Published:Updated:

"என்னை உரிமையா யுவானு கூப்பிடும் வி.ஐ.பி ஒருத்தர்தான்!” - ‘பூவே பூச்சூடவா’ யுவராணி

"என்னை உரிமையா யுவானு கூப்பிடும் வி.ஐ.பி ஒருத்தர்தான்!” - ‘பூவே பூச்சூடவா’ யுவராணி
"என்னை உரிமையா யுவானு கூப்பிடும் வி.ஐ.பி ஒருத்தர்தான்!” - ‘பூவே பூச்சூடவா’ யுவராணி

டிகர் விஜய் ஜோடியாக 'செந்தூரப்பாண்டி' படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் நடிகை யுவராணி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் வலம்வந்தவர். பிறகு, சின்னத்திரை வழியே நம் வீட்டுக்குள் நுழைந்தார். தற்போது, ஜி தமிழில் 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்துவருகிறார். அவருடன் சில நிமிடங்கள்... 

''சின்னத்திரைக்குள் எப்போது வந்தீர்கள்?'' 

''1995, 96 சமயங்களில்தான் சீரியல் கான்சப்ட் பிரபலமாக ஆரம்பித்தது. மெகா தொடர்கள் அறிமுகமான அந்தச் சமயத்தில் சீரியலுக்குள் வந்தேன். வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டுக்குமிடையே ஸ்கிரீன்தான் வித்தியாசமே தவிர, நடிப்பு அதேதான். எப்பவும் பிஸியாக இருக்க விரும்புகிறவர்களுக்கு சீரியல் அருமையான சாய்ஸ்.'' 

''எப்படி இடைவெளி இல்லாமல் சீரியல்களில் நடிச்சிட்டிருக்கீங்க?'' 

''ஆமாம்! ஜி தமிழ் 'பூவே பூச்சுடவா', சன் டி.வி 'கங்கா', விஜய் டி.வி 'லட்சுமி கல்யாணம்' என எல்லா சேனல்களிலும் என்னைப் பார்க்கலாம். ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு விதமாக என்னை வெளிப்படுத்த விரும்பறேன். ரசிகர்கள் மனசில் இடம்பிடிச்சிருக்கேன். அதுக்கு ரொம்ப சந்தோஷம்.'' 

''ரஜினி, விஜய் எனப் பிரபலங்களோடு நடிச்ச அனுபவம் பற்றி...'' 

'' 'பாட்ஷா' படத்தில் ரஜினி சாருக்கு தங்கையாக நடிச்சேன். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கச்சி ரோல். விஜய்யுடன் 'செந்தூரப்பாண்டி' என முன்னணி ஹீரோக்களுடன் நடிச்ச ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நொடிகள். இப்போ வரை விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வாழ்த்துச் சொல்றேன். என்னை எப்பவும் 'யுவா'னுதான் கூப்பிடுவார். எங்களின் அழகான நட்பு மாறாமல் இருக்கு.'' 

''தமிழ்த் திரையுலகில் உங்களுக்குப் பிடிச்ச நடிகர் என்றால் யாரைச் சொல்வீங்க?'' 

''தமிழில் உள்ள ஹீரோக்கள் பலரும் திறமையானவர்கள்தான். 'சிங்கம்' படத்தின்போது சூர்யாவின் டெடிகேஷனைப் பார்த்து வியந்திருக்கேன். தன் உடம்பை ஏற்றி இறக்குவதாகட்டும், புது புது ரோலுக்கு தயாராகும் விதமாகட்டும் ஒவ்வொன்றிலும் சூர்யா மெனக்கெடுவார். அதனால், அவரை ரொம்பப் பிடிக்கும். விஷால், ஆர்யா என பலரின் ஹார்டு வொர்க்கை பார்த்து சந்தோஷப்படறேன். அதேபோல ஹீரோயின்களில் ராதிகா மேடம் என்னுடைய ஃபேவரைட்.'' 

''அப்படி அவரிடம் ஈர்த்த விஷயம் என்ன?'' 

''ராதிகா மேம் பொருத்தவரை, குடும்பத்தையும் நிர்வகிச்சுட்டு, தயாரிப்பு நிறுவனம், நடிப்பு என ஆல்ரவுண்டராக அசராமல் சுத்தறாங்க. இதெல்லாம் என்னால் முடியுமானு கேட்டா, சந்தேகம்தான். எப்பவும் தன்னை இளமையாக வெச்சிருக்காங்க. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னைத் தனியாக அடையாளப்படுத்துவார். நான் 'சித்தி' சீரியலில் நடிச்சபோது அவரைப் பல விஷயங்களில் உதாரணமாக எடுத்துட்டிருக்கேன். என் எவர் கிரீன் ஸ்டார் ராதிகா மேம்.'' 

''இதுவரை எத்தனை சீரியல்களில் நடிச்சிருக்கீங்க?'' 

''முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு சீரியலிலிருந்தும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். ஆனாலும், இத்தனை வருஷங்களில் பெரிய சேலஞ்சிங் ரோல் எதுவும் பண்ணாத வருத்தம் இருக்கு. கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்னு நினைக்கிறேன்.'' 

''உங்கள் இரண்டு மகன்களையும் சினிமாவுக்கு கொண்டுவரும் எண்ணம் இருக்கா?'' 

''பெரியவர் பத்தாம் வகுப்பும், சின்னவர் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறாங்க. அவங்கதான் என்னுடைய உலகம். அவங்களை விட்டுப் பிரிகிற ஒவ்வொரு நிமிஷமும் எதையோ இழக்கிறதா நினைக்கிறேன். என்கிட்ட அவ்வளவு செல்லம். அப்பாக்கிட்ட பயம். அவங்களுக்கு இந்தத் துறையில் விருப்பம் இருந்து வர நினைச்சாங்கன்னா நிச்சயம் தடை போட மாட்டேன். அதுக்கு முன்னாடி அவங்க நல்லபடியா படிப்பை முடிக்கணும். பிறகுதான் மத்ததெல்லாம்'' என்றபடி ஷூட்டிங்குக்குக் கிளம்பினார் யுவராணி.

அடுத்த கட்டுரைக்கு