Published:Updated:

மொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும்? - ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும்? - ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ விமர்சனம்
மொட்ட பையன் காதலிச்சா என்ன ஆகும்? - ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ விமர்சனம்

`மொட்டப் பையன் காதலைப் பற்றி உனக்கு என்னடா தெரியும்? என கேட்கும் நண்பர்களிடம்,  `நானும் அழகா ஒரு பொண்ண காதலிச்சு, அவளையே கல்யாணம் செஞ்சு, அந்த கல்யாணத்துல உங்களை மொய் எழுத வைக்கல... என் பேரு...' என ஹீரோ தொடைத்தட்டி சவால் விடுகிறார். அந்த சவாலில் ஜெயித்தாரா, இல்லையா? என்பதுதான் `இவன் யாரென்று தெரிகிறதா' படத்தின் ஒன் லைன்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் விஷ்ணு. காமெடி காட்சிகளில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்பவர், ஹீரோவாக ஜஸ்ட் பாஸ்தான் செய்கிறார். காமெடி தாண்டி மற்ற ஏரியாக்களிலும் இன்னும் பயிற்சி வேண்டும் பாஸ். வர்ஷா, இஷாரா என படத்தில் இரண்டு நாயகிகள். இஷாரா நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் நல்ல தேர்வு. சப் இன்ஸ்பெக்டராக போலீஸ் உடையில் வரும் வர்ஷாவைப் பார்க்க, மாறுவேடப்போட்டியில் கலந்துகொண்ட பள்ளிச்சிறுமி போல இருக்கிறார். விஷ்ணுவின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெய்பிரகாஷ், நண்பர்களாக நடித்திருக்கும் அர்ஜுனன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள். எல்லோரையும் விட கச்சிதமான காஸ்டிங், அந்த மூன்று `பாம்பே பாய்ஸ்'தான். அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன் துரைராஜ் மூவரும் என்ட்ரியாகும் காட்சிகள் எல்லாம் காமெடி சரவெடி. இரண்டாம் பாதியில் வரும் இந்த பாம்பே பாய்ஸை படம் முழுக்கவே வந்திருந்தால் செம ரகளையாக இருந்திருக்கும். ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட ஜெயப்பிரகாஷ்- பாம்பே பாய்ஸ் கெமிஸ்ட்ரிதான் தாறுமாறு டொமேட்டோ சோறு.

நண்பர்களிடம் சபதம் எடுப்பது, சபதத்தில் ஜெயிக்க லவ் அப்ளிகேஷனை பிட் நோட்டீஸ் அடித்து கொடுப்பது என ஜாலியாக ஆரம்பித்து செல்லும் படம், சில நிமிடங்களிலேயே சைலண்ட் மோடுக்கு மாறிவிடுகிறது. `ஓட்ட போடாம இளனி சாப்ட முடிமா, பெட்ரோல் போடாம வண்டி ஓட்டமுடியுமா' என காமெடிக்காக ஸ்பூஃப் பாணியில் எழுதப்பட்ட வசனங்களோ, உண்மையிலேயே அது ஸ்பூஃப்தானா என குழம்ப வைக்கிறது. விஷ்ணு - வர்ஷாவுக்கு இடையேயான காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் பாம்பே பாய்ஸ், கடத்தல் என மறுபடியும் ஜாலி மோடுக்கு தாவி விடுகிறது. 

இரட்டை அர்த்தம் இல்லாத, ஆபாசம் கலக்காத காமெடி வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். அதேசமயம், படம் முழுக்க வசனம் பேசும் எல்லோருமே ரைமிங்கில் பேசிக் கொல்கிறார்கள். ஆனாலும் ஆங்காங்கே `டிரை பண்ணதெல்லாம் ஃபெய்லியர்ஆகறதால பெய்லியர் ஆனத டிரைபண்லாம்', 'வாழ்க்கைல எங்க வேணா திருப்பம் வர்லாம். அந்த திருப்பத்துல ஏன் நான் வரக்கூடாது?' என்று ஜஸ்ட் லைக் தட் பேசும் வசனங்கள் ஜிவ்வென்று இழுக்கிறது. ரகுநந்தனின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் அனைத்தும் 'எங்கேயோ கேட்ட பாடல்' மோடிலேயே ஒலிக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பும் நிறைவு. 

இயக்குநர் எஸ்.சுரேஷ் குமாரிடம் திறமை நிறையவே  இருக்கிறது. ஆரம்பமும், இடைவேளைக்கும் பின்னும் ஓகே. அதற்கு நடுவிலுள்ள போர்ஷன்களில்தான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் போன ஶ்ரீ மாதிரி தியேட்டரே உம்ம்மென்றிருக்கிறது. அந்தப் போர்ஷன்களை மட்டும் பட்டி, டிங்கரிங் பார்த்திருந்தால், இவன் யாரென்று ஊருக்கே தெரிந்திருக்கும்!