Published:Updated:

'கிடைச்ச வாய்ப்பை நழுவவிட்டேன்..!' - 'காதல்' விருச்சககாந்த்தின் தற்போதைய நிலை #VikatanExclusive

'கிடைச்ச வாய்ப்பை நழுவவிட்டேன்..!' -  'காதல்' விருச்சககாந்த்தின் தற்போதைய நிலை #VikatanExclusive
'கிடைச்ச வாய்ப்பை நழுவவிட்டேன்..!' - 'காதல்' விருச்சககாந்த்தின் தற்போதைய நிலை #VikatanExclusive

"என் ராசி விருச்சக ராசி சார். ஜோசியக்காரர் சொன்னாரு... விருச்சகத்தையும் காந்தையும் சேர்த்தா நான் பெரிய ஆளா வருவேன்னு சொன்னார் சார்... ஹீரோவா ஒரு ரவுண்டு வருவேன் சார்..."

"நடிச்சா ஹீரோ சார். நா வெய்ட் பண்றேன் சார்..."

"கொஞ்சம் அரசியல்... அப்புறம் சி.எம்... அப்புறம் டெல்லி... இது போதும் சார்."

இந்த வசனத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இன்றுவரை பிரபலமான மீம் டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த வசனத்தைப் பேசிய 'விருச்சககாந்த்' பாபு இப்போது என்ன செய்கிறார்... வடசென்னையின் ஒரு பகுதியான சூளையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சூளை அங்காளம்மன் கோவிலில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். 

சூளையில் ஒவ்வொரு தெருவின் முக்கிலும் அமைந்திருக்கும் சிறு கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம்தான் அவருக்கு ஆதாரம். அந்தப் பகுதிகளில் தேடிப் பார்த்தோம். 'பாய்ஸ்' படத்தில் செந்தில் சென்னையில் உள்ள கோயில்களில் பிரசாதம் கொடுக்கும் நேரத்தின் டேட்டாபேஸ் வைத்திருப்பதைப் போல, தினமும் 12 மணிக்கு அங்காளம்மன் கோவிலில் சாப்பாடு போடும் நேரத்திற்கு வந்தால் அவரைப் பார்த்துவிடலாம் என அங்கிருந்தவர்கள் சொன்னதையடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த நாள் சென்றோம். 

எதிர்பார்த்ததைப் போலவே கோவிலில் சாப்பிட்டுவிட்டு வந்தவரிடம் பேசினோம். குடும்பப் பின்னணி குறித்து விசாரித்தோம். அப்பா, அம்மா, கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர் என சூளையில் தான் அனைவரும் வசித்திருக்கிறார்கள். தாய், தந்தை மறைவுக்குப் பிறகு, அண்ணன், தம்பி, தங்கை எனக் குடும்பத்தில் சிலர் மனநலம் சரியில்லாமல் போயிருக்கிறார்கள். அக்காவுடன் சிலகாலம் இருந்தவர் இப்போது தனியாக ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டாண்டிலும் படுத்துறங்குகிறார். ஒரு அண்ணன் மட்டும் கூலி வேலைக்குப் போகிறாராம். பசியும், பட்டினியுமாக மனநிலை பிறழ்ந்தவரைப் போலச் சுற்றித் திரிகிறார். அந்தப் பகுதியின் கோவில் வாசல்களில் அமர்ந்திருப்பாராம். அந்தப் பகுதிவாசிகளுக்கு நன்கு பழகியவராக இருக்கிறார். அவர்கள் அவ்வப்போது சாப்பாடு கொடுத்து உதவுகிறார்களாம். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சிலநேரங்களில் தெளிவாகப் பேசுகிறார். 

'விருச்சககாந்த்' ஆக நமக்கு அறிமுகமான பாபுவிடம் பேசினோம். 
" 'காதல்' பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சது..?"
"பாலாஜி சக்திவேல் சாரோட அசிஸ்டென்ட் எங்க ஏரியாவுல இருக்குற ஒரு அண்ணனோட ஃப்ரெண்ட். அவர் மூலமாதான் என்னை நடிக்க வர்றியா கேட்டாங்க. நடிப்பு எல்லாம் எனக்கு வருமானு சந்தேகத்தோடதான் 'நடிச்சா ஹீரோதான் சார்...' சீன்ல நடிச்சுக் கொடுத்தேன். அந்த வசனத்துக்கு நான்தான் சரியா வருவேன்னு என்னை கரெக்டா புடிச்சாங்க. தானா கிடைச்ச வாய்ப்பை நான்தான் அதுக்கு அப்புறம் சரியா பயன்படுத்திக்கலை." 

" 'காதல்' படத்துக்குப் பிறகும் உங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்ததே..."
" 'காதல்' படம் நல்லா ஓடுனதும், அப்புறம் சில படங்கள்ல என்னையும் நடிக்க வரச் சொன்னாங்க. கொஞ்ச நாள் எல்லாம் நல்லாத்தான் போச்சு. விஜய்யோட 'வேட்டைக்காரன்' படத்துல நடிச்சேன். அதுல 'அந்தப் பொண்ணுதான நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு ஒரு டயலாக்தான் பேசுவேன். 'தூங்காநகரம்' படத்துல நடிச்சேன். அப்படி இப்படின்னு ஒரு பத்துப் படம் நடிச்சிருப்பேன். ஆனா, நான் ஒழுங்கா சினிமாவுல நடிச்சிருந்தா நிறைய படத்துல நடிச்சிருக்கலாம். தண்ணி, சிகரெட்னு கெட்ட பழக்கம் ஒட்டிக்கிச்சு. அதுனால மேற்கொண்டு படத்துக்கு என்னைத் தேடி ஆள் வர்றதில்லை. நானும் சில இடங்களுக்கு வாய்ப்புத் தேடிப் போனேன். யாரும் என்னை நடிக்க வரச் சொல்லலை." 

"நடிக்க வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க..?"
"நடிக்கப் போறதுக்கு முன்னாடி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்ற வேலை பார்த்தேன். பெரிய ஸ்பீக்கர்களுக்கு எல்லாம் பலகை வெச்சு பாக்ஸ் செய்வேன். படத்துல நடிக்கப் போனதுக்கு அப்புறம் அந்த வேலையை விட்டுட்டேன். வேற எந்த வேலையும் எனக்குத் தெரியாது. கோயில்ல சாப்பிட்டுக்கிட்டு, இங்கிட்டு சுத்துறேன். படத்துல நடிக்க ஆள் வேணும்னா இங்கதான் இருக்கேன்னு வரச் சொல்லுங்க..."

'காதல்' படத்தில் அப்பாவியாக சினிமா வாய்ப்பு தேடி ஏமாறும் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நிஜவாழ்க்கை அதைவிடத் துயர் மிகுந்ததாக இருக்கிறது. 'நடிச்சா ஹீரோதான்' என்றவரின் தற்போதைய நிலை நிலையாமையை வலியோடு நமக்கும் சொல்கிறது.