Published:Updated:

‘என் பெயர் காஞ்சரமரம்’ - நாடகவிழாவில் கோணங்கி குறித்து மிஷ்கின் பெருமிதம்!

முத்து பகவத்
‘என் பெயர் காஞ்சரமரம்’ - நாடகவிழாவில் கோணங்கி குறித்து மிஷ்கின் பெருமிதம்!
‘என் பெயர் காஞ்சரமரம்’ - நாடகவிழாவில் கோணங்கி குறித்து மிஷ்கின் பெருமிதம்!

நொடிப்பொழுதில் நடிப்பு பிறந்து மறைந்தால் அது நாடகம். அதே நடிப்பைப் பதிவுசெய்து பிறகு காட்சிப்படுத்தினால் அது சினிமா. நாடகத்துக்கும் சினிமாவுக்குமான வேறுபாடு இதுதான். நாடகத்தின் அசூர நீட்சிதான்  இன்றைய சினிமா. ஆனால், சினிமாவை ரசிக்கும் அளவுக்கு நாடகத்தின் மீது நாட்டம் யாருக்கும் இல்லை. ஆனால், சினிமாவையும் தாண்டிய வித்தியாசமான உணர்வை நாடகம் தரும் என்பதுதான் உண்மை.

திரையில் பார்ப்பதைவிட, ஒருவரின் நடிப்பை நேரடியாகப் பார்க்கும்போது நிச்சயம் புது உணர்வையும் அனுபவத்தையும் தரும். அந்த நடிப்பு, நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்றும் நவீன நாடகங்களும் தெருக்கூத்துகளும் `குறிஞ்சிப்பூ'போல பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் ‘என் பெயர் காஞ்சரமரம்’ என்ற நவீன நாடகம் சென்னையில் நிகழ்த்தப்பட்டது.

நாம் வாசிக்கும் ஒரு புத்தகத்தை அப்படியே நாடகமாகப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? புத்தகம் படிக்கும்போது கொடுத்த அனுபவத்தை நாடகம் கொடுத்தால்..? கரிசல் நிலத்தின் முக்கிய எழுத்தாளரான கோணங்கியின் நாவலை மையமாகக்கொண்டுதான் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது. அருண்மொழி மற்றும் பகு இருவரும் இணைந்து இந்த நாடகத்தை இயக்க, 14 பேர் அதில் நடித்திருந்தனர். கடந்த நான்கு மாதப் பயிற்சியில் நாசர், முருகபூபதி உள்ளிட்ட பல கலைஞர்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு. 

மிஷ்கின், ரோகிணி, லட்சுமிராமகிருஷ்ணன், கிருத்திகா உதயநிதி, வசந்தபாலன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எழுத்தாளர் கோணங்கி உள்ளிட்ட பலர், சொன்ன நேரத்தில் ஆஜராகியிருந்தனர். பெசன்ட்நகர் உப்பு கலந்த ஜில் கடல் காற்று; மணியும் ஆறு ஆகிவிட்டது. ஆனால், நாடகம் மட்டும் தொடங்கப்படவில்லை. ‘வானம் இருட்டிய பிறகுதான் நாடகத்தைத் தொடங்குவோம்’ என்று நடிகர்கள் சொல்லிவிட, ‘என் பெயர் காஞ்சரமரம்’ பற்றி பேசத் தொடங்கினார் மிஷ்கின். 

“எனக்கும் கோணங்கிக்குமான முதல் அறிமுகம் ஒரு போத்தல் சாராயத்துடன் நிகழ்ந்தது. இரங்கல் கூட்டத்தில் இரண்டாவது சந்திப்பு. 400 பேர் இருந்த அரங்கில் மேடையில் பேச ஆரம்பித்தவர், ஒருகட்டத்தில் என்னைப் பார்த்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் இருந்த அனைவருமே எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். மூன்றாவது சந்திப்பில் நானும் கோணங்கியும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘அந்தக் கிழவன் சாகப்போகிறானேடா, நாம் போய்ப் பார்க்கவேண்டும்டா’ என்று சொன்னார். அந்தக் கிழவன் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அவர் சொன்ன மாதிரியே இரண்டு மாதங்களில் இறந்துவிட்டார். கோணங்கி, ஒரு கோடாங்கி. என் வாழ்க்கையில் பார்த்த மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர்.  நானும் கோணங்கியும் பதினைந்து நாள்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் செருப்பு இல்லாமல் போத்தல் சாராயத்தோடு நடைபோட வேண்டும் என்பதே என் ஆசை.”

காஞ்சர மரம் பற்றி மிஷ்கின்!

என் பாட்டிதான் எனக்கு முதன்முறையாக காஞ்சர இலையை  அறிமுகப்படுத்தினார். அப்போது எனக்கு ஐந்து வயது. ‘ரொம்ப விஷம். இதைச் சாப்பிடக் கூடாது’னு சொன்னார். மாட்டை அடிக்க பிரம்பு இதில்தான் செய்வார்கள். காஞ்சர இலையைச் சுடுநீரில் போட்டுக் குடித்தால் உடனே விஷம் ஏறும். அந்தக் காலத்தில் காஞ்சர இலையைக் குடித்தவர்களைப் பத்து பேர் அழுத்திப் பிடிக்க, மனிதமலத்தைக் கரைத்து வாயில் ஊற்றுவார்கள். அப்படிச் செய்யும்போது மறுபடியும் விஷம் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம்  அவர்களுக்கு வராது. காஞ்சரமரத்தில் பேய் தங்கும் என்பதில் தொடங்கி, பேய் ஓட்டவும் காஞ்சரக் குச்சுதான் உதவும். கோணங்கியும் காஞ்சரமரமும் சேரும்போது நிச்சயம் வேற மாதிரியான உணர்வைக் கொடுக்கும்” என்று மிஷ்கின் சொல்ல, நாடகம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியது. 

நாடக நிலம்: 

காற்றின் வேகம் கூடியது, இருள் சூழ்ந்தது, நாடகமும் தொடங்கியது. நாடகக் கலைஞர்கள் நம்மை வாசலிலிருந்தே மிருக வேடத்தில் அரங்குக்குள் அழைத்துச் சென்றனர். இரண்டு பக்கங்களும் தீப்பந்தம். அரங்குக்குள் அகல்விளக்குகள். தீப்பந்தத்திலிருந்து வரும் மணமும் அகல்விளக்கின் வாசமும் வித்தியாசமான சூழலுக்குள் இழுத்துச் சென்றன. நடிகர்களின் குரலும், இசையும், காற்றின் உரசலும் தவிர, எந்தச் சத்தமும் இல்லை. மிஷ்கினில் தொடங்கி தரையில் அமர்ந்திருந்தவர்கள் இருந்த இடத்திலிருந்தும் நகரவில்லை.

காஞ்சரமரம், அதைச் சுற்றிய வாழ்வு, கோயில் கொடை என ஒவ்வொரு நிகழ்வையும் கடந்தகால நினைவுகளையும் உடல்மொழிகளால் நிகழ்த்தினார்கள் நடிகர்கள். இதற்கு நடுவே தோன்றிய கோமாளி மற்றுமோர் ஆச்சர்யம். நிகழ்காலப் பிரச்னைகளான ஜல்லிக்கட்டில் தொடங்கி தமிழக அரசியல் வரையிலும் பேசிச் சென்றது ஈர்ப்பும் கலகலப்பும்.

டால்பி அட்மாஸ், ஆரோ 3டி தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான பல சினிமாக்களைத் திரையங்குகளில் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். நல்ல புத்தகமும் சினிமாவும் தரும் அனுபவத்தை, இந்த மாதிரியான நவீன நாடகங்களும் நிச்சயம் தரும். புதுப்புது அனுபவங்களைத் தேடும் மார்டன் யூத், நிச்சயம் இந்த நாடகங்கள் பக்கம் நடைபோடலாம்.

‘என் பெயர் காஞ்சரமரம்’, ஜூலை 2-ம் தேதி பெசன்ட்நகர் ஸ்பேஸில் மீண்டும் போடவிருக்கிறார்கள். பார்த்துவிட்டு, உங்கள் அனுபவத்தை முகப்புத்தகத்தில் எழுதலாம்.