Published:Updated:

''என் குரல் கேட்டுட்டு நகைக்கு டிஸ்கவுண்ட்லாம் கொடுத்தாங்களே!'' - கோவை ஹலோ எஃப் எம் ஆர்.ஜே மகா

''என் குரல் கேட்டுட்டு  நகைக்கு டிஸ்கவுண்ட்லாம் கொடுத்தாங்களே!'' - கோவை ஹலோ எஃப் எம் ஆர்.ஜே மகா
''என் குரல் கேட்டுட்டு நகைக்கு டிஸ்கவுண்ட்லாம் கொடுத்தாங்களே!'' - கோவை ஹலோ எஃப் எம் ஆர்.ஜே மகா

“பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே... எல்லோருக்கும் வணக்கம், வந்தனம், நமஸ்தே... நான் உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு ஆர்.ஜே மகா 106.4 ல...”

ஹலோ எஃப்.எம்ல இந்தக் குரலைக் கேட்டதுமே, கோயமுத்தூர் மக்கள் செம குஷியாகிடுறாங்க. 'சின்னதம்பி பாட ஆரம்பிச்சுட்டான். இனி, குழந்தைங்க தூங்கிடும்' என்கிற மனநிலைக்குப் போயிடுறாங்கன்னா பாத்துக்கோங்களேன்.  அட... இது பில்டப் இல்லீங்க. ஆர்.ஜே மகாவுக்கு கோயமுத்தூர்ல அம்புட்டு ஃபேன்ஸ். டெய்லி ஈவ்னிங் நாலு மணிக்கு, 'நாலு மணி வாலு' ஷோ பண்ற இந்த அம்மணியைப் போன்ல புடிக்கிறதுக்குள்ளேயே கோயம்புத்தூருக்கு நாலு வாட்டி போய்ட்டு வந்திருக்கலாம்போல. 

“ஹாய், சொல்லுங்க நான் பக்கத்து வீட்டுப் பொண்ணு மகா பேசுறேன். நீங்க எதிர் வீட்டு சுரேஷா?”னு எடுத்ததுமே குறும்பை கொப்பளிக்க கொப்பளிக்க கொட்டினார். ''ஹலோ, நான் விகடனிலிருந்து பேசுறேன்'னு சொன்னதும், “ஓ சாரிங்க... நான் எப்பவுமே இப்படிதான். ஜாலியா பேசுவேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்றவர், அவருடைய ஹிஸ்டரியை எடுத்துவிட்டார்.

“நான் பக்கா கோயம்புத்தூர் பொண்ணுங்க. சொன்னா நம்புவீங்களா? ஸ்கூல் டேய்ஸ்ல வாயவே திறக்க மாட்டேன். அவ்வளவு அமைதியா இருப்பேன். அப்போவெல்லாம் எஃப்.எம்லயும் டி.வியிலயும் தொகுப்பாளர்கள் பேசறதைக் கேட்கும்போதும் அவங்க சேட்டைகளைப் பார்க்கும்போதும் ஆச்சரியமா இருக்கும். அந்த ஆச்சரியம்தான் ஒரு கட்டத்துல எனக்குள்ளே ஆர்.ஜேவாகும் ஆசையைத் தூண்டிச்சு. ஸ்கூல் லைஃப் முடிஞ்சதும், விஸ்காம் படிக்கணும்னு வீட்டுல சொன்னதும், பெரிய பூகம்பமே கௌம்பிடுச்சு. பி.காம்தான் படிக்கணும். அதிலும் கேர்ள்ஸ் காலேஜ்ல தான் சேரணும்னு பயங்கர ரூல்ஸ் போட்டாங்க. நான் அசரலையே. போராட்டம், புரட்சிகள் பண்ணி ஒரு வழியா விஸ்காம் சேர்ந்தேன். சின்னச் சின்ன ஷார்ட் ஃபிலிம்ஸ், டப்பிங்னு காலேஜ்ல பண்ணிட்டு இருக்கும்போதே, ஹலோ எஃப்.எம்ல ஆர்.ஜேக்காக அப்ளை பண்ணி செலக்ட் ஆனேன்” என்றவர், உற்சாகம் குறையாத குரலில் தொடர்ந்தார். 

“ஒரு பக்கம் காலேஜ், இன்னொரு பக்கம் ஆர்.ஜேன்னு லைஃப் செமையா போய்ட்டிருந்துச்சு. ஷார்ட் ஃபிலிம்ஸ் மேலேயும் ஆர்வம் அதிகமாச்சு. அப்பாவுக்காகப் பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சேன். எனக்கு நடிகை அனுஷ்கா மேலே செம கிரேஸ். அதனால், யோகா கிளாஸுக்கும் போனேன். ஆக்டிங் ஈடுபாடு இருக்கே... அதுக்காக, மாடலிங் போய்டலாம்னு தோணுச்சு. காலேஜ் முடியுற கட்டம். 'நீ எந்தப் பக்கம் போகப்போறே? எதை செலக்ட் பண்ணப்போறே?'னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குள்ளேயும் பெரிய கேள்வியா மாறிடுச்சு. தெளிவோடு ஆர்.ஜேவை செலக்ட் பண்ணிட்டேன். அதுக்கும் ஒரு இன்ட்ரஸ்டிங் காரணம் இருக்கு. நான் ஒரு விஷயத்தை யோசிக்கும்போதும் சரி, மனக்குழப்பத்துல இருக்கும்போதும் சரி, நாலு மணி ஆகிடுச்சுன்னா எனக்குள்ளே ஆட்டோமெட்டிக்கா உற்சாகம் வந்துடும். 'ஒருநாள் கூத்து' படத்துல வர்ற ஆர்.ஜே கேரக்டர், எவ்ளோ கஷ்டத்தில் இருந்தாலும், ஷோ டைமிங் ஸ்டார்ட் ஆனதும் ஹேப்பியா பேச ஆரம்பிச்சிடுவாங்கல்ல, அப்படித்தான் நானும் இருந்தேன். அப்போ, உள்ளுக்குள்ளே ஆர்.ஜே.வாக இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு தைரியமா இறங்கிட்டேன்'' என்ற மகா, ஆர்ஜேவாக மறக்க முடியாத ஒரு விஷயத்தைச் சொன்னார். 

''ஒருமுறை நகைக் கடைக்கு போயிருந்தேன். அங்கே என் வாய்ஸைக் கேட்டதும், 'அட... நீங்க நாலு மணி வாலா?'னு கேட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் மேடம் ஸ்பெஷல் கஸ்டமராகிட்டேன். பயங்கர மரியாதை, அடிக்கடி ஜூஸ், ரேட் குறைச்சு நகை என சந்தோஷத்துல முக்கி எடுத்துட்டாங்க. வானத்துல மிதந்துதான் வீட்டுக்குத் திரும்பினேன். சினிமா ஹீரோ பாபி சிம்ஹா, சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் ஷோ பண்ணி முடிச்சதும், அவர்கிட்டே எப்படி பண்ணினேன், எதை மாத்தணும்னு கேட்பேன். அது இப்ப வரைக்கும் தொடருது. ஷோ முடிச்சதும் ரெக்கார்டட் கன்டன்டை சிம்ஹாவுக்கு அனுப்பிடுவேன். கேட்டுட்டு ரெவ்யூ சொல்லுவார்.

இப்போ கொஞ்சமா டப்ஷ்மாஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். என் வாய்ஸை மட்டும் கேட்டுட்டிருந்த கோவை மக்கள், என்னோட டப்ஷ்மாஸை பார்த்துட்டு செமயா ரெஸ்பான்ஸ் பண்றாங்க. சிலர் ஷோவுல பேசும்போதே, 'மகா நீங்க அந்த டயலாக் பண்ணலாமே, இந்தப் படத்தோட டயலாக் பண்ணலாமே'னு சொல்றாங்க. ஆரம்பத்துல, பொண்ணுங்களுக்கு மீடியா செட் ஆகாதுனு சொன்னவங்களும் இப்போ அவங்க பொண்ணுங்களை மீடியாக்கு அனுப்புறதுக்காக என்கிட்டே ஐடியா கேட்குறாங்க. இதோடு நான் நின்னுட மாட்டேன். இன்னும் என் ஆசைகள் விரிஞ்சு கிடக்குது. அதில் முக்கியமானது சினிமா. சீக்கிரமே இந்த மகாவை இயக்குநராகவும் நடிகையாகவும் பார்க்கப்போறீங்க. மொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்'' எனச் சொல்லி சிரிக்கிறார் நாலு மணி வாலு.

அடுத்த கட்டுரைக்கு