Published:Updated:

'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி.

'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி.
'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி.

``ஆளுமையை அளக்கும் ஸ்கேல் என்கிட்ட இல்லை. ஆளுமைகளைத் தேடிப் போய் போட்டோ எடுக்கணும் என்ற ஆசையும் எனக்குக் கிடையாது. நான் தினமும் பார்க்கும் சராசரி மக்களைத் தேடித்தான் என் கேமரா போகுது” இப்படிச் சொல்வது 17 வயது குறும்பட இயக்குநர் வம்சி. ஓவியம், புகைப்படம், குறும்படம் என முப்பரிமாண வளர்ச்சிதான் இவரின் அடையாளம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் `கருணையினால்தான்' சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்ட  `வலி' குறும்படம் மூலம் ஊடகக் கவனத்தை ஈர்த்த இயக்குநர் வம்சியை, திருவண்ணாமலையில் சந்தித்துப் பேசினோம். துறுதுறு தேகத்தோடும் பனித்த கண்களோடும்  வேகமாகப் பதில் சொல்லத் தொடங்கினார் வம்சி.

``படம் வரைய எப்படி ஆர்வம் வந்துச்சு?''

``சின்ன வயசுல, எல்லோருக்கும் பட வரைய ஆசை இருக்கும். அப்படித்தான் எனக்கும் ஆசை இருந்துச்சு. படம் வரையத்  தொடங்கினேன்.  வீட்டுல எல்லோரும் என்னை ஊக்குவிச்சாங்க.  நான் ரெண்டாம் வகுப்பு படிச்சுட்டிருந்தேன்.  என்னோட பெரியம்மா மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயின் மகள் சுகானா அக்கா, `எதிர்பாராமல் பெய்த மழை'னு ஒரு புக்கை மொழிபெயர்ப்பு செஞ்சாங்க. அதோட அட்டைப்படத்துல  குழந்தைத்தன்மையோடு ஒரு ஓவியம் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சாங்க.  அப்ப கிடைச்ச அந்த வாய்ப்புதான் என் முதல் அடையாளம்.”

``போட்டோகிராஃபி  பக்கம் எப்ப திரும்புனீங்க?''
 
 “வீட்டுல சின்ன டிஜிட்டல் கேமரா இருந்துச்சு. அதுல அடுக்கடி போட்டோ  எடுப்பேன். அது பிளாக் அண்ட் ஒயிட் மோடுலதான் இருக்கும். சில நேரம் ஆரஞ்சு கலர் மோடுல மாத்துவேன். சொந்தக்காரங்க மேரேஜுக்குப் போகும்போது கொஞ்சம் வித்தியாசமான போட்டோக்களை எடுக்கத் தொடங்கினேன். எல்லாரும் நான் எடுக்கிற போட்டோக்களைப் பார்த்துட்டுப் பாராட்டத் தொடங்கினாங்க. எனக்கு படம் வரைவதைவிட போட்டோ எடுக்கிறது ஈஸியா இருந்துச்சு. நினைச்சதை வெளியே கொண்டுவர, ஓவியமா இருந்தால் என்ன... போட்டோவா இருந்தால் என்ன?  சென்னையில்  சீனிவாசன் சார்னு ஒரு நண்பர் இருக்கார். அவர் ரூம்லதான் அடிக்கடி  தங்குவேன். அவர் என்ன காரணத்தினாலயோ, என்னை `குரு'னுதான் கூப்பிடுவார். ஒருநாள் `குரு நாம கேமரா வாங்கப் போலாமா? கேனான் 1100 ஆஃபர்ல போட்டிருக்காங்க'ன்னு  கூட்டிட்டுப் போய் கேமரா வாங்கிக் கொடுத்தார். `இந்தா குரு, இப்போ  போட்டோ எடு’னு கேமராவை  என் கையில கொடுத்தார். முதல் போட்டோ அவரைத்தான் எடுத்தேன். அப்போ நான் ஒன்பதாவது படிச்சுட்டிருந்தேன். சீனிவாசன் சார், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னோட உந்துசக்தியே அவர்தான்.”

``உங்க கேமரா ஃப்ளாஷ் லைட், இதுவரை எந்தெந்த ஆளுமைகள் மேல பட்டிருக்கு?''

``உண்மையைச் சொல்லணும்னா, நான் கேமராவுல ஃப்ளாஷ் லைட் போடுறதே கிடையாது. ஆளுமைனு ஒருத்தரையும் தேடிப் போய் போட்டோ  எடுத்ததும் கிடையாது. ஆளுமையை எந்த ஸ்கேல் வெச்சு அளக்கிறதுனும் எனக்குத் தெரியாது. எனக்குப்  பிடிச்சு, நான் எடுக்கிற போட்டோக்கள் சாமானிய மக்களோடது. அதுலயும் ஒரு பாட்டி கையை நீட்டி பிச்சைக் கேட்டுட்டிருப்பாங்க. அவங்க பக்கத்துல சர்க்கரை பொங்கல் தொன்னை கீழே சிந்திகிடக்கும். அப்படி சாதாரண மனுஷங்க, ஊருல கண்ணுல தெரியுற அடிதட்டு மக்கள்தான் எனக்கு ஆளுமையா தெரியுறாங்க. அவங்களைத் தேடித்தான் என் கேமராவும் போகுது.”

 ``இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்திருக்கீங்க?''

``குருவி, தன் குஞ்சுகளுக்குப் பறக்கக் கத்துக்குடுக்கிறது, குருவி முட்டை பொரிக்கிறதுனு ஒண்ணு ரெண்டு எடுத்திருக்கேன்.  அடுத்து `வலி'னு குறும்படம். எங்க அப்பா பவா செல்லத்துரை, ஒருக்கா  `கதை கேட்க வாங்க’ நிகழ்ச்சில பிரபஞ்சன் சாரோட `கருணையினால்தான்' என்ற சிறுகதையைச் சொன்னாங்க. அதைக் கேட்கும்போதே இதை ஒரு குறும்படமா எடுத்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். ரெண்டு மாசம் அந்தக் கதை உள்ளுக்குள்ளே ஓடிட்டிருந்துச்சு.  இது நடந்தது, நான் ப்ளஸ் ஒன் படிக்கும்போது. ப்ளஸ் டூ போறதுக்கு முன்னாடி இதைக் குறும்படமா எடுத்திடணும்னு முடிவுபண்ணினேன். வீட்டுக்கு வந்து ஸ்க்ரீன் பிளே எழுதிட்டு, ஸ்டோரி போர்டு ரெடி பண்ணிட்டு எழுத்தாளர் பிரபஞ்சன் சார்கிட்ட  பெர்மிஷன் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாம ஓகே சொன்னார். ப்ளஸ் டூ முதல் நாள்தான் எனக்குக் கடைசி நாள் ஷூட்டிங். எல்லோரும் ப்ளஸ் டூ-னா முதல் நாள் பயபக்தியா ஸ்கூலுக்குப் போவாங்க. நான் மறுநாள்தான் ஸ்கூலுக்குப் போனேன். டீச்சர் கேட்டதுக்கு `அம்மாவுக்கு உடம்பு சரியில்லை'னு பொய் சொன்னேன். படம் முடிக்க பத்து மாசம் ஆச்சு. லீவு நாள்ல அடிக்கடி சென்னைக்குப் போய், படத்துக்கான அடுத்தகட்ட வொர்க் பண்ணினேன்.

நான் எந்த இடத்துல `கருணையினால்தான்' கதையைக் கேட்டேனோ, அதே அப்பாவோடு `கதை கேட்க வாங்க' நிகழ்ச்சியில `வலி' படத்தைத் திரையிட்டேன். முதல்ல பிரபஞ்சன் சார்கிட்ட அவர் கதையை என் ஸ்க்ரிப்ட் வழியா சொன்னேன். `படத்தைப் பார்க்க முடியுமா?'னு கேட்டார். வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்ப் போட்டுக் காட்டினேன். நல்ல விமர்சனம் சொன்னார்.  டைரக்டர் ராஜுமுருகன், எழுத்தாளர் வண்ணதாசன் போன்ற பலரும்  `வலி ' படத்தைப் பார்த்துட்டுப் பாராட்டினாங்க. நான் புதுசா படம் எடுக்கிறதால் கொஞ்சம் லேட்டாகிடுச்சு. என் படத்துல நடிச்சவங்க  எல்லோரும் ஃபேமஸ் ஆக்டர் கிடையாது. படம் எடுத்து முடிக்க மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. அந்தப் பணத்தை என்னோட அப்பா, அம்மா, பெரியம்மா, ஃப்ரெண்ட்ஸ்தான் கொடுத்தாங்க. தனியா சென்னைக்குப் போய் படத்தின் பின்னணி வேலைகளைச் செய்து  படத்தை முடிச்சேன்.  `ரெவனெட் டாக்கீஸ்' என்ற என்னோட பேனர்ல `வலி' படத்தை வெளியிட்டேன். `இனிமேலும்  என்னோட எந்தக் கதையை வேணும்னாலும் படமா எடுத்துக்கோ' என்று பிரபஞ்சன் சார் அனுமதி கொடுத்திருக்கார்.''

``படம் எடுக்கிறதுக்கு முன்னாடி பல மொழி சினிமாக்களைப் பார்க்கணும், நிறைய புக் படிக்கணும்னு சொல்வாங்களே  நீங்க எப்படி?''

``எங்க கடையில உலக சினிமா சி.டி நிறைய இருக்கும். சின்ன வயசுலேயே ஹாலிவுட் படங்கள் நிறைய பார்ப்பேன். அம்மாவும் அப்பாவும்தான் `ஹாலிவுட் படத்தைப் பார்க்காதே'னு அந்த சி.டி-களைப் பிடிங்கி, `ஈரான் படங்களைப் பாரு'னு சி.டி-யைக் கொடுத்தாங்க. ஈரான் படங்களைப் பார்த்துதான்  வளர்ந்தேன். படம் எடுக்கிறதுக்கு எல்லா சினிமாவும் பார்க்கணுமான்னு எனக்குத்  தெரியாது. `ஷபி'னு ஒரு அண்ணன் ஷார்ட் ஃபிலிம் எடுக்கும்போது அவர் வொர்க் பண்றதைப் பார்த்திருக்கேன். ஒரு படத்தைப் பார்க்கும்போது எப்படி எடுத்திருக்காங்கனு பிரிச்சு பார்க்கத் தெரிஞ்சுது. அப்படி பார்த்துப் பார்த்துதான் படம் எடுத்தேன். நான் யார்கிட்டையும் உதவியாளரா இருந்ததில்லை. சின்ன வயசுலே இருந்தே அம்மா-அப்பாகிட்ட  ஜெயமோகன், ஜெயகாந்தன், கந்தர்வன் போன்ற பல எழுத்தாளர்களின் கதைகளைக்  கேட்டுதான் வளர்ந்தேன். இப்போதான் கொஞ்சம் புத்தம் வாசிக்கத் தொடங்கியிருக்கேன். டைரக்டர் மிஷ்கின்தான் சொல்வார், `ஒரு நாவல் படிக்கணும்னா ஒரு மரத்தைத் தேடிப் போங்க. சிறுகதைகள் நமக்கு ரொம்ப முக்கியம். மாணவர்களுக்கு வழிக்காட்ட டால்ஸ்டாய் மட்டும் போதும். வாழ்க்கையோட எந்த இருட்டுக்குப் போனாலும் டால்ஸ்டாய் உங்க பின்னாடி ஒரு விளக்கை எடுத்துட்டு வருவார்' னு. அதுபோன்ற கதைகளைத்தான் இப்போ படிச்சுட்டிருக்கேன்.''

``அடுத்தது என்ன?''

``ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கணும். அடுத்து புனே இன்ஸ்டிட்யூட்ல படிக்க ஆசை. இப்போ எழுத்தாளர் ராஜேந்திர சோழன் பற்றிய ஆவணப்படம் எடுக்குறேன். வொயில்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆகணும்கிறதுதான் என் ஆசை.''