Published:Updated:

`சார்... நீங்களா?' நடிகர் கொட்டாச்சிக்கு நடந்த வழிப்பறி சம்பவத்தின் முழுக்கதை!

`சார்... நீங்களா?' நடிகர் கொட்டாச்சிக்கு நடந்த வழிப்பறி சம்பவத்தின் முழுக்கதை!
`சார்... நீங்களா?' நடிகர் கொட்டாச்சிக்கு நடந்த வழிப்பறி சம்பவத்தின் முழுக்கதை!

மிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 100-க்கும் அதிகமான படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்தவர் கொட்டாச்சி. பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர், சில தினங்களுக்கு முன்பு வழிப்பறிக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு தன் பணம், பொருள்களை இழந்திருக்கிறார். என்ன நடந்தது அவருக்கு? நடிகர் கொட்டாச்சியே சொல்கிறார்...

ஆட்டோ டிரைவர் :

``சம்பவம் நடந்தது ஜூன் 25-ம் தேதி நைட் 2 மணிக்கு. அன்னிக்குக் காலையில `வயக்காட்டு மாப்பிள்ளை'ங்கிற படத்தோட ஷூட்டிங் திருப்பூர் பக்கத்துல இருக்கிற பெருமாநல்லூர் கிராமத்துல நடந்தது. ஷூட்டிங்கை முடிச்சுட்டு, சென்னைக்குத் திரும்பலாம்னு சேலம் வந்தேன். ராத்திரி நேரம் பஸ் கிடைக்கலை. அப்போ ஒரு ஆட்டோக்காரர் என்னைப் பார்த்து, `சார், நீங்க நடிகர்தானே?'னு பேச ஆரம்பிச்சார். நானும் பேசிக்கிட்டே, `சென்னை போறதுக்கு வண்டி வருமா?'னு விசாரிச்சேன். `ரம்ஜான் பண்டிகைங்கிறதால வண்டி அந்தப் பக்கமா நிற்கும். 30 ரூபாய் கொடுங்க நான் இறக்கிவிடுறேன்'னு சொன்னார். ஏறினேன்.''

இரண்டு நபர்கள் : 

``ஆட்டோ லேசா மூவ் ஆனதுமே, `சார்... நீங்களா? ஷூட்டிங் எல்லாம் எப்படிப் போகுது, என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?'னு கேட்டுக்கிட்டே சிலர் ஏறினாங்க. எல்லோரும் சரக்கு அடிச்சிருந்தாங்க. இந்த நேரத்துல நாம பத்திரமா சென்னைக்குப் போனா போதும்னு, அவங்ககிட்ட கேஷுவலாப் பேசிக்கிட்டுப் போறதுதான் நல்லதுனு, சிரிச்ச முகத்தோடு பேசிக்கிட்டு வந்தேன். ஆனா, உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தது. அவங்கமேலேயும் எனக்கு சந்தேகம் இருந்தது. இவங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு ஒரு வழி தோணுச்சு. என் மொபைல் போனை எடுத்தேன்.''

ஒரு போன் கால் :

`` `திருப்பாச்சி' பெஞ்சமின் சேலத்துக்காரர்; என் நண்பரும்கூட. அவருக்கு போன் பண்ணிப் பேசுவோம்னு எடுத்தேன். தூக்கத்துல இருந்திருப்பார்போல... கட் ஆகிடுச்சு. திரும்பவும் போன் பண்ணேன். ஆட்டோவுல இருந்தவங்களுக்கு என்மேல சந்தேகம் வந்திருச்சு. டக்குனு போனைப் புடுங்கிட்டாங்க. `போனை ஏன்பா புடுங்குறீங்க?'னு கேட்டேன். `போன் கெடக்கட்டும்ணே... எங்க போயிடப்போகுது'னு சொல்லிக்கிட்டே கழுத்துல இருந்த செயினையும் அத்துட்டான். அந்த நேரத்துல கத்தவும் முடியலை. கத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏன்னா, நேரம் அப்படி. `ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? நானும் உங்களை மாதிரி சாதாரண மனுஷன்தானே'ன்னு சொன்னேன். நான் கெஞ்சினது அவங்க காதுலேயே விழலை.''

பணம், நகை, பொருள் :

``பர்ஸ்ல இருந்த 2,500 ரூபாய் பணம், கழுத்துல கெடந்த செயின், ரெண்டு ஏ.டி.எம் கார்டு, அடையாள அட்டைகள்னு இருந்த எல்லாத்தையும் புடுங்கிட்டாங்க. பேன்ட் பாக்கெட்ல தனியா வெச்சிருந்த ரெண்டு 100 ரூபாய் நோட்டு மட்டும் அவங்க கண்ணுல படலை. தவிர, ஆட்டோ ஓட்டுறவர்கிட்ட `வேகமா போங்க, வேகமா போங்க'னு ரெண்டு பேரும் சொல்ல, ஆட்டோக்காரரும் வேகம் எடுத்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். டக்குனு என்னோட லக்கேஜ் பேக்கை வெளியே தூக்கிப்போட்டாங்க. ஆட்டோ ஓட்டினவன், `ஏதோ விழுதே?'ங்கிற பதற்றத்துல ஸ்லோ பண்ணான். இதான் சந்தர்ப்பம்னு நானும் ஆட்டோவுல இருந்து குதிச்சுட்டேன். நான் குதிக்கலைன்னா, வேகமா போன ஆட்டோவுல இருந்து என்னை வெளியே தள்ளியிருப்பாங்க.''

பேக்கரி கடை :

``நான் வெளியே குதிச்சதோட ஆட்டோ நிற்காமப் போயிடுச்சு. அங்கே இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு நடந்துபோனேன். ஒரு பேக்கரி கடை இருந்தது. ரம்ஜான் பண்டிகைங்கிறதால, பசங்க நிறைய பேர் இருந்தாங்க. அவங்ககிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவங்களோட மொபைலை வாங்கி, நடிகர் பெஞ்சமினுக்குத் திரும்பவும் கூப்பிட்டேன். அவர் எடுத்தார். `உனக்கு கால் பண்ணேன். ஆனா, ஸ்விட்ச் ஆஃப்னு வருதே'னு சொன்னார். அவர்கிட்டயும் நடந்த விஷயத்தைச் சொன்னேன். பசங்ககிட்ட போனைக் கொடுக்கச் சொன்னவர், அவங்ககிட்ட வீட்டோட அட்ரெஸைச் சொல்லி, என்னைப் பத்திரமா கொண்டுவந்து விடச் சொன்னார்.''

நடிகர் பெஞ்சமின் வீடு :

``பெஞ்சமின் வீட்டுக்கு வந்து, அவரோட மொபைலை எடுத்துப் பார்த்தேன். நான் அவருக்கு போன் பண்ண நேரம் நைட் 2 மணி 03 நிமிடம். அவர் எனக்குத் திரும்ப போன் பண்ணும்போது நேரம் 2 மணி 09 நிமிடம். ஆறு நிமிட இடைவெளிக்குள் இந்த வழிப்பறி சம்பவம் நடந்து முடிஞ்சிருக்கு. பெஞ்சமின், `நடந்ததை நினைச்சு வருத்தப்படாத... காலையில போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுப்போம். நிம்மதியா தூங்கு'னு சொன்னார். 

பிறந்த நாள் :

``நான் ராத்திரி எவ்ளோ நேரம் ஆனாலும் சென்னைக்குப் போயிடணும்னு முடிவு எடுத்ததுக்குக் காரணம், ஜூன் 26-ம் தேதி எனக்குப் பிறந்த நாள். என் மனைவி, குழந்தையோடு கோயிலுக்குப் போகணும்னு நினைச்சேன். என் மனைவி எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் தர்றதா சொல்லியிருந்தாங்க. அந்த மூணு வழிப்பறி நபர்களால் என் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமப்போச்சு. கடும் மன உளைச்சல். மனைவிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தைச் சொன்னேன், `பணம் போனா போகட்டும், நீங்க பத்திரமா வாங்க'னு பதறிட்டாங்க.''

புகார் :

``மறுநாள் காலை 10 மணிக்கு பெஞ்சமினும் நானும் சேலம் பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். அங்கே இன்ஸ்பெக்டரா இருக்கிற செந்தில்குமார் எனக்கு ஆறுதல் சொன்னதோடு, `அவங்களைப் பிடிக்காம ஸ்டேஷனுக்கு வராதீங்க'னு சக போலீஸ்காரங்களுக்கு உத்தரவு போட்டார். பிறகு நான் சென்னைக்கு வந்துட்டேன். வழிப்பறி பண்ண மூணு பேர்ல ஒருத்தனைப் பிடிச்சுட்டதா எனக்குத் தகவல் சொன்னாங்க. பிறகு, ஆட்டோவைப் பறிமுதல் பண்ணி ஸ்டேஷன்ல நிறுத்தி வெச்சிருக்கிறதா தகவல் வந்தது. பிடிபட்டவன்கிட்டதான், என்னோட மொபைல்போன் இருந்திருக்கு. பணம், பொருள், நகை எல்லாம் கிடைச்சதும் மொத்தமா என்கிட்ட ஒப்படைக்கிறதா போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க.''

இன்று :

``நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க முடியாது. `தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு'னுதான் நினைச்சுக்கணும். ஏன்னா, மூணு பேருமே 30 வயசுக்குள்ள இருக்கிற பசங்க. முழு போதையில் இருந்தாங்க. எங்களுக்குள்ள வாக்குவாதம், கைகலப்பு நடந்திருந்தா... யாரும் இல்லாத அந்த ராத்திரியில என்ன நடந்திருக்கும்னு எனக்குச் சொல்லத் தெரியலை. வாழ்க்கையில மறக்க முடியாத நாளா ஜூன் 25 மாறிடுச்சு. `ஆல் இஸ் வெல்'னு நினைச்சுக் கடந்துபோயிடவேண்டியதுதான்!''