Published:Updated:

செல்வராகவன்... தமிழ்க் கலாசார போலித்தனங்களை மீறிய கலைஞன்! #15YearsofSelvaraghavan #WhySelvaIsUnique

செல்வராகவன்... தமிழ்க் கலாசார போலித்தனங்களை மீறிய கலைஞன்! #15YearsofSelvaraghavan #WhySelvaIsUnique
செல்வராகவன்... தமிழ்க் கலாசார போலித்தனங்களை மீறிய கலைஞன்! #15YearsofSelvaraghavan #WhySelvaIsUnique

தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்குநராக அறிமுகமாகி, இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன. திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் தனக்கான தனித்துவம்கொண்டவை செல்வராகவனின் படங்கள். தமிழ் சினிமாவில் பேசப்படாத சில விஷயங்களை, ஆராவாரம் இல்லாமல் நுட்பமாகக் காட்சிப்படுத்தியவை அவரின் படங்கள்.

‘துள்ளுவதோ இளமை' படத்தின் கதை செல்வராகவனுடையது. அந்த வகையில் செல்வா தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகின்றன. எங்கள் ஊரில் `துள்ளுவதோ இளமை' வெளியான முதல் நாள் எந்தச் சலனமும் இல்லை. எந்தப் பிரபலமும் இல்லாத சிறுவர்கள் நடித்த படத்துக்கு என்ன வரவேற்பு இருக்கப்போகிறது? ஆனால் இரண்டொரு நாளிலேயே திரையரங்கம் நிரம்பிவழிந்தது. ‘வித்தியாசமான படம்' என வாய்வழி விமர்சனங்கள் பரவின. விடலைப்பருவத்தின் கொண்டாட்டத்தையும் பாலியல் மீறலையும் பதிவுசெய்த படம் ‘துள்ளுவதோ இளமை'. பாலுமகேந்திரா போன்ற சிலர் இந்தக் கதைக்களத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோதும், இப்படி ஒரு கொண்டாட்டமான சினிமா அதற்கு முன் வந்ததில்லை. இறுதியில் `படிக்கிற வயதில் இதெல்லாம் தேவையா?' என்ற வழக்கமான அறிவுரையுடன்தான் படம் முடிந்தது என்றாலும், இடையில் பேசப்பட்ட விஷயங்கள் புதுமையானவை. 

பொதுவாகவே `டீனேஜ்' எனப்படும் விடலைப்பருவம், மீறலும் கொண்டாட்டங்களும் நிரம்பியது. அதிலும் பாலியல் பற்றிப் பேசுவதையே பாவமாகக் கருதும், தங்கள் குழந்தைகளைக் கலாசாரத்தைப் பாதுகாக்கும் இயந்திரங்களாகக் கருதும் பெற்றோர்கள் நிறைந்த இந்தியச் சூழலில் நம் விடலைப்பருவத்தினருக்கு வரக்கூடிய குழப்பம் பன்மடங்கு அதிகரிக்கிறது. பாலியல் உணர்வுகளின் மூலம் ஏற்படும் பரவசம், பெற்றோர் ஏற்படுத்தும் எரிச்சல், `இது சரியா... தவறா?' எனத் தெரியாத குழப்பம், சுதந்திரமும் அடிமைப்பட்டிருக்கிறோமோ என்கிற எண்ணமும் இணைந்த கலவையான மனநிலை போன்ற உணர்வுகளைச் சரியாகப் பிரதிபலித்த படம் `துள்ளுவதோ இளமை'.  படத்தின் முக்கியமான அம்சம் இளமையும் கொண்டாட்டமும் நிறைந்த யுவன்ஷங்கர்ராஜாவின் இசை. `வயது வா வா என்கிறது', `கண் முன்னே எத்தனை நிலவு', `நெருப்பு கூத்தடிக்குது... காத்தும் கூத்தடிக்குது' என்று யுவனின் இசை ராஜாங்கத்தில் `துள்ளுவதோ இளமை' முக்கியமான மைல்கல். 

செல்வராகவன் இயக்குநராக அறிமுகமான படம் `காதல்கொண்டேன்'. அது செல்வாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே முக்கியமான படம். ஆதரவற்ற இளைஞனின் தனிமைப்பட்ட உணர்வுகள், ஒருவனின் பின்னணியைக்கொண்டே ஒதுக்கும் சமூக அவலம், குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்முறை, நேசம் காட்டும் பெண்ணைப் புரிந்துகொள்ளும் ஆண் மனதின் சிக்கல்கள் என `காதல் கொண்டேன்' பதிவுசெய்த பல விஷயங்கள், நிச்சயமாக தமிழ் சினிமாவில் அதற்கு முன் பேசப்படாதவை. ஏராளமான தமிழ் சினிமாக்களில் நாயகர்கள் `அநாதை'களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு செயற்கைத்தனமும் சென்டிமென்டல் போலித்தனமும் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

`காதல் கொண்டேன்' தனுஷ் தன் வாழ்வில் தொடர்ச்சியாக நிராகரிப்பையும் புறக்கணிப்பையும் சந்தித்துவந்த எளிய ஆன்மா. `சாப்பாடு கெட்டுப்போச்சு' என அனைவரும் ஒதுக்கிவைக்கும் சோற்றை, தனுஷ் பசியுடன் ஆவேசமாக அள்ளி விழுங்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் கண்களில் நீர் திரளும். ஒருவர் பிறந்து வளர்ந்த பின்னணியைக்கொண்டே ஒதுக்கிவைக்கும் அவலம் இன்று வரை தொடரத்தானே செய்கிறது! எந்த இளைஞனை ஒதுக்கிவைத்தார்களோ, அவன் ஆசிரியர் அடித்த சாக்பீஸ் கறையோடு கரும்பலகையில் கணக்கின் புதிர்களை அவிழ்த்து, தன்னை ஜீனியஸாக நிறுவும் இடத்தில் தியேட்டரில் எழும் கைத்தட்டல், உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களின் மன எழுச்சிக்குரல்தான்.

தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞனுக்கு ஒரு பெண்ணின் நேசம் கிடைக்கும்போது அதைத் தனக்கு மட்டுமே உரித்தானதாக மாற்றிக்கொள்ள எண்ணும் பொசசிவ்னெஸை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார் செல்வராகவன். குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஃப்ளாஷ்பேக் காட்சியில் உள்ள வீரியமும் அதிர்ச்சியும் அவலமான சமூக யதார்த்தம். ‘காதல் கொண்டேன்' படம் வந்து 14 ஆண்டுகள் கடந்தும்கூட குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை இவ்வளவு யதார்த்தத்துடனும் அதிர்ச்சிகரமாகவும் காட்சிப்படுத்திய எந்த சினிமாவும் இதுவரை வரவில்லை. இந்தப் படத்திலும் செல்வராகவனின் கலை வெற்றிக்குக் கைகொடுத்தது யுவனின் இசையே.

`7G ரெயின்போ காலனி' சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வசிக்கும் ஆண் - பெண்ணுக்கு இடையிலான மன உணர்வுகளைப் பேசியது. நொடித்துப்போன மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த நாயகி, அந்தக் காலனியில் உள்ளவர்கள் படம் பார்க்கும்போது இருட்டில் தெரியாமல் நாயகனைத் தொட்டுவிடுகிறாள். பிறகு, அருவருப்புடன் வாஷ்பேசினில் போய் வாந்தியெடுக்கிறாள் என்னும்போது நாயகனின் `பின்னணி' என்ன என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. `காதல் புனிதமானது' என ரொமான்டிசைஸ் செய்யும் க்ளைமாக்ஸ்தான் என்றாலும், எப்போதும் ஆண்களுக்காகப் பெண்கள் காத்திருக்கும் தமிழ் சினிமாவில் ஓர் இளைஞன் இறந்துபோன தன் காதலியின் நினைவுகளோடு வாழ்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பார் செல்வராகவன்.

‘காதல் கொண்டேன்' படத்தைப்போலவே செல்வராகவனின் இன்னொரு முக்கியமான படம் `புதுப்பேட்டை'. லும்பன் அரசியலின் வேர்களையும் அது எப்படி வெகுமக்கள் விரோத - ரெளடி அரசியலாக மாறிவிடுகிறது என்பதையும் `புதுப்பேட்டை' அளவுக்குக் காட்சிப்படுத்திய ஒரு தமிழ் சினிமா இல்லை. இதுகுறித்து ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறேன் என்பதால், இங்கே தவிர்க்கிறேன். தனுஷ் என்கிற மகத்தான கலைஞனைத் தமிழ்ச் சமூகத்துக்கு அடையாளப்படுத்தியதும், யுவன்ஷங்கர்ராஜா இசையில் காலத்தால் அழியாத பாடல்களை உருவாக்கியதும் செல்வராகவனின் முக்கியமான பங்களிப்புகளே.

அதற்குப் பிறகு வந்த `மயக்கம் என்ன?' சுமாரான படம் என்றால், `இரண்டாம் உலகம்' மிகச் சுமாரான படம். ஆனால், பலருக்கும் பிடிக்காத `ஆயிரத்தில் ஒருவன்' தமிழின் முக்கியமான படம் என்பது என் கருத்து. தமிழில் பெரிதாக ஃபேன்டசி படங்கள் எடுக்கப்பட்டதில்லை. மிஞ்சிப்போனால், புராணக் கதைகளை அடிப்படையாகக்கொண்ட `திருவிளையாடல்' போன்ற படங்கள், இராம.நாராயணனின் `ஆடி வெள்ளி' போன்ற படங்களே உண்டு. செல்வராகவனோ பக்திக்கு அப்பால் ஃபேன்டசியை இரண்டு படங்களில் பரிசோதித்துப் பார்த்தார்.

`ஆயிரத்தில் ஒருவன்' படம் போரின் வன்முறை, தொன்மையான இனக் குழுவின் எஞ்சிய நினைவுகள், லட்சியவாதத்தின் பின்னடைவு, ஈழப்போரின் துயரங்கள், ராணுவ வன்முறை, பழங்குடியினருக்கு எதிரான அரச பயங்கரவாதம் ஆகியவற்றை ஃபேன்டசி வழியாகச் சொன்ன படம். ஆனால் `இரண்டாம் உலகம்' படமோ வெறுமனே காதலைப் பற்றி மட்டுமே பேச முயன்ற, வலுவான அடித்தளமற்ற பலவீனமான படம். `மயக்கம் என்ன' படத்தில் சில காட்சிகள் செல்வராகவனுக்கே உரிய தனித்துவங்களைக்கொண்டிருந்தாலும் `புதுப்பேட்டை'யிலும் `காதல்கொண்டேனி'லும் உள்ள கலை நேர்த்தி `மயக்கம் என்ன' படத்தில் இல்லை.

செல்வராகவன் படங்களை வெறுமனே கேளிக்கைக்குரிய படங்களாகச் சுருக்கிவிட முடியாது. அவர் படங்களில் முக்கியமான சில அம்சங்களைத் தொகுத்துக்கொள்ளலாம்.

செல்வராகவன் படங்களின் நாயகர்கள், பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். `துள்ளுவதோ இளமை' நாயகன் மீன் வியாபாரியின் மகன், `காதல் கொண்டேன்' நாயகன் ஆதரவற்றச் சிறுவன், குழந்தைத் தொழிலாளி, `ரெயின்போ காலனி' நாயகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் (இது நேரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்காது. ஆனால்,  மார்வாடிக் குடும்பமான சோனியா அகர்வால் அப்பார்ட்மென்டில் குடியேறிய முதல் நாள் கதை நாயகனின் தாய், ``புதுசா குடி வந்திருக்கிறதால எதுவும் தயார்செய்திருக்க மாட்டாங்க'' என்று கூஜா நிறைய காபி கொடுப்பார். அப்போது சிவன் படத்தின் முன்பு பூஜை செய்துகொண்டிருக்கும் சோனியாவின் தந்தை, ரவிகிருஷ்ணாவின் தாய் போனவுடன் தன் மனைவியிடம் சொல்வார், “அதைக் கீழே கொட்டிட்டு கூஜாவைக் கழுவிக் கொடுத்திடு” என்று.) அதேபோல் சோனியாவை யார் காதலிப்பது என்று மார்வாடி இளைஞனுக்கும் ரவிகிருஷ்ணாவுக்கும் பிரச்னை வரும்போது, அந்த இளைஞன் சகநண்பர்களிடம் சொல்வான், “எங்கேயோ சேரியில் இருக்கிறவனையெல்லாம் சேர்க்க வேணாம்னு சொன்னேன், கேட்டீங்களா?” என்று. `புதுப்பேட்டை' நாயகன் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன், `ஆயிரத்தில் ஒருவன்' நாயகன் சென்னை உதிரிப்பாட்டாளி.

தமிழ்க் கலாசாரம் என்ற பெயரில் கட்டமைக்கப்பட்டப் போலித்தனங்களை அசால்ட்டாக மீறுபவை செல்வராகவனின் படங்கள். `திருமணத்துக்கு முன்பான பாலுறவு' குறித்து குஷ்பு பேசியது குற்றமென தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்துக்குப் பிறகு வந்த `ரெயின்போ காலனி'யில் அதை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் செல்வராகவன். 

அதேபோல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று செல்வராகன் படங்களின் நாயகிகள். பொதுவாக, தமிழ் சினிமாவில் அடிமை பொம்மைகள் என்பதைத் தாண்டி நாயகிகளுக்கு எந்தத் தனித்துவமும் இருந்ததில்லை. ஆனால், செல்வராகவன் படங்களின் நாயகிகளோ துணிச்சலும் மனதிடமும் உடையவர்கள். தமிழ் சினிமாவிலும் சில துணிச்சலான நாயகிகள் குறித்த சித்திரிப்புகள் உண்டு. `பட்டிக்காடா பட்டணமா' ஜெயலலிதா தொடங்கி `தம்பிக்கு எந்த ஊரு' மாதவி வரை துணிச்சலான நாயகிகள் என்றால் அவர்கள் திமிரானவர்கள் என்றும் அவர்களை அடக்கும் வீரமகன்கள்தான் நாயகர்கள் என்றும் சித்திரித்தவை தமிழ் சினிமாக்கள்.

ஆனால் செல்வராகவனின் நாயகிகளோ, வழக்கமாக தமிழ்ப் பெண்களுக்கு எனக் கட்டமைக்கப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற அடிமைத்தனங்களை அறுத்தெறிந்தவர்கள். நாயகர்களின் பாலியல் விழைவுகளையும் முயற்சிகளையும் அநாயசமாகக் கடந்துபோவார்கள் அல்லது சுயவிருப்பத்துடன் ஏற்பார்கள். `காதல் கொண்டேன்', `ரெயின்போ காலனி', `மயக்கம் என்ன' போன்ற படங்களில் நாயகர்களை `மனிதர்களாக' மாற்றுவதே நாயகிகள்தான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பாத்திரம் `புதுப்பேட்டை'யில் வரும் `செல்வி' கதாபாத்திரம் (சோனியா அகர்வால்). சந்தர்ப்பவசத்தால் வலுக்கட்டாயமாக ஒரு ரெளடிக்கு மனைவியாக்கப்பட்டவள் செல்வி. ரெளடிக்கு மனைவியானால் அவனுக்கு அடிமையாக இருந்து அவனைத் திருத்துவதே நாயகிகளின் `கடமை'யாக இருக்க, செல்வியோ கொக்கி குமாரைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்வாள்.

இப்படி அரசியல்ரீதியாகவும் கலைரீதியாகவும் செல்வராகவனின் படங்களில் பேசப்படவேண்டிய விஷயங்கள் ஏராளம். மீறல், கொண்டாட்டம், சிக்கலான மன உணர்வுகளைப் பதிவுசெய்வது, விளிம்புநிலை நாயகர்கள், சுயேட்சையான பெண் மனத்தைப் பிரதிபலிக்கும் நாயகிகள் ஆகியவை செல்வராகவன் படத்தின் கவனிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய அம்சங்கள். இடையில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தாண்டி இன்னும் பல நல்ல சினிமாக்களை செல்வா தருவார் எனக் காத்திருப்போம்.