Published:Updated:

‘அன்னிக்கே லிஃப்டுக்குள்ள பிக் பாஸ் நடத்துனேன்..!’ - பாண்டியராஜன் கலகல #VikatanExclusive

‘அன்னிக்கே லிஃப்டுக்குள்ள பிக் பாஸ் நடத்துனேன்..!’ - பாண்டியராஜன் கலகல #VikatanExclusive
‘அன்னிக்கே லிஃப்டுக்குள்ள பிக் பாஸ் நடத்துனேன்..!’ - பாண்டியராஜன் கலகல #VikatanExclusive

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து 'கன்னிராசி', 'ஆண்பாவம்' படங்களின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.பாண்டியராஜன். பல படங்களில் நடித்தவர் ஃபேமிலி - காமெடி ட்ராமா வரிசையில் சில வெற்றிப்படங்களையும் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்திலும் நடித்திருக்கிறார். இன்னொரு படத்தின் ஷூட்டிங்குக்காகக் கிளம்பிக்கொண்டிருந்தவரைச் சந்தித்து ப்ளாஷ்பேக்கை கிளறினோம்... 

"பாக்யராஜிடம் சேர்ந்தது பற்றி..?"

“தேவர் பிலிம்ஸ் வசனகர்த்தா தூயவன்கிட்ட காப்பி ரைட்டரா வேலை பார்க்கும்போது குருநாதர் பாக்யராஜ்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர முயற்சி பண்ணினேன். ஆள் நிறைய இருக்காங்கனு என்னை வேண்டாம்னு சொல்லிட்டார். அவரோட  அசோஸியெட் சுப்பிரமணி என்னைச் சிபாரிசு பண்ணினார். அப்பவும் அவர் சேர்த்துக்கலை. அப்புறம், அவர்கிட்ட இருந்த இணை இயக்குநர்கள் வேறு படம் எடுக்கப் போனதால என்னை அவங்களோட சேர்த்துக்கிட்டாங்க. குருநாதருக்கே தெரியாமல்தான் அவரோட யூனிட்டுக்குள்ள நுழைஞ்சேன். அழுது அடம்பிடிச்சு அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். அசோஸியேட் சுப்பிரமணி என்னைச் சிபாரிசு பண்ணின நன்றிக்காக 'புது மாப்பிள்ளை'னு அவர் டைரக்ட் பண்ணின படத்துல நடிச்சுக் கொடுத்தேன். நாம வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கணும். என் குருநாதர்கிட்ட சேர்ந்ததுதான் என் வாழ்வின் பெரிய திருப்புமுனை."

'ஆண்பாவம்' - அனுபவம்..."

" 'ஆண்பாவம்' சாதாரண மனிதர்களுடைய கதை. நம்ம வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள் எல்லாத்தையும் ரசிகர்களுக்கு ருசிகரமா சொல்லணும்ங்கிறதுதான் என்னோட பாணி. புலி ஒரு மான் கூட்டத்தையே துரத்தத் தொடங்கினாலும் கடைசியாகக் குறிவெச்சுப் பிடிக்கிறது ஒரு மானைத்தான். அப்படி நான் பிடிச்ச மான்  'ஆண்பாவம்'. இன்னும் அதேமாதிரியான  மான் வேட்டைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு. இப்ப நான் ஒரு படத்துக்கு ஸ்க்ரிப்ட் வொர்க் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்."

"யூத் பல்ஸ் பிடித்து இப்போம் நீங்கள் ஹிட் படங்கள் கொடுக்க முடியுமா..?" 

"அப்பவே படம் எடுத்திருக்கோம்... இப்ப எடுக்க முடியாதான்னு கேட்கமுடியாது. ஏன்னா அப்போ ஃபிலிம் ரோலை நம்பிப் படம் எடுத்தோம். ஃபிலிம் ரோல் இல்லாம சினிமாவே இருக்காதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்த காலம் அது. ஆனா, இப்போ அது சாத்தியமாச்சு. 'கோபாலா கோபாலா' படத்தில் ஒரு லிஃப்ட்டுக்குள்ள குஷ்புவும் நானும் ஒரு நாள் முழுக்க சிக்கிக்குவோம். உள்ளே நான் சமைச்சு ரெண்டு பேரும் சாப்பிட்டு அந்த நாளை ஓட்டுவோம். அதையே ஒரு வீட்டுக்குள்ள நூறு நாள் பண்ணினா இப்போ 'பிக் பாஸ்'. நாங்க அப்பவே 'பிக் பாஸ்' நடத்தியாச்சு. இப்போ இருக்கிற சூழலுக்கு ஏற்றமாதிரி அப்டேட் பண்ணிக்கிட்டு படம் எடுக்கணும். அதுதான் முக்கியம். இளமையா யோசிக்கிறவங்க எந்தக் காலத்துலயும் படம் எடுக்கலாம். ஆனா, சினிமா ரசிகர்களை முன்னாடி மாதிரியே எடைபோட்டுடக் கூடாது. நம்ம ஸ்டைலை வெச்சுக்கிட்டு ட்ரெண்டைக் கலக்கணும்."

“அன்றைய - இன்றைய சினிமா எப்படி இருக்கு..?”

“ 'கோபாலா கோபாலா' படத்தின் லிஃப்ட் காட்சியை இப்ப எடுக்கமுடியாது. ரசிகர்கள் கேள்வி கேட்பாங்க. போன் இருக்கும்... ஒருத்தர் போன்ல சார்ஜ் இல்லைன்னாலும் இன்னொருத்தர் மெசேஜ் பண்ணலாம், கால் பண்ணலாம்னு லாஜிக் பேசுவாங்க. ரெண்டு பேரோட போன்களையும் மறந்து வெச்சுட்டு வந்துட்டதா அங்க ஒரு எக்ஸ்ட்ரா காட்சி வைக்கணும். இப்படி அப்போதைய சினிமாவை இந்தக் காலத்தில் எடுக்க முடியாது. இப்ப வர்ற படங்கள்ல போன் இல்லாம கதைகளே இல்லை. படம் ஆரம்பிக்கிறதுல இருந்து முடியுற வரைக்கும் போன் கதையில் ஒரு கேரக்டராவே வாழுது. இங்கே இருந்து ஒருத்தன் கால் பண்றான். அங்கே இருந்து ஒருத்தன் இன்பார்ம் பண்றான்னு படத்தில் பல சீன்கள் போனில் பேசுபவையாகவே இருக்கின்றன. போனை பிடுங்கி வெச்சுட்டா அந்தக் கதையே காணாமப் போயிடும்போல. ஆனால், போன் இல்லாத காலத்திலும் படங்கள் எடுத்தோம். 

முன்னாடி டைரக்டர் ஸ்க்ரிப்டை கார்பன் பேப்பர் வெச்சு காப்பி எடுக்கணும். கார்பன் பேப்பரே இப்போ காணாமா போச்சு. எழுதுறதும் இல்லாமப் போச்சு. தந்திக்கம்பம் இல்லாமப் போச்சு. தந்திக்கம்பத்தை இனி சமகாலப் படங்களில் பயன்படுத்த முடியாது. புதுசா வந்ததை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கக்கூடாது. கடந்து போனதையும் திரும்பிப் பார்க்கணும். படம் எடுக்கிறதுக்கு மட்டும் இல்ல... வாழ்க்கைக்கும்தான். சினிமாவுக்கு நீங்க வர ஆசைப்பட்டா, முதல் விஷயம் , 'ஏமாறத் தயாரா இருங்க’னு சொல்வேன். ஏன்னா, இது ஆபத்தை நோக்கிப் போற சாகசப் பயணம். அதே சமயம் நம்ம இலக்குக்குப் போய்ச் சேர்ற வரை நாம ஓயக் கூடாது."

"உங்கள் சினிமா வாரிசுகள்..?"

(சிரிக்கிறார்...) "மூத்தவர் பிருத்விராஜன் சில படங்களில் நடிச்சுட்டார். நான் ஒரு கேமரா கண்காட்சிக்குப் போனேன். என் மகன்கிட்ட பிக்ஸல் கேமராவைக் காட்டி பேசுறப்போ அந்தக் காலத்துல இதுலதான் எடுப்பாங்கனு சொல்லிக்கிட்டு இருந்தேன். அங்க இருந்த கேமராமேன் ஒருத்தர் இது நீங்க நடிச்ச கேமராதான் சார்னு சொல்றார். அவ்வளவு வேகமா காலம் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ என் இளைய மகன் பிரேமராஜன் ட்ரோன் ஆபரேட்டரா இருக்கார். யாருனே தெரியாத ஒருத்தர் திடீர்னு போன் பண்ணி, 'உங்க பையன் கேமரா டெக்னாலஜியில் பிண்றார்'னு பாராட்டுறார். ரொம்பச் சந்தோஷமா இருக்கு. அதுவும் நான் சார்ந்திருக்கிற துறையிலேயே அவங்களும் வளர்றது இன்னும் பெருமையா இருக்கு."

“பாண்டியராஜன் -லொள்ளு... இந்த காம்பினேஷன் உருவானது எப்படி..?"

“வாழ்க்கையில் நமக்கு நடக்குற எல்லா நிகழ்வுகளுமே காமடியா இருந்தாதான் காமெடி படம் எடுக்கமுடியும்ங்கிறதெல்லாம் இல்லை. சார்லி சாப்ளின், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களைத் தாங்கித்தான் ஊர் உலகத்தையே சிரிக்க வெச்சார். நம்மளோட அனுபவங்களையே எல்லோரும் ரசிக்கிற மாதிரி கொடுக்கணும்னு நினைப்பேன். வலியும் காமெடியாச்சு. சோகமா இருக்கும்போது பகடி செய்றது வலியைக் குறைக்கும்."

"எம்.ஜி.ஆர் உடனான அனுபவங்கள்..?"

"எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு செக்கப்காக போய்ட்டு வரும்போது ஏர்போர்ட்டில் சந்திச்சுப் பேசினேன். அவர் 'ஆண்பாவம்' படம் பார்த்திருந்தார். அவர் கூட நின்னு படம் எடுக்கவே பலர் காத்திருக்கும்போது, என் கையில் முத்தம் கொடுத்தார். அந்தப் புகைப்படம் என் வாழ்நாளில் மறக்கமுடியாதது. அதற்கு அப்புறம் அவர் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். ஒரு மாநிலத்தோட முதல்வரா இருந்தாலும், நம்ம தட்டுல என்ன குறைஞ்சிருக்குனு பார்த்து அவரே எடுத்துப் பரிமாறுவார். அவர் வீட்டுல விருந்து சாப்பிட்ட அனுபவத்தை அப்போது விகடனில் 'எம்.ஜி.ஆர் வீட்டு உப்பைத் தின்றேன்' என்கிற தலைப்பில் கட்டுரையாக வந்தது. அதற்கு அப்புறம் ஒருமுறை சந்திக்கும்போது, 'விகடன்ல பார்த்தேன்யா... ‘எனச் சொன்னார். முதல்வராக இருந்தபோதும் ஆடம்பரம் இல்லாமல் ரொம்ப எளிமையாக இருந்தவர் அவர்." நெகிழ்வாகப் பேசி முடித்தார் பாண்டியராஜன்.