Published:Updated:

தோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு! - `பேபி டிரைவர்' படம் எப்படி?

கார்த்தி
தோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு! - `பேபி டிரைவர்' படம் எப்படி?
தோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு! - `பேபி டிரைவர்' படம் எப்படி?

மியூசிக்கல் படங்கள், பெரும்பாலும் ரொமான்டிக் படங்களாகத்தான் (லா லா லேண்டு, பியூட்டி அண்டு தி பீஸ்ட்) ஹாலிவுட்டில் வெளிவந்துள்ளன. ஜானி டெப், ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் நடித்த ஹாரர் திரைப்படமான `ஸ்வீனி டாட்' எல்லாம் விதிவிலக்கு. அதிரடி ஆக்‌ஷன் படத்துக்குப் பாடல்கள் தேவைப்படுவதே இல்லை. அப்படியே தேவைப்பட்டாலும், சம்பிரதாயப் பாடலாக ஒன்றே ஒன்று ஒலிக்கும். `பேபி டிரைவர்' படத்தில் முழுக்க முழுக்கப் பாடல்கள் மட்டும்தான். ஆக்‌ஷன் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர்களைக் குவித்த `மேட்மேக்ஸ்' ஒரு ரகம் என்றால், `பேபி டிரைவர்' இன்னொரு ரகம்.

ஒரு கதை படமாவதற்கும், ஆகாமல் கிடப்பில் போடப்படுவதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். சில கதைகளின் கரு, படமாவது வரை  வளர்ந்துகொண்டே இருக்கும். இயக்குநரும் எழுத்தாளருமான எட்கர் ரைட், 1994-ம் ஆண்டு இந்தப் படத்தின் கதையை எழுதினார். பிறகு 2003-ம் ஆண்டு நோயல் ஃபீல்டிங் நடித்த ஒரு மியூசிக்கல் வீடியோவை இயக்குகிறார். அதில், வங்கிக்கொள்ளையர்களுக்காக வண்டி ஓட்டும் நபராக நடிக்கிறார் நோயல். அவனுக்கு பாடல்கள் கேட்டுக்கொண்டே ஓட்டுவதுதான் பிடிக்கும். இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே `பேபி டிரைவர்' படத்தினுள் கொண்டுவருகிறார் எட்கர் ரைட். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதி இயக்க நினைத்த கதையை இன்னும் அதிரடியாக `பேபி டிரைவர்' படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் எட்கர் ரைட். சமீபத்திய ஆண்டுகளில் வெளியான படங்களில், சிறப்பான ஓர் அனுபவத்தைத் தருகிறது `பேபி டிரைவர்'. டொரென்டினோ, கை ரிட்ச்சி போன்ற இயக்குநர்களுக்கு ஒரு கல்ட் ரசிகர் கூட்டம் இருப்பது போல், இனி எட்கர் ரைட்டுக்கும் வரப்போவது உறுதி. 

ஏதோ ஒரு காரணத்தின் பேரில், ஒயிட் காலர் வில்லன் டாக்கிடம் (கெவின் ஸ்பேஸி) கடன்பட்டிருக்கிறார் பேபி. சிறுவயதில் பேபிக்கு ஏற்படும் ஒரு விபத்தால், அவனுக்கு காது இரைச்சல் `டின்னிடஸ்' (tinnitus) ஏற்படுகிறது. ஒவ்வொரு திருட்டுக்கும் தன் டீமை மாற்றிக்கொண்டே வருகிறார் டாக். ஆனால், காரின் டிரைவர் மட்டும் எப்போதுமே பேபிதான். போலீஸிடம் யார் சிக்கினார்கள்; யார் தப்பினார்கள் என்பதை அதிரடி வேகத்தில் இசையுடன் சொல்லியிருக்கிறது `பேபி டிரைவர்'.

ஒவ்வொரு திருட்டுக்கும் ஒவ்வொரு டீம். அவர்களுக்கு வித்தியாசமான அடைமொழிகள், ஸ்டைல், எல்லோருக்கும் ஒரு குட்டி அறிமுக கதை என ஒவ்வொரு கதாபாத்திரமும் ரியலாக இருக்கிறது. ஜேசன் `பட்டி (buddy)' லியோன் `பேட்ஸ்' , மோனிகா `டார்லிங் ' , எட்டி `நோ- நோஸ்' என ஒவ்வொருவருக்கும் ஒரு நிக் நேம் வேறு. டீமில் இருக்கும் அனைவருமே கொடூரக் கெட்டவர்கள். 24*7 காதல் மோடிலேயே சுற்றும் ஜேசனும் மோனிகாவும் ஒருவகை என்றால், பேசியே ஒருவனைக் கடுப்பேற்றும் லியோன் `பேட்ஸ்' வேறு லெவல் ட்ரீட்மென்ட். 
ஜேமி ஃபாக்ஸ் போன்ற நாயகர்களின் நடிப்பைக்கூடப் பின்னுக்குத் தள்ளி இதில் அசால்ட்டாக ஸ்கோர்செய்வது  பேபியாக நடித்திருப்பது அன்செல் எல்கார்ட்தான். டீமில் நடக்கும் முக்கியமான மீட்டிங் சமயங்களிலும் பாடல்கள் மட்டுமே பேபி கேட்கிறார். வாய் அசைவுகளை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார். அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து, அதை ரீமிக்ஸ் செய்து பாடல் ஆக்குவது. பிறகு அதுவே அவனுக்கு ஆபத்தாக முடிவது என பேபியின் கதாபாத்திரம் அதிரடி ஃப்ரெஷ்.  

படத்தின் மற்றுமொரு ப்ளஸ் வசனங்கள். வில்லன் கூட்டத்துக்குள் பேசப்படும் சின்னச் சின்ன காமெடி ஒன்லைனர்கள் செம. ``HATE'னுதான் டாட்டூ குத்தினேன்.வேலையே கிடைக்கலை. அதான் `HAT'னு மாத்திக்கிட்டேன்', `அவன் பேச மாட்டானா?' Retarded ... No... Slow... . இந்த வார்த்தைகளை அப்படியே ரீமிக்ஸ் செய்து அதைப் பாடலாக்கியவிதம் சூப்பர். படத்தில் கிட்டத்தட்ட 30 பாடல்கள் ஒலிக்கின்றன. சிறு வயதில் பேபிக்கு நேரும் விபத்துக்கு முன், அவனின் தாய் பாடிய பாடல் தொடங்கி தான் கேட்கும் உரையாடல் அனைத்தையும் ஒவ்வொரு கேசட்டில் பதிவேற்றுகிறார் பேபி. அதிலும் குறிப்பாக, பேபியும் அவர் காதலியும் பேசிக்கொள்ளும் சின்னச் சின்ன வசனங்கள்கூட ரொமான்டிக்காக இருக்கிறது.

படத்தின் மற்றொரு ப்ளஸ் அதன் அதிரடி வேகமும், அதற்கு ஈடுகொடுத்திருக்கும் ஜொனாதன் அமோஸ், பால் மெச்லிஸ் எடிட்டிங்கும்தான். `இனி இந்த வேலை வேண்டாம்' என முடிவெடுத்து, ஒரு கடைக்குள் நுழைந்து வெளியே பீட்சா டெலிவெரி பையனாக வருவான் பேபி. தன் துப்பாகியை சம்பவ இடத்திலேயே தவறவிட்டவனுக்கு நேரும் கதி என, பல காட்சிகள் செம ஃபாஸ்ட்.

படத்தின் இறுதிக்காட்சிகள், டெம்ப்ளேட் ஹாலிவுட் சினிமா பார்த்த அனுபவத்தைத் தருவது மட்டுமே படத்தின் ஒரே ஒரு குறை. ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் அசால்ட்டாக டீல் செய்யும் கெவின்  ஸ்பேஸி, காதல் ஜோடிகளுக்கு மனம் இறங்குவதெல்லாம்... `அட போங்க பாஸ்!' ரகம். நல்லவன் ஒருவனுக்கு, ஏதொவொரு வகையில் எப்போதும் நல்லது நடக்கும் என்பதைக் காட்டும் இறுதிக்காட்சிகள் கொஞ்சம் எமோஷனல். 

சினிமா காதலர்கள் பார்க்கவேண்டிய இந்த ஆண்டின் மிகச்சிறப்பான படங்களுள் `பேபி டிரைவர் ' படமும் ஒன்று. சினிமா திரையரங்க ஸ்டிரைக் எல்லாம் முடிந்து, வாய்ப்பு கிடைக்கும்போது பாருங்கள். டோன்ட் மிஸ்!!!