Published:Updated:

``என் மகன் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேங்கிறான்'' - கலங்கும் தம்பி ராமையா

நா.சிபிச்சக்கரவர்த்தி
``என் மகன் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேங்கிறான்'' - கலங்கும் தம்பி ராமையா
``என் மகன் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேங்கிறான்'' - கலங்கும் தம்பி ராமையா

ந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது ஜி.எஸ்.டி வரி. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு `உள்ளாட்சி வரி'யைத் தமிழக அரசு திடீரென விதித்துள்ளது. ஆகமொத்தம்  ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதமும், உள்ளாட்சி வரி 30 சதவிகிதமும் சேர்த்து மொத்தம் 58 சதவிகிதம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும்விதமாக, சென்னை மாவட்டத் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ‘தமிழக அரசு விதித்த இந்த உள்ளாட்சி வரியை ரத்துசெய்யக் கோரியும், டிக்கெட் விலையை அதிகரிக்கக் கோரியும், நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும்’ என்று அறிவித்தார். 

கடந்த வாரம் ரிலீஸ் ஆன `இவன் தந்திரன்', தம்பி ராமையா மகன் உமாபதி நடித்த `அதாகப்பட்டது மகாஜனங்களே' போன்ற படங்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய நிலையில், திரையரங்குகள் கடந்த திங்கள் முதல் மூடப்பட்டன. இதற்கு மாற்றுக்கருத்தாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஒரு கருத்தை முன்வைத்தார். 

``ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள்  ஆன படங்களுக்கு மட்டும் ஸ்டிரைக்கிலிருந்து திரையரங்கு உரிமையாளர்களிடம்  விலக்கு அளிக்கச் சொல்லி அபிராமி ராமநாதனிடம் கேட்டால் என்ன?'' என்று தன் கருத்தைப் பதித்தார். இதுகுறித்து விரிவாகப் பேச அவரைத் தொடர்புகொண்டோம். 

`` `ஜூலை 3-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும்'  என ஒரு வாரத்துக்கு முன்பே அறிவித்திருந்தால்  ரிலீஸ் ஆகப்போகும் படங்களை நிறுத்தியிருக்கலாம். ஆனால், திடீரென இப்படி அறிவிப்பது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலைமை வரலாம். அதனால்தான் `ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள்  ஆன படங்களுக்கு மட்டும் ஸ்டிரைக்கிலிருந்து திரையரங்கு உரிமையாளர்களிடம்  விலக்கு அளிக்கச் சொல்ல வேண்டும்' எனக் கோரிக்கைவிடுத்தோம். இந்தக் கோரிக்கையை, தமிழகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் பரிசீலிக்க வேண்டும். தம்பி ராமையா மகன் நடித்த படம் ரிலீஸ் ஆகி மூன்றே நாள்களில் ஓடுவதை நிறுத்திவிட்டார்கள். அந்தப் படம் பிக்அப் ஆகியிருக்கும். இப்போது அந்தப் பையனுக்கு யார் ஆறுதல் சொல்வார்? அதே மாதிரிதான் `இவன் தந்திரன்' டைரக்டர். அவர் நஷ்டத்துக்கு யார் இழப்பீடு தருவார்? இந்தப் படங்களை ஓடவிடுங்கள். கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்றால், இந்த படங்கள் இப்போதைக்குக் கட்டட்டும். ஒருவேளை எதிர்காலத்தில் தள்ளுபடி கிடைத்தால், இந்தப் படத்துக்கும் கிடைக்கட்டும். இந்த வரி பிரச்னை, தமிழகத்தில் புதிதாக ஏற்படுவது கிடையாது. ஏற்கெனவே சில முறை நடந்திருக்கின்றன. அதனால், இந்தப் படங்களை வஞ்சிக்காமல் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

ஜனநாதன் சொன்னதுபோல், தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்த `அதாகப்பட்டது மகாஜனங்களே' படமும் இந்தச் பிரச்னை காரணமாக திரையரங்கிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தப் படத்துக்காக கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடும் உழைப்பைக் கொட்டி காத்துக்கொண்டிருந்தார் உமாபதி. 

இது தொடர்பாகப் பேச, தம்பி ராமையாவை அழைத்தோம். மிகுந்த மனவருத்தத்துடன் பேசினார், ``என் பையனுக்காக நான் எங்கேயுமே சிபாரிசு பண்ணலைங்க. அவன் முயற்சியால்தான் பல இடங்கள்ல நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டு அவனாகவே முட்டிமோதிதான் இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சான். எங்க குடும்பதினரிடமும் `எனக்கு  மூணு வருஷம் டைம் கொடுங்க. அதுக்குள்ள நல்ல நிலைமைக்கு வந்துடுவேன்'னு சொன்னான். அதுக்கான முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்தான்.  நாங்களும் அதை முழுமையா நம்பினோம். இந்த `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின்  ட்ரெய்லர் வெளியானபோதே `நல்லா டான்ஸ் ஆடுறான். உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கான்'னு நிறைய பாராட்டு கிடைச்சது. ஒரு கலைஞனுக்கு இந்தப் பாராட்டைவிட வேற என்ன வேணும்? இந்தப் பாராட்டுக்காக மட்டும்தான் மூணு வருஷங்கள் காத்திட்டிருந்தான். அதுக்கு நடுவுல படம் ரிலீஸ் ஆவதில் கொஞ்சம் தாமதம் ஆச்சு. திரும்பவும் ஏழு மாசக் காத்திருப்புக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமைதான் படம் 108 தியேட்டர்ல  ரிலீஸ் ஆச்சு. படம் காமெடியா இருக்குனு தியேட்டர் எண்ணிக்கையை அதிகரிச்சாங்க. போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஃபேமிலி ஆடியன்ஸும் வரத் தொடங்கினாங்க. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.

உமாபதி, அவனுக்காக மட்டும் வருத்தப்படலை. `புது இயக்குநர், புது தயாரிப்பாளருக்கு இப்படி நடந்துடுச்சே'னுதான் அதிகமா வருத்தப்படுறான். வீட்டைவிட்டு வெளியே போக மாட்டேங்கிறான். நான் அவன் பக்கத்துலேயே இருந்து அவனுக்கு ஆறுதல் சொல்லிட்டு வர்றேன். `என்னை நம்பிதானே இயக்குநரும் தயாரிப்பாளரும் இறங்கினாங்க. இப்படி நடந்ததால் நான் கடன்காரன் மாதிரி உணர்றேன்பா'னு ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கான். என் பையனுக்கு நான் ஆறுதல் சொல்லி அதிலிருந்து அவனை மீட்டுடுவேன். என் பையனைவிட படத்தின் இயக்குநரை நினைச்சாத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. இயக்குநர் இன்பசேகரின் அம்மா ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இறந்துபோனாங்க. அந்தத் துக்கத்திலிருந்தே இன்னமும் அவர் மீளலை. அதுக்குள்ள இப்படி ஒரு நிலைன்னா, என்ன சொல்லி அவரை ஆறுதல் படுத்துறது? இந்தத் தயாரிப்பாளரின் நஷ்டத்துக்கு யார் பதில் சொல்றது?

இப்படிப் பேசுறதால `என்னடா, தம்பி ராமையா இப்படிப் பேசுறான்?'னு நினைச்சுக்க வேணாம். இப்படி ஒரு சூழல் ஏற்படுத்தியவங்க கொஞ்சமாவது நினைச்சுப்பார்க்கணும். அவர்கள்  ஒரு புது ஹீரோவாகவோ, புது இயக்குநராகவோ, புது தயாரிப்பாளராகவோ இருந்தால் இந்தக் கஷ்டம் புரியும் தம்பி. `ஸ்டிரைக் அறிவிக்கப்போறோம்'னு முன்னாடியே சொல்லியிருந்தால், படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தியிருக்கலாம். இப்ப ஸ்டிரைக் முடிஞ்சாலும் ரிலீஸுக்காகக்  காத்திருக்கும் படங்கள்தான் ரிலீஸ் ஆகும். இந்தப் படங்கள் திரும்பவும் ரிலீஸ் செஞ்சு பிக்கப் ஆகுறது ரொம்ப கஷ்டம். இந்தக் காயத்துக்கு யார் மருந்து போடுவாங்கனு தெரியலை. இப்ப வரைக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற செய்திக்குத்தான் காத்திருக்கோம். இந்தச் செய்தி வந்துவிடாதானு ஏங்கிட்டிருக்கோம்'' என விரக்தியான குரலில் பேசினார் தம்பி ராமையா.