Published:Updated:

‘ஒற்றை பீடியில் ஒளிந்திருந்த துரோகத் துகள்கள்!’ - சுப்ரமணியபுரம் நினைவுகள் #10YearsOfSubramaniapuram

‘ஒற்றை பீடியில் ஒளிந்திருந்த துரோகத் துகள்கள்!’ - சுப்ரமணியபுரம் நினைவுகள் #10YearsOfSubramaniapuram
‘ஒற்றை பீடியில் ஒளிந்திருந்த துரோகத் துகள்கள்!’ - சுப்ரமணியபுரம் நினைவுகள் #10YearsOfSubramaniapuram

‘ஒற்றை பீடியில் ஒளிந்திருந்த துரோகத் துகள்கள்!’ - சுப்ரமணியபுரம் நினைவுகள் #10YearsOfSubramaniapuram

நூற்றாண்டு தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தை அறிமுக இயக்குநர் ஒருவரின் படைப்பு ஆக்கிரமிக்க முடியுமா? அந்தப் படைப்பு ‘சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படமாக இருந்தால் நிச்சயம் முடியும். பழக்கத்துக்குக் கொடுக்கும் விலை, காதலுக்குக் கொடுக்கும் விலை, நட்புக்குக் கொடுக்கும் விலை… எல்லாமே துரோகமாகவே இருந்தால் அந்தத் துரோகத்தின் முகம் எவ்வளவு கோரமாக இருக்கும் என்பதை கொஞ்சம் வன்முறை... அதே சமயம் அழகியலாகக் காட்டிய ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி, இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இன்று வெளியாகும் சில படங்களில்கூட ‘சுப்ரமணியபுர’த்தின் சாயல் தொடர்வதில் இருக்கிறது இந்தப் படத்தின் வெற்றியும், எம்.சசிகுமார் மீதான நம்பிக்கையும்! #10YearsOfSubramaniapuram

அப்படி என்ன செய்துவிட்டது இந்தப் படம்? 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு ‘இயக்குநர்’ எம்.சசிகுமாராக, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நகர்விலும் நேர்த்தியைப் பிரதானமாக்கி ரசிகர்கள் ஒரு சினிமாவுக்குச் செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் மதித்து சினிமா கலையைக் ‘கலை’யாகவே ரசிகர்களுக்குக் கொண்டுசேர்த்தார். அதனால்தான், தமிழ் சினிமா காலரைத் தூக்கிக்கொண்டு திரியும்படியாக உருவான சில படங்களின் பட்டியலில் ‘சுப்ரமணியபுரம்’ ஒன்றானது. இல்லையென்றால், `இந்தப் படத்தை இந்தியில் உருவாக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் பெருமை’ என பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சொல்வாரா?

இன்றைய தொழில்நுட்பத்தில் 2020-ம் ஆண்டில் தமிழ்நாடு இப்படி இருக்கும், இந்தியா இப்படி இருக்கும், ரோபோக்கள் எல்லாம் உணர்வுகள் பெற்று மனிதர்களைப் பழிவாங்குவார்கள், பூமி பிளக்கும் உலகம் அதில் புதையும் என்றெல்லாம் கற்பனைக் குதிரையை றெக்கை கட்டிப் பறக்கவிடலாம். ஆனால், ‘கடந்த காலத்தில்’ நாம் இப்படி இருந்தோம், இப்படியெல்லாம் நடந்தது என்பதைப் பதிவுசெய்ய பணத்தைவிட, தொழில்நுட்பத்தைவிட, வரலாறுகளைப் புரட்டுவதைவிட… அதைக் கண்முன் காட்சிப்படுத்திக்காட்ட அசாத்திய உழைப்பு வேண்டும். ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் 1980-களின் வாழ்வியல் அத்தனை நேர்த்தியாக இருந்தது.

நேர்த்திக்கு ஆயிரம் திரைக்கதைகள் அடுக்கலாம். ரசிகர்கள் மனதில் பதிய நல்ல கதை வேண்டும். அந்தக் கதை, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மாயாஜால வித்தை காட்டாமல், அடுக்குமாடியில் இருந்து ஹீரோ குதித்துக் கண் அடிக்கும் போலித்தனத்தைக் காட்டாமல், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆயிரம் பேரை அடித்துத் துவைக்கும் இமேஜினேஷன் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் காலம் காலமாக ‘வேண்டும்’ என இருந்ததை எல்லாம் ‘வேண்டாம்’ என சசிகுமார் முடிவெடுத்ததிலிருந்தது ‘சுப்ரமணியபுரம்’ என்ற நல்ல கதை.

இன்றைய இளைஞர்கள்கூட சில மாதங்கள், சில நாள்களாவது ‘வேலையில்லா காலத்தை’க் கடந்துவந்தவர்கள்தான். அப்போதெல்லாம் நம் அன்றாட பொழுதுகள் எப்படிக் கழிந்தன? டீக்கடையில் முகாமிட்டிருப்போம், ஊர் திருவிழாக்களின் நாயகர்களாக ரவுண்டு அடித்திருப்போம், சின்னச் சின்னச் சேட்டைகள், அதனால் எழுந்த சண்டைகள்… இப்படித்தான் கடந்தோம். நாம் கடந்ததை சசிகுமார் கண்முன் நிறுத்தினார், கதை பிறந்தது.

அழகர், பரமன், டும்கான், காசி, டோபா என்ற ஐந்து இளைஞர்களோடு, சித்தன் என்கிற பெருசு. சித்தனின் சவுண்ட் சர்வீஸ் கடையில் வளர்கிறது நட்பு. வேலை இல்லை. சித்தனுக்குக் கிடைக்கும் வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு குடியும் புகையுமாக வாழ்கிறார்கள். அவ்வப்போது இவர்களுக்கு வரும் சிறு இன்னல்களுக்கு அரசியல்வாதிகள் கனகு, சோமு கைகொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். இன்னொரு பக்கம் சோமுவின் மகள் துளசிக்கும் அழகருக்குமான காதல் டிராக் நீண்டுகொண்டிருக்கிறது. கோயில் திருவிழா நோட்டீஸில் சோமுவின் பெயர் இல்லை என்பதில் தொடங்கும் அதிகாரப் பசிக்கு, சககட்சிக்காரரைத் தீர்த்துக்கட்டி அந்த இடத்தில் சோமுவை அமரவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் படத்தின் கதை நகர்ந்து நிற்க…

சோமு – கனகு மீதான விசுவாசத்துக்காக ஒரு கொலையைச் செய்கிறார்கள் அழகர், பரமன், காசி. முதல் துரோகம் தொடங்குகிறது. தங்களின் அதிகாரத்துக்காக, அண்ணனின் பதவிப் பசிக்காகக் கொலை செய்யச் சொன்ன கனகு, கொலைசெய்த மூவரையும் கைக்கழுவுகிறார். மீண்டும் பழக்கத்துக்காக ஒரு கொலைச் சூழல் உருவாகிறது, செய்கிறார்கள். பழக்கத்துக்காகக் கத்தியைத் தூக்கிய அழகர், பரமன், காசிக்கு அதுவே நிரந்தரமாகிறது. தங்கள் பாதுகாப்புக்காக சில கொலைகளைச் செய்கிறார்கள். ஆதிக்க வெறியும் அதிகாரமும் கையைக் கட்டிக்கொண்டு நிற்குமா என்ன?

காதலி மூலமாகவே அழகர் பிணமாகிறான். பழக்கத்துக்காக விசுவாசம்காட்டிய பரமன், இப்போது நட்புக்கு விசுவாசமாக இருக்க, கனகுவைக் கொலைசெய்கிறான். பரமன் நட்புக்கு விசுவாசம்காட்ட, காசி நட்புக்கு மீண்டும் துரோகம் இழைத்து, பரமனை பலியாக்குகிறான். நட்பின் விசுவாசத்தைக் காசிக்கு யார் புரியவைப்பது? 28 வருடங்களுக்குப் பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வரும் காசியை, கத்தியால் குத்துகிறான் டோபா. சாவின் விளிம்பில் இருக்கும் காசியின் மூச்சை நிறுத்திவிட்டு, நட்பின் இலக்கணமாக நொண்டிக்காலுடன் நடையைக் கட்டுகிறான் டும்கான். 1980-களிலிருந்து மீண்டு, 2008-ம் ஆண்டில் வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஒரு சினிமாவுக்கான ‘ரசனை’யை அனுபவித்த ரசிகர்கள்!

இந்தப் படத்தில் ‘ரசனை’ எங்கெல்லாம் இருந்தது? எல்லா இடங்களிலும் இருந்தது. ரேடியோ பெட்டியில் ஒலிக்கும் பாடல்கள், திரையரங்கில் இருக்கும் ரஜினி கட்அவுட், ஸ்டியரிங் வைத்த சைக்கிள், சில்வர் கலர் பஸ், காளிமார்க் விளம்பரங்கள், நடிகர்களின் உடை… ஏன் காலண்டரில் காட்டப்படும் தேதியில்கூட ‘1980’-களின் நேர்த்தியைக் கச்சிதமாகக் கொண்டுவந்திருந்தார் கலை இயக்குநர் ரெம்போன். ‘கண்கள் இரண்டால்…’ பாடல் காதலின் அழகைச் சொன்னால், ‘காதல் சிலுவையில்…’ வலியைச் சொன்னது. ‘மதுரை குலுங்க…’ உற்சாகம் கொடுத்தால், ‘சுப்ரமணியபுரம்….’ தீம் சாங் பரபரப்பைப் பற்றவைத்தது. சரளைக் கற்களை எறிந்துகொள்வது, சோடாபாட்டில்களை உடைத்து அடிப்பது, பாத்திரங்களை எடுத்துச் சாத்துவது… என ஆக்‌ஷன் காட்சிகளில் ‘தெருச்சண்டை’யை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த அனுபவம் தந்தது.

`அரசியல்ல கடைசிவரைக்கும் ஏதோ ஒரு பதவியில ஒட்டிக்கிட்டு இருக்கணும்' என்ற வசனம் அரசியல் நிலையைப் பேசியது. `எனக்கு சாவு பயத்தைக் காட்டிட்டாங்க, அவங்களுக்குச் சாவைக் காட்டிடணும்' வசனம், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான சூழலையும், இனி `கத்தி'தான் அவர்கள் வாழ்க்கை என்றாகிப்போனதையும் சொன்னது. `பழக்கத்துக்காகப் பழக்கத்துக்காகனு சொல்லியே வாழ்க்கையை வீணாக்கிட்டோமேடா!' என்ற வசனம், மூவரும் செய்த பிழையின் ஆழத்தையும், சந்தோஷமாகக் கழிந்து வெறுமையாகிப்போன அவர்கள் வாழ்க்கையையும் பிரதிபலித்தது. 

துரோகத்தின் அடையாளமான காசி நடந்துவரும் காட்சியில் தொடங்கிய படம், விசுவாசத்தின் அடையாளமான டும்கான் நடந்துசெல்வதுபோல முடியும் என இயக்குநர் சசிகுமார் திரைக்கதை அழகியலைத் தீர்மானித்தால், அந்தத் திரைக்கதையைத் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக் கொடுத்திருந்தார்கள் கேமராமேன் எஸ்.ஆர்.கதிரும் எடிட்டர் ராஜா முகமதுவும். இப்படியாகப் படம் முழுக்க பேப்பர் வொர்க்கிலிருந்து, ஃபர்ஸ்ட் காப்பியின் ஃபிலிம் சுருள் வரை ‘நேர்த்தியாக’ இருக்கவேண்டும் என்ற உழைப்புதான், ‘சுப்ரமணியபுர’த்தின் மாபெரும் வெற்றி.

கஞ்சா கருப்பு ஏற்றிருந்த ‘காசி’ கேரக்டர், படத்தின் மிக முக்கியக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். படம் முழுக்க காமெடியனாகப் பின்னிப்பெடலெடுத்திருப்பார். ‘ஒன்னைய நம்பி ஒத்த பீடி கடன் கொடுப்பானா?’ என்ற நகைப்புக்காக, பீடி திருடி போலீஸில் அடிவாங்குவார். பணம் கையில் சேர்ந்த பிறகு, எந்தக் கடையில் பீடி திருடினாரோ… அந்தக் கடையில் வேலைபார்க்கும் சிறுவனைவைத்து பீடி பற்றவைப்பார். க்ளைமாக்ஸ் காட்சியில் பரமனைக் காவுகொடுக்கச் சொல்லிவிட்டு, துரோகத்தின் விலையைப் பெற்றுக்கொள்ளும் காசி, இந்த முறை நிம்மதியாக பீடியைப் பற்றவைப்பான். சமூகத்தில் பலர் இப்படித்தான். பரமன், ‘அவன் ஒரு ஆளாடா?’ எனக் காசியைக் குறிப்பிடுவார். படம் பார்க்கும் எல்லோரும் காசியை காமெடியனாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசிக்குள் இருந்த துரோகத்தின் துகள்கள், க்ளைமாக்ஸில் ஆசுவாசமாக அமர்ந்துகொண்டு பிடித்த அந்த பீடியின் புகையில் இருக்கிறது!

‘சுப்ரமணியபுரம்’ படத்தைப்போல இன்னொரு படம் வந்தாலும், இந்தப் படத்தின் சிறு சிறு திரைக்கதைப் பிரச்னைகளும் இல்லாத ஒரு சினிமா உருவானாலும், அந்த சினிமாவுக்கான விதையாக ‘சுப்ரமணியபுரம்’ இருக்கும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் சசிகுமாருக்கு மீண்டும் ஒரு வாழ்த்தும் நன்றியும்!

அடுத்த கட்டுரைக்கு