Published:Updated:

ஐசலக்கா சிவராமன் மகனின் சினிமா கனவு நிறைவேறுமா?

ஐசலக்கா சிவராமன் மகனின் சினிமா கனவு நிறைவேறுமா?
ஐசலக்கா சிவராமன் மகனின் சினிமா கனவு நிறைவேறுமா?

‘‘எங்க அப்பா சிவராமன். அவர் பெயருக்கு முன்னாடி சேர்ந்த ‘ஐசலக்கா’ மட்டும்தான் அவர் சினிமாவுல சம்பாதிச்சது. சின்னதும் பெருசுமான கேரக்டர்கள்ல 400 படங்களுக்கும் மேல நடிச்சிருந்தாலும், சினிமாவுல அவருக்குனு நிரந்தரமான ஒரு இடம் கிடைக்கலை. ‘பையனுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்துடுமோ’னு பயந்துதான் அவர் என்னை சினிமாவுக்குள் அனுமதிக்கலை. நானும் அவர் இருக்கிற வரை சினிமா பக்கம் வரலை. அவருக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த எனக்கும் அதே போராட்டம்தான். அவருக்குக் கிடைக்காத அங்கீகாரம், நிரந்தர இடம்... அவரோட ஆசீர்வாதத்தோடு நிச்சயம் எனக்குக் கிடைக்கும்னு நம்புறேன்’' என நம்பிக்கையுடன் பேசுகிறார் வாரிசு நடிகர் ஆதேஷ் பாலா. வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன்...  என, இவரை பல படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். மிகச்சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 

‘‘அப்பாவுக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. எல்லாரையும்போல சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். ‘பாலமுருகன் நாடகக் குழு’னு என் பேர்ல தனி நாடக்குழு வெச்சிருந்தார். ஸ்பிக் உர விளம்பரத்துக்காக ஊர் ஊராப் போய் நாடகம் நடத்துவாராம். அந்த நாடகக் குழுவுல பார்த்திபன் சார் ஹீரோவா நடிச்சிருக்கார். அந்தச் சமயத்துலதான் அப்பாவுக்கு பாக்யராஜ் சார் நட்பு கிடைச்சது. அப்படித்தான் அவர்  ‘தூறல் நின்னுபோச்சு’ மூலம் அப்பாவுக்கு முதல் பட வாய்ப்பைத் தந்தார். பிறகு ‘இன்று போய் நாளை வா’, ‘மௌன கீதங்கள்’, ‘பவுனு பவுனுதான்'னு கிட்டத்தட்ட சாரோட எல்லா படங்கள்லயும் அப்பா இருந்தார்.  

இந்தச் சமயத்துலதான் ‘செந்தூரப்பூவே’ படத்தில் அப்பா நடிச்சார். அதில் மாட்டைப் பார்த்தாலே ‘ஐசலக்கா சொர் சொர்’னு சொல்லிட்டு பால் கறக்கப் போற மாதிரியான காமெடி கேரக்டர். அதேபோல எதைக் கேட்டாலும் ‘ஐசலக்கா சொர் சொர்’னு சொல்லிட்டுதான் பேசவே ஆரம்பிப்பார். அதனால அந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு அவரோட பேருக்கு முன்னாடி ‘ஐசலக்கா’ சேர்ந்து ‘ஐசலக்கா சிவராமன்’ ஆனார். இப்படி காமெடி டிராக், ஹீரோ ஃப்ரெண்ட்னு அப்பா ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சார். அதில் ‘காதல் பரிசு’ முக்கியமான படம். கமல் சாரின் ஃப்ரெண்டா படம் முழுக்க வருவார். இதேபோல ‘மைதிலி என்னை காதலி’, ‘ஒரு தாயின் சபதம்’, ‘என் தங்கை கல்யாணி’, ‘எங்க வீட்டு வேலன்’னு டி.ஆர் சாரோட படங்கள்லயும் இருப்பார். 

இப்பதான் சினிமா நடிகர், நடிகைகளை ரொம்ப ஈஸியா பார்த்துடுறோம். அப்ப அவங்களைச் சந்திக்கிறதே பெரிய விஷயம்.  அப்பாகூட ஷூட்டிங் போறது, பிரிவியூ ஷோ பார்க்கப்போறதுனு எல்லா பெரிய நடிகர், நடிகைகளையும் நான் ஈஸியா சந்திச்சுடுவேன். அவங்களையெல்லாம் பார்க்கப் பார்க்கத்தான் எனக்கும் சினிமா ஆசை வந்தது. நான் நடிக்க வர்றதுல அப்பாவுக்கு விருப்பமே இல்லை. ஒருகட்டத்துல ஷூட்டிங் கூட்டிட்டு போறதையே குறைச்சுட்டார். ‘என்ன மாதிரி நீயும் கஷ்டப்படக் கூடாதுப்பா. நல்லா படிச்சு பெரிய கம்பெனிகள்ல வேலைபார்’னு சொல்வார். 

நான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ட். சாந்தோம் மேல்நிலைப் பள்ளியிலதான் படிச்சேன். பிறகு ‘ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேரணும்’னு சொன்னேன். அப்பா `கூடவே கூடாது'னு மறுத்துட்டார். பிறகு, மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே ஃபைனல் இயர் படிக்கும்போதுதான் அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் கடைசியா நடிச்ச படம் ஆபாவணன் சாரின் ‘முற்றுகை’. அம்மா சுப்புலட்சுமி சிவராமனும் ஆர்ட்டிஸ்ட்தான். நாடகத்துல நடிச்சுட்டு இருக்கும்போது அப்பாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அம்மா இப்பவும் டப்பிங் பேசிட்டிருக்காங்க. `நம்மகூடதானே இருக்கார். எங்கே போயிடப்போறார்?'னு நினைச்சு அப்பாகூட சேர்ந்து ஒரு போட்டோகூட எடுத்துக்கலை சார் எங்க அம்மா. அதுதான் எனக்கு பெரிய வருத்தம். 

அப்பா இறந்த பிறகு, ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் வேலையில் சேர்ந்தேன். செக்குமாடு மாதிரி ஒரே வேலையைப் பார்க்கிற ஒரு அலுப்பு. சினிமா ஆர்வம் வேற இருந்ததால அந்த வேலையில் என் மனசு ஒட்டலை. இதுக்கிடையில பாக்யராஜ் சாரின் ‘பாக்யா’ பத்திரிகையில ரெண்டு வருஷம் உதவி ஆசிரியரா இருந்தேன். பிறகு, ‘நடிக்கணும்’ங்கிற என் ஆசையை பாக்யராஜ் சார்கிட்ட சொன்னேன். அவர்தான் ‘ஒரு கதையின் கதை’னு பொதிகையில் வந்த தன் சீரியல்ல என்னை அறிமுகப்படுத்தினார். என் அப்பாவை அறிமுகப்படுத்தினவரே என்னையும் அறிமுகப்படுத்தினார்ங்கிறது எனக்கே உரிய பெருமை! 

பிறகு ‘பாக்யா’வில் வரும் `கேள்வி - பதில்' பகுதியை ஜெயா டிவி-க்காக ‘அப்படிப்போடு’ங்கிற பேர்ல பண்ணின சீரியல் 20 எபிசோடுகள்ல காமெடி ஹீரோவா பண்ணினேன். பாக்யராஜ் சாரைப் பார்க்கிற வரை வெறும் ஆர்வம் மட்டுமே இருந்துச்சு. அவரோட சீரியல்ல தொடர்ந்து நடிச்ச பிறகுதான் ‘நடிப்புன்னா என்ன?’ங்கிற புரிதலே வந்தது. ‘நல்லா பண்றடா. நல்லா வருவ’னு மனசாரப் பாராட்டுவார் பாக்யராஜ் சார். பிறகு ஏ.சி.திருலோகசந்தர் சாரின் ‘டேக் இட் ஈஸி வாழ்க்கை’ங்கிற ஏவி.எம் தயாரிச்ச சீரியல்ல நடிச்சேன். பிறகு ‘கல்யாணி’, ‘ரோஜா’, ‘நம்பிக்கை’, வாழ்க்கை’னு நிறைய சீரியல்கள்ல நடிச்சேன்.  ஒருகட்டத்துல சீரியலை விட்டுட்டேன். இதுக்கிடையில் நாடக அனுபவத்தையும் கத்துப்போம்னு சில மேடை நாடகங்கள்ல நடிச்சேன். 

என்னை டிவி-யில் அறிமுகப்படுத்திய பாக்யராஜ் சார்தான் சினிமாவிலும் அறிமுகப்படுத்தினார். ஆமாம், முதல் படம் ‘சொக்கத்தங்கம்’. பிறகு ‘சாமி’, ‘கோவில்’, ‘ஆறு’னு ஹரி சார் படங்கள். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘இங்கிலீஷ்காரன்’னு நிறைய படங்கள்ல சின்னதும் பெருசுமா கேரக்டர்கள் பண்ணினேன். இப்படிப் போயிக்கிட்டிருந்த சினிமா வாழ்க்கையில் எனக்கு நல்ல அடையாளத்தைத் தந்த படம், ‘முண்டாசுப்பட்டி’. படம் முழுக்க ஒன்மேன் ஆர்மியா ராம்தாஸ் நின்னு விளையாடினதால அதில் எனக்கு அடையாளம் கிடைச்ச அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கலை. இருந்தாலும் அதில் நந்திதாவுக்கு முறைமாமனா நான் நடிச்ச கேரக்டர் எல்லார் மனசுலயும் பதிஞ்சுது. அந்தவகையில் இயக்குநர் ராம் சாருக்கு நன்றி சொல்லியே ஆகணும். 

சினிமாவில் கைநழுவி போன கேரக்டர்கள், கதைகள்னு பலருக்கும் நிறைய நடந்திருக்கும். அப்படி என் பயணத்தில் நடந்ததுல ஒண்ணு ரெண்டை மட்டும் உங்களுக்குச் சொல்றேன். ‘பூக்கடை ரவி’னு ஒரு படம். நரேன் ஹீரோ. அதில் நான் வில்லன். 75 சதவிகிதம் ஷூட் பண்ண பிறகு படத்தை டிராப் பண்ணிட்டாங்க. அது ரிலீஸ் ஆகியிருந்தா, என் டிராவல் வேற மாதிரி ஆகியிருக்கும். அடுத்து கலைஞர் டிவி ஆரம்பிச்ச புதுசுல ‘மர்ம தேசம்’ நாகா சார் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை பெரிய பட்ஜெட்ல ஆரம்பிச்சார். தமிழ்நாடு முழுக்க ஆர்டிஸ்ட் செலெக்‌ஷன் நடந்துச்சு. எந்தவிதமான பரிந்துரையும் இல்லாம ‘ஆதித்ய கரிகாலன்’ கேரக்டருக்குத் தேர்வானேன். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சார்தான் புரடியூசர். மூணு வருஷம் அக்ரிமென்ட் போட்டாங்க. குதிரையேற்றப் பயிற்சியெல்லாம் கொடுத்தாங்க. முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிஞ்சு, அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் நடக்கவே இல்லை. அந்த புராஜெக்ட்டையே டிராப் பண்ணிட்டாங்க. 

அடுத்த பெரிய வாய்ப்பும் ‘பொன்னியின் செல்வன்’தான். இந்தமுறை விஜய் டிவி-க்காக பெரிய பட்ஜெட்ல ஈராஸ் பண்ணினாங்க. அப்ப ஈராஸின் சிஇஓ சௌந்தர்யா ரஜினிகாந்த், சூரியபிரதாப் டைரக்‌ஷன்னு பெரிய டீம். ஆடிஷன்ல ‘பெரிய பழுவேட்டரையர்’ கேரக்டருக்குத் தேர்வானேன். இன்னிக்கு பல படங்கள்ல ஹீரோயினா நடிச்சுட்டிருக்கிற நிவேதா பெத்துராஜ்தான் அதில் என் மனைவி ‘நந்தினி’யா நடிச்சாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சது. ‘நாம நிச்சயம் செட்டிலாகிடுவோம்’னு நம்பிக்கை வந்துச்சு. ஆனா, 10 நாள் ஷூட்டிங் போய் அந்த புராஜெக்ட்டும் நின்னுடுச்சு. ‘பொன்னியின் செல்வன்’ல ரெண்டுமுறை கமிட்டான ஒரே நடிகன் நான்தான். இப்படி கைநழுவிப்போன வாய்ப்புகள் எத்தனையோ உண்டு. அத்தனையும் `வாய்ப்புகள்'னு சொல்றதைவிட `வலிகள்'னுதான் சொல்லணும்.

சமீபத்தில் ரிலீஸ் ஆனதில் பிரசாந்த் சார் ஃப்ரெண்ட்டா நடிச்ச ‘மம்பட்டியான்’ மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்த படம். தியாகராஜன் சார், ‘நீ நல்ல நடிகன்டா. நல்லதா ஒரு படம் மாட்டினா போதும். நீ எங்கேயோ போயிடுவடா’ம்பார். இப்ப ‘மரகத நாணயம்’ படத்தில் மூணு சீன்கள்ல  வருவேன். இப்படி ‘வஜ்ரம்’, ‘பட்ற’, ‘விந்தை’னு நிறைய படங்கள். இப்படிப் போயிட்டிருக்கும்போதுதான், ‘நாலு சீன் வந்தாலும் நல்ல படங்கள்ல பண்ணுவோம். ஸ்பாட்ல போய் நிக்கும்போது, ‘இந்த கேரக்டர் நமக்குக் கொடுத்திருந்தா இவங்களைவிட நல்லா பண்ணுவோமே’னு புலம்புறதைவிட நல்ல கேரக்டர் கிடைக்கிறவரை பிரேக் எடுத்துப்போம்’னு கொஞ்சநாள் சும்மா இருந்தேன். இந்தச் சமயத்தில்தான் ‘டேக் ஒன் ஷாட் ஒன்’னு ஒரு குறும்படத்தைத்  தயாரிச்சு நடிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்ப மிஷ்கின் சாரின் ‘சவரக்கத்தி’யில் நல்ல கேரக்டர் பண்ணியிருக்கேன். 

நமக்கே இவ்வளவு வருத்தங்கள்னா அவ்வளவு படங்கள்ல நடிச்ச எங்க அப்பாவுக்கு எவ்வளவு வருத்தங்கள் இருந்திருக்கும்? இவ்வளவுக்கும் அப்பா நல்ல கலரா அழகா இருப்பார். காமெடியும் அவருக்கு இயல்பா வரும். ‘ ‘காதல் பரிசு’ ஹிட் ஆகியிருந்தா, இன்னிக்கு நான் பெரிய காமெடியன்டா’னு சொல்வார். அவர் இறப்புக்கு அந்த வருத்தமும் ஒரு காரணம்னு சொல்லலாம். அவர் இறந்தப்ப அவருக்கு 46 வயசு. அந்த வயசுலதான் சினிமாவுல எல்லாரும் டேக் ஆஃப் ஆவாங்க. ஆனா, இவர் இறந்துட்டார். எல்லாம் நேரம்தான். நேரம் நல்லா இருந்தா சினிமாவுல யார் வேணும்னாலும் பெரிய ஆளா வரலாம். எங்க அப்பாவுக்குக் கடைசி வரைக்கும் அந்த நேரம் கூடிவரலை. 

குணச்சித்திரம், வில்லன், காமெடி, ஹீரோ...னு என்னால எந்த கேரக்டரும் பண்ண முடியும். எனக்கு இப்ப தேவை நல்ல படம். அது நிச்சயம் அமையும். ஏன்னா, எங்க அப்பாவுக்கு அமையாத அந்த நல்ல நேரம் எனக்கு அமையும்னு நம்புறேன். இந்த நம்பிக்கைக்கு ஒரே காரணம் என் நண்பர்கள். ஏன்னா, நான் சினிமாவுல சம்பாதிச்சது அவங்களை மட்டும்தான் சார்.’’