Published:Updated:

குட்டி உருவங்களின் சாகசப் பயணம்! #SmurfsTheLostVillage

சுரேஷ் கண்ணன்
குட்டி உருவங்களின் சாகசப் பயணம்! #SmurfsTheLostVillage
குட்டி உருவங்களின் சாகசப் பயணம்! #SmurfsTheLostVillage

ஸ்மர்ஃப் (Smurf) என்பது பெல்ஜியத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் Pierre Culliford உருவாக்கிய வேடிக்கை உருவம். இதை மையப்படுத்தி இதுவரை முப்பதுக்கும் அதிகமான புத்தகத் தொகுதிகள் வந்துள்ளன. அந்தத் தொகுதிகளில் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, Smurfs The Lost Village அனிமேஷன் திரைப்படம்.

அது ஒரு ரகசிய வெளி. ஸ்மர்ஃப் எல்லாம் மறைந்திருந்து வாழ்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குணாதிசயம்கொண்டவை. அதிபுத்திசாலியான, துறுதுறுப்பான, முந்திரிக்கொட்டைத்தனமான என்று ஒவ்வொரு வகை. இவர்களுக்கு ஒரு தலைவரும் உண்டு. பாதுகாப்பு உணர்வு அதிகமுள்ளவர். அங்கிருப்பவை எல்லாமே ஆண்கள். விதிவிலக்காக ஒரேயொரு பெண் உண்டு. அது ஸ்மர்ஃப்ட்டே (Smurfette). அதற்கு ஒரு ரகசியக் காரணம் உண்டு.

கர்காமெல் என்கிற மந்திரவாதி, ஒளிந்திருக்கும் ஸ்மர்ஃப்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு தந்திரம் செய்கிறான். களிமண்ணால் ஒரு பெண் ஸ்மர்ஃப்பை உருவாக்கி ஏவிவிடுகிறான். அதன்மூலம் ஸ்மர்ஃப்களின் ரகசிய இடத்தை அறிந்து, அனைத்தையும் பிடித்து கொன்று, அதன்மூலம் தன் மந்திரச்சக்தியின் வலிமையைப் பெருக்கிக்கொள்வது அவன் நோக்கம். வயதான கழுகு மற்றும் துறுதுறுப்பான பூனை அவனுடைய உதவியாளர்கள்.

பெண் ஸ்மர்ஃப் ஒன்று ஸ்மர்ஃப்களின் கூட்டந்துக்கு வந்ததும் அதன் தலைவருக்கு விஷயம் புரிந்துவிடுகிறது. தன்னிடமிருக்கும் சக்தியால் அவளுடைய தீயகுணங்களை ஒடுக்கிவிடுகிறார். எனவே, பெண் ஸ்மர்ஃப் அங்கிருப்பவர்களிடம் நட்பாகப் பழக ஆரம்பித்துவிடுகிறாள். ஒருநாள் தலைவரின் எச்சரிக்கையை மீறி பெண் ஸ்மர்ஃப்பும் அவளுடைய தோழர்களும் எல்லைக்கோட்டைத் தாண்டி விளையாடச் செல்கிறார்கள். அப்போதும், வேறு கூட்டத்தைச் சார்ந்த ஸ்மர்ப் ஒன்று, தன்னை ஒளிந்திருந்து கவனிப்பதை பெண் ஸ்மர்ஃப் பார்க்கிறாள். அதை பின்தொடர்ந்து செல்ல, மந்திரவாதியின் கழுகு அவளைத் தூக்கிச் சென்றுவிடுகிறது.

ஸ்மர்ஃப்களின் கிராமம் எங்கே இருக்கிறது என்கிற ரகசியத்தைக் கேட்கிறான் மந்திரவாதி. பெண் ஸ்மர்ஃப் சொல்ல மறுக்கிறாள். பின்தொடர்ந்துவரும் அவளுடைய தோழர்கள், அவளை மீட்கிறார்கள். தலைவர் அவர்களைக் கடிந்துகொள்கிறார். Smurfette நிதானமாக யோசிக்கிறாள். அவர்களுடைய கூட்டத்தை தவிர, வேறொரு கூட்டமும் எங்கோ ஒளிந்திருக்கிறது. மந்திரவாதியால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அவர்களை எச்சரித்தாக வேண்டும். எனவே, தலைவருக்குத் தெரியாமல் தன் தோழர்களுடன் இணைந்து, அந்த சாகசப் பயணத்துக்குத் தயாராகிறாள். இதை அறிந்துகொள்ளும் மந்திரவாதியும் பின்தொடர்ந்து வருகிறான். இவர்களின் பயணம் என்ன ஆனது? ஒளிந்திருக்கும் இன்னொரு ஸ்மர்ஃப்க கூட்டம் எப்படிப்பட்டது? மந்திரவாதி வீழ்ந்தானா, ஜெயித்தானா போன்ற கேள்விகளுக்கு மிக ஜாலியாக பதில் சொல்கிறது திரைக்கதை.

ஸ்மர்ஃப்களின் கூட்டத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதியசத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதும், திரைப்படத்தின் தொடக்கத்தில் அவை அறிமுகப்படுத்தப்படும் காட்சிகளும் ஆர்வத்தைக் கிளப்பிவிடுகிறது. மந்திரவாதியின் உதவியாளர்களான கழுகு மற்றும் பூனையின் பாத்திரங்களும் அட்டகாசம். மந்திரவாதியிடம் காண்பிக்கும் விசுவாசம்மூலம் தங்களை நிரூபித்துக்கொள்ள முயலும் அலப்பறைகள் சிரிக்கவைக்கின்றன.

Smurfette மற்றும் அவளுடைய தோழர்கள், இந்தச் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் கற்பனை வளத்தின் உச்சம். இந்தப் பயணத்தில் போட்டியாக வரும் மந்திரவாதி குழு தரும் இடைஞ்சல்களையும் துரோகங்களையும் இவர்கள் சமாளிப்பது வெகு அழகு. இந்தப் பயணத்தின் விடையாக, பெண்கள் மட்டுமே இருக்கும் ஸ்மர்ஃப் கூட்டத்தைக் கண்டுபிடிப்பது சுவையான திருப்பம். அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வியக்கவைக்கின்றன. பெண் பாத்திரங்களை தன்னம்பிக்கையாளர்களாகவும் வீரர்களாகவும் வடிவமைத்திருப்பது நல்ல விஷயம். களிமண்ணாகிவிடும் Smurfett-ஐ சுற்றி அனைவரும் கண்கலங்கி நிற்பதும், அவர்களுடைய பிரார்த்தனையின் பலனாக அவள் உயிர் மீண்டு வருவதும் நெகிழ்வான காட்சிகள்.

இது, ஒரு வகையில் ஸ்மர்ஃப் கார்ட்டூன் தொடரின் புத்துணர்ச்சியான தொடர்ச்சி. ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வந்துள்ளன. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பாத்திரங்களுக்காக குரல் தந்திருக்கின்றனர். Kelly Asbury அற்புதமாக இயக்கியுள்ளார்.

சின்னஞ்சிறு அழகிய உருவங்களான ஸ்மர்ஃப்களின் வேடிக்கை, விளையாட்டு மற்றும் சாகசங்களுக்காகவே படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். அவர்கள் மகிழ்வதற்கான விஷயங்கள் திரைப்படத்தில் கொட்டிக்கிடக்கிறது.