ப்புக்காக ரெண்டு வருஷம் காத்திருந்தேன். அந்த கேப்ல ‘8 தோட்டாக்கள்’ , ‘சென்னை 28- பார்ட் 2’ படங்கள்ல நடிச்சேன். சில படங்கள்ல சின்ன ரோல்ல தலைகாட்டியிருப்பேன். அதையே, "மச்சான்...நான்  நடிச்சிருக்கேன்..படம் பாருங்கடா'ன்னு சொல்வேன். அவங்களும் ஃபேமிலியோட போய்ட்டுவந்து, "மச்சான்...என்னடா...நீ ரெண்டு நிமிஷம் கூட வரல...ஸ்க்ரீன்ல இப்டி வந்துட்டு, அப்டி போறதெல்லாம் ஒரு விஷயமாடா..."ன்னு கேக்கும் போது  ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனால், அவங்க இப்போ ரங்கூன் படத்துல ரெண்டாவது லீட் ரோல் நடிச்சதை  நெனைச்சு ரொம்ப சந்தோஷப்படுறாங்க. கூடவே இந்தப் படத்துல ஒரு பாட்டும் எழுதியிருக்கேன்.” 

குடும்பம் பற்றி? 

“திருவண்ணாமலை பக்கம், வேட்டவலம்தான் சொந்த ஊர். அப்பா எக்ஸ் ஆர்மி, அம்மா டெய்லர். வீட்ல எல்லாருமே விஜய் ரசிகர்கள். விஜய் படங்களை எப்போ பார்க்க ஆரம்பிச்சேனோ, அப்போ இருந்தே நடிக்குற ஆர்வமே அதிகமாகிடுச்சு. விஜய் சார் படத்துல வர முதல் பாடல் எப்போதுமே எனக்கு மோட்டிவேஷன்தான். மக்களுக்கான கதாப்பாத்திரங்களில் அதிகமா நடிக்குறாரு. விஜய் சார் மாதிரி பெரிய நடிகனாகணுங்கிறதுதான் என் கனவே”. 

ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள்? 

“ஹீரோ அல்லாத சில கேரக்டர்களில் நடிக்குற ஆர்ட்டிஸ்ட்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சில சிரமங்கள் இருக்கும். குறிப்பா நமக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல்  இருக்கும். உதாரணத்துக்கு ‘ ரங்கூன்’ படத்துல, பீச்ல செத்துக் கிடக்குற மாதிரியான ஒரு சீன். அங்க நான் படுத்துக்கிடக்கும் போது அலை அடிச்சுட்டுப்போக கல்லுல போய் மோதிட்டேன். சீன் முடுஞ்சதும் டவல் கேட்டேன். ஆனா யாருமே எனக்குக் கொடுக்கலை. ஆனா எல்லா இடத்திலும் ஹீரோவுக்கு தனிக் கவனிப்பா இருக்கும். இதையெல்லாம் சவாலாதான் எடுத்துக்கிட்டேன். இப்போதைக்கு நல்ல கேரக்டரில் நடிக்கணும், அப்புறம் ஹீரோவாகணும் அவ்வளவுதான்”.

அடுத்து?

“இதுவரைக்கும் எந்தப் பட வாய்ப்புகளும் கிடைக்கலை. நான் எனக்கானக் கதையைத் தேடி போலாம்'னு நினைக்குறேன். சினிமா நபர்களைச் சந்தித்துப் பேசி  பல விஷயங்களைக் கத்துக்கணும். குறிப்பா பாடல்கள், சிறுகதைகள் நிறைய எழுதணும். அதுமட்டுமல்லாம சவால்கள் நிறைந்தக் கேரக்டர்ல நடிக்கணும் இவ்வளவுதாங்க என் கனவே” என்றார் புன்னகைக்கிறார் நடிகர் லல்லு.”