Published:Updated:

"ஃபஹத்தின் அந்தச் சிரிப்பு!" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி?

"ஃபஹத்தின் அந்தச் சிரிப்பு!" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி?
"ஃபஹத்தின் அந்தச் சிரிப்பு!" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி?

'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தைத் தொடர்ந்து 'தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்' படத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் திலேஷ் போத்தன். கூடவே முந்தைய படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசிலும் (சென்ற வாரம்தான் இவர் நடித்த 'ரோல் மாடல்ஸ்' வெளியாகியிருக்கிறது) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே தேசிய விருது வரை சென்றவர், இந்தப் படத்தில் என்ன கதை சொல்லியிருக்கிறார், எப்படி இருக்கிறது 'தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்'?

திருடன், போலீஸ் மற்றும் ஒரு அப்பாவி தம்பதி இவர்கள்தான் கதையின் முக்கிய நபர்கள். ஆழப்புழாவில் வசிக்கும் பிரசாத்துக்கும் (சுராஜ்), ஸ்ரீஜாவுக்கும் (நிமிஷா சஜாயன்) காதல். சாதியைப் பிரச்சனையால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு பேருந்துப் பயணம் இந்தத் தம்பதியின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஏதோ பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை, வேறு பிரச்சனையைச் சந்திக்கத் தள்ளிவிடுகிறது அந்தப் பயணம். அது என்ன, இதில் ஃபஹத் எங்கு வருகிறார், கடைசியில் என்ன ஆகிறது என்பதாக பயணச் சீட்டுக்கு பின்னால் எழுதிமுடித்துவிடும் படியான கதைதான் படத்தினுடையது. ஆனால், படத்தின் யதார்த்தமும், சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் சுவாரஸ்யமான ஏதோ ஒன்றை நிகழ்த்துவதுதான் படத்தின் சிறப்பு.

முந்தைய படத்தில் பச்சைப் பசேலென இடுக்கியின் சாரலை உணரச் செய்த திலேஷ் , இதில் காய்ந்த புற்களுக்குள் நடமாடவிடுகிறார். ஊரில் அது திருவிழா நேரம், குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறான், திருவிழா முடியும் வரை கஸ்டடியில் வைத்துக் கொள்ளுங்கள் என தாயும், மனைவியும் சொன்னதன் பேரில் ஒருவனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்கள். அவனுக்கு காவல் நிலையத்தின் தினசரி புரியவே இல்லை, தினமும் காவல் நிலையத்துக்குத் தேவையான குடிநீரைக் கொண்டுவருவதுதான் அவனின் வேலை. "சார் நான் தினமும், காலைல, சாயங்காலம் ரெண்டு வேலை கூட தண்ணி எடுத்துக் கொடுக்கறேன், என்ன ரிலீஸ் பண்ணிடுங்க சார்" எனக் கேட்கும் கதாபாத்திரம் ஒன்று, பேருந்தில் ஃபகத்தை அடித்த ஒருவன், எப்போதும் காவல் நிலையத்தில் எல்லோருக்கும் கோவில் பிரசாதம் கொடுக்கும் லேடி கான்ஸ்டபிள், மகனை இழந்த சில நாட்களில் ரிட்டயர்ட் ஆகப் போகும் போலீஸ், பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்ஃபரில் வந்திருக்கும் சர்கிள் இன்ஸ்பெக்டர் எனப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபத்திரத்திற்குப் பின்னாலும் ஒரு கதை, அல்லது குட்டியூண்டு குறிப்பு இருக்கும்.

ஃபஹத்துக்கு கதைப்படி எந்த அடையாளமும் கிடையாது. போலியான பெயரைத்தான் சொல்வார், தன்னைப்பற்றிய தகவல்களில் கூட பொய் கலந்துதான் சொல்வார் என்பது மாதிரி மர்மமான அவரின் கதாபாத்திர வடிவமைப்பு அழகு. அடி வாங்கி அலறுகிறார், தப்பி ஓடுகிறார், ட்ரம்மில் இருக்கும் தண்ணீரை அள்ளி உடையணிந்தவாரே ஒரு குளியல் போட்டு, பதற்றம் காட்டாதபடி சாவகாசமாய் ஒரு நடை போடுகிறார். இதனுடன் சேர்த்து சிரிப்பு ஒன்று சிரிக்கிறார். அத்தனையும் பார்க்க முடிகிறது ஃபஹத்தின் அந்த சிரிப்பில். காமெடி நடிகர் என்கிற நிலையில் இருந்து மெல்ல மெல்ல விலகி தன்னை ஒரு பெர்ஃபாமராக ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் ('ஆக்‌ஷன் ஹீரோ பிஜு'வின் அந்த ஒரு காட்சி போதுமே) கொண்டிருக்கிறார் சுராஜ். நிமிஷாவுடனான முதல் உரையாடல் துவங்கி படத்தில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். அதே போலதான் அலென்சிர் நடிப்பும். குறிப்பிட வேண்டிய இன்னொருவர் கூட இருக்கிறார். ஸ்ரீஜாவாக நடித்திருக்கும் நிமிஷா சஜாயன் மும்பை பெண்ணு என்றால் நம்ப முடியவில்லை. அசல் நம்ம ஊர் பொண்ணு முகம். காதலில் விழுவது, கையறுநிலையில் விழிப்பது என எல்லாமும் முதல் படத்திலேயே கைகூடியிருக்கிறது. 

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாக ஃபஹத்தை விரட்டிச் செல்லும் அந்த சேசிங் காட்சி, கால்வாய் வரை நீள்வது, சுராஜ், ஃபஹத்தைத் தப்பவிடாமல் பிடித்து நிறுத்துவதைக் காட்டும் கோணங்கள் எல்லாம் மிகச் சிறப்பு. அதுகூடவே நாம் பார்க்கும் எந்தக் கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியாமல், நிஜமாகவே அப்படி ஒரு ஆள் திரைக்குப் பின்னால் இருக்கிறார் போல, என நம்பும்படி பதிவு செய்திருக்கிறார் ராஜீவ். பின்னணி இசையில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் பாடல்களில் ரசிக்க வைக்கிறார் பிஜி பால். காவல் நிலையத்தை சுற்றி நடக்கும் கதையும், காமெடியாக நகர்த்தும் விதமும் கொஞ்சம் 'ஆக்‌ஷன் ஹீரோ பிஜு'வை  நினைவுபடுத்தலாம். ஆனால் இதற்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.

தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் 'காட்சியும் சாட்சியும்' எனச் சொல்லலாம். இந்தத் தலைப்புக்கான கதை இடைவேளையோடு முடிந்துவிடும். அதன் பின்பு நடப்பதெல்லாம் வேறு. அது சற்று சோர்வு தரக்கூடியதும் கூட. படத்தில் நிமிஷாவின் அப்பா கதாபாத்திரத்திற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். மிக சாதுவாக பயந்து நடுங்கியபடி போனில் பேசுவார்.  நிமிஷாவின் காதல் பற்றி அறிந்ததும், அவரே, சுராஜிடம் சென்று கடும் கோபத்தைக் காட்டும் காட்சி ஒன்றும் உண்டு. அழுகையும், கோபமும் இணையும் புள்ளியில், அந்த நடுங்கும் குரலில் ஒரு திட்டு திட்டிவிட்டு செல்வார். அது போல படத்தில் எல்லோருக்கும் ஒரு இடம் வரும். முதன்முறை நாம் பார்த்தபோது கடுகடு என இருந்த ஒருவர், பின்னாடி அவரின் சுபாவமே மாறி கெக்கே பிக்கே என சிரிப்பவராகியிருப்பார். அப்படி இந்தப் படத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டுமானால் க்ளைமாக்ஸில் ஃபஹத் கடிதத்தை போஸ்ட் செய்யும்வரை அமைதியாக ரசிக்க வேண்டும். கண்டிப்பாக அது ஒரு அசல் அனுபவத்தை உங்களுக்குத் தரும்.

பின் செல்ல