Published:Updated:

“எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மடியில் தவழ்ந்த குழந்தை நான்!” நெகிழும் பாடகி ஜனனி

“எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மடியில் தவழ்ந்த குழந்தை நான்!” நெகிழும் பாடகி ஜனனி
“எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மடியில் தவழ்ந்த குழந்தை நான்!” நெகிழும் பாடகி ஜனனி

“எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மடியில் தவழ்ந்த குழந்தை நான்!” நெகிழும் பாடகி ஜனனி

குழந்தைப் பருவத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் மடியில் தவழ்ந்திருக்கேன். 'நீ பாடகியா வரணும்'னு வாழ்த்தியிருக்காங்க. இப்போ நான் மியூசிக் டீச்சர். இதை அவங்க பார்த்திருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பாங்க" என நெகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறார் பாடகி ஜனனி ராஜன். சினிமாவில் சில பின்னணிப் பாடல்களைப் பாடியவர். இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பாடல்கள் வைரல். 

“ஏழு வயசிலிருந்து கர்நாட்டிக் மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ நிறைய கல்சுரல்ஸ் நிகழ்ச்சிகளில் பெர்ஃபாமனஸ் பண்ணுவேன். நம் எதிர்காலம் இசைத்துறையில்தான் என உறுதியா முடிவெடுத்திருந்தேன். பிகாம் முடிச்சதும் சினிமா வாய்ப்பு வந்துச்சு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சார் இயக்கி, இசையமைத்த 'வானவில் வாழ்க்கை' படத்தில், பாடகி ரோல்ல நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. 'ரெண்டு லட்டு திங்க ஆசையா?'னு மனசு குஷியானாலும், எனக்கு ஆக்டிங்ல பெரிய ஈடுபாடு இல்லை. மியூசிக் தெரிஞ்சவங்க மட்டுமே அந்தக் கதையில் நடிக்கணும்னு சொன்னதால் நடிச்சு, நான்கு பாடல்களையும் பாடியிருந்தேன். 2015-ம் வருஷம் அந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. அப்புறம், நடிப்புக்கே அதிக வாய்ப்புகள் தேடிவர, அதைத் தவிர்த்துட்டேன்.

முழு நேரமா எம்.ஏ., மியூசிக் சேர்ந்து, இந்த வருஷம் முடிச்சுட்டேன். மாஸ்டர் டிகிரி சேர்ந்த அதேசமயத்தில் தனியா மியூசிக் ஸ்கூலையும் ஆரம்பிச்சேன். ஈவ்னிங் டைம்ல இருபது குழந்தைகளுக்கு மியூசிக் சொல்லிக்கொடுக்கிறேன். மியூசிக் கத்துக்கிறது, பிராக்டீஸ், வெளிநிகழ்ச்சிகளில் பாடறதுன்னு பிஸியா இருக்கேன். என்னோட ப்ளஸ் மியூசிக். ஒரு டீச்சரா பல குழந்தைகளுக்குக் கத்துக்கொடுக்கிறது அலாதியான இன்பம். வேறு எதிலும் இந்தச் சந்தோஷம் கிடைக்காது'' என்கிற ஜனனி, சோஷியல் மீடியாவில் ஃபாலோயர்ஸ்களைக் கவர்ந்த விதத்தைக் கூறுகிறார். 

"வீட்டுல இருக்கிற நேரமெல்லாம் பாடிக்கிட்டே இருப்பேன். போன வருஷம் தந்தையர் தினத்தின்போது, 'உனக்கென்ன வேணும் சொல்லு' பாடலைப் பாடி, ஃபேஸ்புக்ல அப்லோடு செஞ்சேன். நல்ல ரெஸ்பான்ஸ். தொடர்ந்து, மாசத்துக்கு ரெண்டுப் பாடல்களை அப்லோடு பண்ணிடுவேன். அதுக்குப் பல ஆயிரம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. இப்படி நான் பாடின 'எங்கே எனது கவிதை' பாட்டை, யாரோ ஒருத்தர் யூடியூப்ல அப்லோடு செய்திருக்கார். அந்த வீடியோ வைரல் ஆச்சு. இப்போ, அடுத்தடுத்து சினிமாப் பின்னணி வாய்ப்பு வருது. என் தாத்தா பி.வி.சத்யம், சினிமா தயாரிப்பாளர். வினியோகஸ்தராக இருந்தவர். தாத்தாவோடு சினிமாப் பந்தம் நின்னுப்போய் இருந்துச்சு. இப்போ, என் மூலமா தொடர ஆரம்பிச்சிருக்கு" என்கிற ஜனனி, மீண்டும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடனான நினைவுக்குச் செல்கிறார்.

“என் அப்பா ராஜன், பில்டிங் கன்ஸ்ரெக்‌ஷன் வேலைகள் செய்துட்டிருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா வீட்டுக்கு வொர்க் பண்ணினதில் ரென்டு குடும்பத்துக்கும் பழக்கமாச்சு. சின்ன வயசிலிருந்து அவங்க வீட்டோடும், எம்.எஸ்.எஸ் அம்மாவோடும் நெருங்கிட்டேன். என் அஞ்சு வயசுல எம்.எஸ்.எஸ் அம்மா எனக்குப் பரிசா கொடுத்த, ஆர்மோனியப் பெட்டியைப் பத்திரமா வெச்சிருக்கேன். அம்மா எனக்கு மியூசிக் சொல்லிக்கொடுத்ததும், நான் அவங்களுக்கு பாடிக் காட்டி சிரிக்கவெச்சதும் என்றைக்குமே பசுமையான நினைவுகள். அப்போ, நான் பார்க்க டால் மாதிரி இருப்பேனாம். என்னை எல்லோரும் தூக்கிவெச்சுக் கொஞ்சிகிட்டே இருப்பாங்களாம். அடிக்கடி பாடிகிட்டே இருந்ததால், 'பாட்டுப் பாடும் டால்'னு சொல்வாங்க. அந்த வார்த்தையைப் பலர் சொல்லியிருந்தாலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா சொன்னது மறக்க முடியாது. அவங்க காலமானபோது எனக்கு பதினொரு வயசு. அவங்களோடு நெருங்கிப் பழகி, மடியில் தவழ்ந்தப்போ அவங்க அருமையைப் புரிஞ்சுக்க முடியாத வயசு. இப்போ நினைக்கும்போது, யாருக்குமே கிடைக்காத அதிஷ்டம் எனக்குக் கிடைச்சதேனு பெருமையா இருக்கு" என நெகிழ்வுடன் சிரிக்கிறார் ஜனனி.

அடுத்த கட்டுரைக்கு