Published:Updated:

மளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...! செம ஜாலி காளிவெங்கட்

மளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...! செம ஜாலி காளிவெங்கட்
மளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...! செம ஜாலி காளிவெங்கட்

“சினிமா எனக்கு சாமி மாதிரி. நமக்கு எதைப் பிடிக்குமோ அதை அளவுக்கு அதிகமா நேசிக்கணும். அதுல உண்மையா இருந்தா, நினைச்ச இடத்தை நாம நிச்சயம் பிடிச்சுடலாம்” - உள்ளத்திலிருந்து பேசுகிறார் காளிவெங்கட். சினிமாவில் தடம் பதித்த இவரின் வாழ்க்கை நிச்சயம் பலருக்கும் நம்பிக்கையூட்டும்.

காளிவெங்கட் சினிமாவுக்கு வந்த கதை!

“சொந்த ஊர் கழுகுமலை பக்கத்துல கத்தாளம்பட்டி. ஊர்ல இருக்கும்போது நிறைய நாடகங்கள் நடிச்சிருக்கேன். நண்பர்களின் ஊக்குவிப்புல 1998-ல் சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். சினிமாவுல பெரிய நடிகராகணும்கிறதுதான் ஆசை. ஆரம்பத்துல மளிகைக் கடையில் வேலை செஞ்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்துல என் அப்பாவும் சென்னை வந்துட்டார். சொந்தமா தொழில் பண்ணலாம்னு யோசிச்சு, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். சினிமாவில் சாதிக்கணும்னா, சென்னையில் செட்டிலானா எளிதில் வாய்ப்பு தேட முடியும்னு தோணுச்சு. முதல் படியா நானும் அண்ணனும் சேர்ந்து சென்னையில் பெட்டிக்கடை வெச்சோம். அப்புறம் டீக்கடை, வாட்டர் கேன் சப்ளேனு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சோம். அதுலேயே எட்டு வருடம் ஓடிடுச்சு. என்னுடைய சினிமா ஆசைக்கு எங்க வீட்டுல யாரும் தடைபோடலை. 

செட்டிலாகியாச்சு. ஆனா, சினிமாவில் எப்படி வாய்ப்பு தேடணும்னு தெரியலை. நண்பர் ஒருவர், மிஷ்கினிடம் உதவியாளரா இருந்தார். போட்டோ ஷூட் எடுக்கணும்கிற விஷயமே அவர்தான் சொன்னார். `போட்டோவுக்குப் பின்னாடி உயரம், எடை, நம்பர் எழுதி ரெடி பண்ணிக்கிட்டு அப்புறம்தான் எல்லா இயக்குநர் ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு கேட்கணும்'னு அவர் சொன்னார். 2006-2008 வரை வெறித்தனமா வாய்ப்பு தேடி அலைஞ்சேன். அந்த நேரத்துலதான் `ஆடுகளம்' முருகதாஸ், கறுப்பு நம்பியார், விஜய் சேதுபதினு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. குறும்படங்களில் நடிக்கச்சொல்லி எனக்கு அட்வைஸ் சொன்னதே விஜய் சேதுபதிதான். அப்படித்தான் ராம்குமார் இயக்கத்துல `முண்டாசுப்பட்டி' குறும்படத்தில் நடிச்சேன். அப்படியே படத்திலும் நல்ல கேரக்டர் கிடைச்சது. இதுக்கு நடுவுல சின்னச் சின்ன ரோலில் சில படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சு.  ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ ரெண்டு படங்கள் கொடுத்த வெற்றி, நிறைய படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இன்னிக்கு வரைக்கும் நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருக்கு.”

நடிப்பும் உயரமும்!

“என்னுடைய உயரம்தான் எனக்கு ப்ளஸ். ஹீரோவோட உயரத்துக்கு ஈடுகொடுக்க முடியாதுங்கிறதால சில பட வாய்ப்புகளை இழந்திருக்கேன். ஆனாலும் போலீஸாகவே நடிச்சுட்டேனே! ஜெயம் ரவி சாரோட நடிக்கும்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம காமெடியா இருக்கும். அவருக்கு சமமா இருக்கணும்னு அவர் உயரத்துக்கு எனக்கு பாக்ஸ் போடுவாங்க. ‘வாயை மூடி பேசவும்’ படத்துல பாண்டியராஜன் சாரோடு ஒரு சீன். அவர் உட்கார்ந்து பேசிட்டிருப்பார். நான் நின்னு பதில் சொல்லணும். உயரத்துக்காக எனக்கு பாக்ஸ் போட்டாங்க. ‘என் அனுபவத்திலேயே என்கூட நடிக்கிறவங்களுக்கு ஆப்பிள் பாக்ஸ் போட்டது உனக்குதான். ஏன்னா, எப்பவுமே எனக்குத்தான் பாக்ஸ் போடுவாங்க. இதைப் பாருக்கும்போதே சந்தோஷமா இருக்கு'னு பாண்டியராஜன் சார் சொல்லிச் சொல்லி சிரிச்சார். உயரம் பிரச்னையா இருக்கிறதும் ஒரு ஜாலிதான்.” 

காமெடி, சீரியஸ்னு ரெண்டு ரோல்கள்லயும் கலக்குறீங்களே! 

“சூழ்நிலைக்கு ஏற்ப நடிக்கணும். வலுக்கட்டாயமா சிரிக்கவைக்கக் கூடாது; முகம் சுளிக்கிற மாதிரியான காமெடி பண்ணக் கூடாது. `இந்த மாதிரியான நடிகர்'னு ஒரு வட்டத்துக்குள்ள அடைஞ்சிடவும் கூடாது. ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்றேன்.  எனக்கு என்ன வரும்னு தெரிஞ்சு ரோல் கொடுக்கிற இயக்குநர்கள் கிடைச்சதுதான் என்னோட ப்ளஸ்ஸா நினைக்கிறேன்.”

ஷூட்டிங் சுவாரஸ்யம்

“ `மாரி', `கொடி' ரெண்டு படங்கள்லயும்  எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைச்சது. தனுஷ் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நடிப்பைப் பற்றி நுணுக்கமான சிந்தனை அவருக்கு உண்டு. ஒவ்வொரு சீன்லயும் புதுசா புதுசா ஏதாவது செய்துக்கிட்டே இருப்பார். அவரிடமிருந்து நிறையவே கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும்பாலும் வசனங்கள் மறக்க மாட்டேன். ‘மாரி’ ஷூட்டிங்கில் தனுஷ் சார் எனக்கு எதிரா நின்னு டயலாக் பேசுறா மாதிரி ஒரு சீன். அவரோட நடிப்பை ரசிச்சுக்கிட்டே நின்னதுல என் டயலாக் மறந்துடுச்சு. அப்புறம் எப்படியோ சமாளிச்சு பேசி முடிச்சேன்.''

அடுத்த படங்கள்!

“பிரபுதேவாவோடு `யங் மங் சங்’, ஜி.வி.பிரகாஷோடு `ஐங்கரன்’, விஜய் ஆண்டனியோடு `அண்ணாதுரை’. இவை தவிர இன்னும் மூணு படங்கள் பேசிட்டிருக்கேன். சினிமாவும் நானுமா லைஃப் சூப்பரா போகுது!