அஜித், விக்ரம் இருவருமே ஐரோப்பாவில்!

அஜித், விக்ரம் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் `உல்லாசம்'.  அந்தப் படத்தில் இருவரும் ஶ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரியைத் துரத்தித் துரத்திக் காதலிப்பார்கள். கதாநாயகியாக நடித்த  மகேஸ்வரி, துணிக்கடை பிஸினஸில் பிஸி.  `உல்லாசம்' படத்தின்  இரட்டை நாயகர்களான அஜித்  `தல' என்ற புனைபெயருடனும், விக்ரம் `சீயான்' என்ற புனைபெயருடனும் தனித்தனி ரூட்டில் திரைப்பயணம் செய்துவருகின்றனர்.  1997-ம் ஆண்டு `உல்லாசம்' ரிலீஸானது.  அந்தப் படத்தில் நடித்தபோது இருவரும் மிகமிக நெருக்கமான நண்பர்களாக உலா வந்தனர். இப்போது 2017.  அதாவது அஜித் - விக்ரம் நட்புக்கு வயது 20 ஆண்டுகள் ஆகின்றன.

அஜித் ஐரோப்பா

சரண் இயக்கத்தில் `ஏறுமுகம்' எனப் பெயர் சூட்டப்பட்ட ஏவி.எம் நிறுவன திரைப்படத்தில்  நடிப்பதை ஏனோ அஜித் தவிர்த்தார் . அதன் பிறகு அதே படம் `ஜெமினி'யாக வெளிவந்து சக்கைபோடுபோட்டது.  விக்ரமின் திரை வாழ்வில் `ஜெமினி' ஏறுமுகமாக அமைந்தது. நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு  தற்போது இருவரும் அவரவர்  படங்களுக்கான படப்பிடிப்புக்காக ஐரோப்பாவில் இருக்கின்றனர். ஆம், அஜித் தன் `விவேகம்' படத்துக்காக பல்கேரியாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார். அதே ஐரோப்பாவின் இன்னொரு பகுதியில் கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் `துருவ நட்சத்திரம்'  படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

அஜித் நடித்துவரும் `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு, தொண்ணூறு விழுக்காடு முடிந்துவிட்டது.  `விவேகம்' படத்தில் ஹீரோ அஜித்தும், வில்லன் விவேக் ஓபராயும் மோதும் அதிபயங்கரமான சண்டைக்காட்சியை, ஒரு மாதத்துக்கு முன்பு பல்கேரியாவில் படமக்கினார் இயக்குநர் சிவா. அப்போது  சண்டைப்பயிற்சியில் விவேக் ஓபராய்க்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக விவேக்கை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு, `விவேகம்' படத்தில் இடம்பெறும் வேறுசில காட்சிகளைப் படமாக்கிவிட்டு தன் படக்குழுவோடு சென்னை திரும்பினார் சிவா. விவேக் ஓபராய் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணம் அடைந்ததால் அஜித்தும் ஓபராயும் இடம்பெறும் சண்டைக்காட்சியை மீண்டும் பல்கேரியாவில் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார் சிவா.  

vikram

தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களை  வித்தியாசமாக தன்  இயக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வரும்  இயக்குநர் கெளதம் மேனன். உதாரணத்துக்கு, கமலுக்கு `வேட்டையாடு விளையாடு' அஜித்துக்கு `என்னை அறிந்தால்' சிம்புவுக்கு `விண்ணைத் தாண்டி வருவாயா' என பட்டியல் நீளும். அதுபோல `துருவ நட்சத்திரம்' திரைப்படம் தன்னுடைய நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக அமையும் என்கிற நம்பிக்கையோடு ஹோம்வொர்க் செய்து நடித்துக்கொண்டிருக்கிறார் சீயான். ஐரோப்பாவில் படமாக்கிவரும் `துருவ நடத்திரம்' படத்தில் விக்ரமோடு பார்த்திபனும், சிம்ரனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஊட்டியில் ஒவ்வோர் இடத்தில் வெவ்வேறு ஹீரோக்களின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும். இப்போது ஐரோப்பாவும் அதுமாதிரி ஆகிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் `மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து தற்போது அஜித்தின் `விவேகம்', விக்ரமின் ``துருவ நட்சத்திரம்' படப்பிடிப்புகள் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கின்றன.      
                          

Do you like the story?

Please Appreciate the Author by clapping!