Published:Updated:

"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்!" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக்

"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்!" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக்
"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்!" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக்

ஊர் உலகம் எல்லாம் 'கபாலி' பீவரில் இருந்தபோது, 'பொண்டாட்டிடா' டப்ஷ்மாஸ் வீடியோவை வெளியிட்டு அசரடித்தவர் ஸ்ரீவித்யா விவேக். 'பொண்டாட்டின்னா பழைய படத்துல வரமாதிரி தழையத் தழையப் புடவைய கட்டிகிட்டு, தலை நிறைய பூவ வச்சுக்கிட்டு, நெத்தி நிறைய பொட்டு வெச்சுட்டு... ஏய், பொண்டாட்டி... அப்படினு கூப்டா... குடு குடுனு ஓடி வந்து, காலைப் புடிச்சுக்கிட்டு சொல்லுங்க அத்தான்... அப்படினு கேப்பாளே, அந்த மாதிரி பொண்டாட்டுனு நினைச்சியாடா..? பொண்டாட்டிடா' என கெத்தாகப் பேசி, ரஜினிகாந்த்தையே வியக்கவைத்தவர். ஸ்ரீவித்யாவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த், செல்ஃபியும் எடுக்கவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்த ஶ்ரீவித்யா இப்போது, 'ஸ்மூல் ஆப் விதுவிவேக்' என்கிற புது அவதாரம் எடுத்துள்ளார். 

விதுவிவேக் குரலுக்கு யூடியூப்பில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பாடுவதில் அப்படி ஒரு ஸ்டைல். குரலில் குற்றாலச் சாரல். அந்தக் குரல் நம் காதுகளைத் தொட்டு உணர்வோடு தங்கிடும் ஒரு தேன்துளி. காலங்கள் தாண்டியும் இனிமை சேர்க்கும் மெலடிகளில், விதுவின் குரல் புல்லாங்குழல் கடக்கும் காற்றாய் நமக்குள் ஊடுறுவுகிறது. சொக்கவைக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான விதுவிவேக் இதோ உங்களோடு... 

‘‘நான் பக்கா சென்னைப் பொண்ணு. கொஞ்சம் ரகளையான ஆளு. ஜாலி, சென்சிட்டிவ், எமோஷனல் எல்லாம் கலந்த கலவை நான். கணவர் விவேக் சிங்கப்பூர்ல ஒரு கம்பெனியின் மேனேஜர். இரண்டு குழந்தைகளுக்கு பிஸியான அம்மா நான். கடந்த அஞ்சு வருசமா சிங்கப்பூர்வாசி. பழைய ஃப்ரெண்ட்ஸ், சொந்தங்களோடு பேசிக்கிறது சோஷியல் மீடியா வழியேதான். நான் அடிப்படையில் கர்னாடிக் சிங்கர். என் சகோதரியோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன். பாடறதுதான் என் ஹாபியா இருந்தது. புதுசா வரும் சினிமாப் பாடல்களை என் குரல்ல பாடிப் பார்ப்பேன். இதெல்லாம் பிளான் எதுவும் இல்லாம நடந்ததுதான். பாடிப் பாடியே வீட்டில் இருக்கிறவங்களைப் படுத்தியெடுப்பேன். 'பாடறதோடு எங்களையும் கொஞ்சம் கவனிம்மா'னு கணவர் கிண்டல் பண்ணுவார்'' என்று பயோடேட்டா கொடுத்தவர், டப்ஷ்மாஸ் மற்றும் ஸ்மூல் சப்ஜெட்டுக்குள் நுழைந்தார். 

''வழக்கமா சினிமா டயலாக்கை அப்படியே டப்ஷ்மாஸ் பண்ணுவாங்க. நாம மாத்தி யோசிக்கலாம்னு நடந்ததுதான் 'பொண்டாட்டிடா' டப்ஷ்மாஸ். ரஜினி சாரின் டயலாக்ல பெண்ணின் பெருமையைச் சொல்லலாம்னு செஞ்சது. அது சோஷியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்குச்சு. ரஜினி சாரையே சந்திக்கவெச்சது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். அந்த நிமிஷத்தில் என்னையே நான் நம்பாமல் உறைஞ்சு நின்றேன். எத்தனை வருஷங்கள் போனாலும் அவரைச் சந்திச்ச நொடிகளின் பிரமிப்பு என்னை விட்டுப் போகாது. 

ஸ்மூல் ஆப்ல பாடினது ஒரு விபத்து மாதிரி தற்செயலா செஞ்சதுதான். ஆனா, இந்தளவுக்கு பிரபலம் ஆவேன்னு நினைக்கவே இல்லை. ஸ்மூல் ஆப் வழியா எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. என் திறமையையும் பலரின் பாராட்டுமூலம் உணர முடிஞ்சது. என் மேல அக்கறையுள்ள மனிதர்கள் அறிமுகமாகி இருக்காங்க. இன்னும் நம்மால சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் கிடைச்சிருக்கு. ஸ்மூல் ஆப் மற்றும் அதன் வழியா கிடைச்சிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்’’ என்கிறார் விதுவிவேக்.

''விதுவை இனி தமிழ் சினிமாவில் பாடகியாகப் பார்க்கலாமா?'' என்று கேட்டதும், ''சினிமா பாடல்கள்தான் என்னை மக்கள்கிட்ட சேர்த்திருக்கு. ஜானகிம்மா, சித்ராம்மா, ஸ்ரேயா கோஷல் போன்றவர்களின் ஸ்டைல்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாவில் பாடியே ஆகணும் என்றெல்லாம் இல்லை. ஆனால், வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்'' என்கிறார். 

விதுவிவேக் பஞ்ச்: 
குடும்பத் தலைவி என்கிற வலைக்குள்ள எந்தப் பெண்ணும் முடங்க வேண்டியதில்லை. திறமை இருந்தால், சோஷியல் மீடியா வழியே உலகத்தை திரும்பிப் பார்க்கவைக்கலாம். எனக்கு கிடைச்ச அனுபவம், பல பெண்களுக்கு சின்ன தூண்டுகோலாக இருக்கணும்னு ஆசைப்படுறேன்.