"உங்கள் குரலைப் பதிவு செய்ததற்கு நன்றி ரஜினி. முதலில் ஒரு ஜென்டில்மேனாக, வேண்டுகோள் விடுப்போம். பிறகு தமிழக அரசைப் பார்த்துக் கொள்வோம்" என ட்விட்டரில் ரஜினிக்கு நன்றி தெரிவித்தும்; அரசுக்கு எதிராகவும் தன் குரலை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் கமல்.
அமெரிக்காவில் இருக்கும் ரஜினி இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். ''தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் நலனைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்'' எனத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையொட்டி, ரஜினிக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்திருக்கிறார் கமல்.
திரைப்பட துறைக்கு ஜிஎஸ்டி வரியாக மத்திய அரசு 28% வழங்க இருப்பதாக கடந்த மாதமே செய்திகள் வெளியானது. அப்போதே, கமல் அதைக் கடுமையாக எதிர்த்தார். பிராந்திய மொழி படங்களுக்கு 28% என்பது மிகவும் அதிகம் என்பதை குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று தமிழக அரசின் 30% வரிக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதில், "அண்டை மாநிலமான கேரளாவில் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் எந்த ஒரு மாநில வரியையும் கேரளா அரசு விதிக்கவில்லை. கேரளா திரைத்துறையினர், பினராயி விஜயனிடம் வரிவிதிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்த போது அவர் உடனே அதை ஏற்றுக்கொண்டார். கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசும் திரைப்படத் துறைக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு மாநில அரசின் கேளிக்கை வரியை தளர்த்துகொள்ள மறுக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது திட்டமிடப்பட்டு மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும் ஊழல்களையும் சகித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
இந்தப் பிரச்னையை பொறுத்தவரை, பக்குவம் அடைந்த ஒருவனாக திரைத்துறையுடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஆனால், சுயநலமுள்ள அரசியல்வாதிகளில் கைகளில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. பீகாரின் ஊழலையே தமிழக ஊழல் விஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத்துறை சிக்கித் தவிக்கிறது. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான எதிர்ப்பை எதிர்பார்க்கிறேன்'' என்று கூறியிருந்தார்.