Published:Updated:

''வாய்ப்பு குறைஞ்சுட்டே இருக்குது!'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

''வாய்ப்பு குறைஞ்சுட்டே இருக்குது!'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு
''வாய்ப்பு குறைஞ்சுட்டே இருக்குது!'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

மீபத்தில், ''நாட்டுப்புற கலைஞர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. கிராமியக் கலைகள் அழிந்துவருகின்றன'' என வேதனையுடன் தெரிவித்திருந்தார் நாட்டுப்புறப் பாடகி, தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் சின்னப்பொண்ணு. அந்தக் கலைஞர்களுக்காக கலைமாமணி விருது, நலத்திட்ட உதவிகள், வயதான கலைஞர்களுக்கு அடிப்படை உதவிகள், நலிந்த கலைஞர்களுக்கு வீட்டு வசதி எனப் பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம். 

''எனக்கு உயிர்மூச்சு பாட்டுத்தான். பதினேழு வருஷமா பாடல்தான் எனக்கு எல்லாமே. என் மூச்சும், குரலும் என் மகள் மோகனாவுக்கும் வந்திருக்கு. அவங்களும் மேடைகளில் பாட ஆரம்பிச்சுட்டாங்க. சீக்கிரமே நாட்டுப்புறக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்வார். 2007-ம் ஆண்டு அனைத்துக் கிராமியக் கலைஞர்களும் இணைந்து ஆரம்பித்த நாட்டுபுற இசைக் கலைஞர்கள் மன்றத்தின் வாயிலாக, பலருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார் சின்னப்பொண்ணு. 

சமீப காலமாக சின்னத்திரையிலிருந்து அழைப்புகள் வருவதாகச் சொல்பவர், ''சன் டி.வி, விஜய் டி.வி போன்றவற்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறாங்க. சின்னப்பொண்ணு என்பவரை வெளியே ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்போது, இப்படி அரை மணி நேரம், ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில் தலையைக் காட்டுறதில் எனக்கு விருப்பமில்லை. சில மாதங்களுக்கு முன்னாடி இயக்குநர் பாலா ஆபீஸிலிருந்து போன் வந்துச்சு. வாய்ஸ் டெஸ்டும் பாடலை ரெக்கார்டும் செய்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எந்த அழைப்பும் இல்லை. பார்ப்போம், என்னை மாதிரியான கலைஞர்களுக்கு இது சோதனைக் காலம்னு நினைக்கிறேன். நாங்க புதுசா வரும்போது வாய்ப்புகள் எப்படி இருந்ததோ, அதே நிலைமைதான் இப்பவும். பல கலைஞர்களின் வாழ்க்கை இங்கே பரிதாபகரமா இருக்கு. 'எனக்கு இந்தக் கலைதான் தெரியும், இதைத் தவிர வேறு தொழில் தெரியாது' எனச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவங்க அதிகம். நாட்டுப்புறக் கலை வழியே வாழ்வியலைச் சொன்ன சமூகம் நாம். ஆனா, இப்போ இந்த இசையைக் கேட்க யாரும் தயாராக இல்லாதது வேதனையான விஷயம். 

அப்போதெல்லாம் நிறைய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் நடக்கும். இப்போ ஆர்கெஸ்ட்ராவா மாறிடுச்சு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில கலைகள் அழியும்தான். ஆனால், நம்ம பாரம்பரியத்தை அழிய விடமாட்டோம். என் பொண்ணு, பையன் இரண்டு பேருக்குமே கிராமியப் பாடல்களைக் கத்துக்கொடுக்கிறேன். நம்ம சந்ததிகளுக்கு நம்ம கலாசாரத்தைப் பரப்புவது நம்ம கடமை. 'பதினேழு வருஷமா இந்தக் கலையைத் தாங்கிப் பிடிச்சு பீல்டுல நின்னுட்டீங்க'னு பலரும் பாராட்டியிருக்காங்க. ஆனால், நான் கடந்து வந்த பாதை பூக்களால் ஆனதல்ல. பல தடைகள், பல தோல்விகளைச் சந்திச்சுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நான் மட்டுமில்லை, ஒவ்வொரு கலைஞனுமே வலிகளால் வளர்த்தெடுக்கப்பட்டவன்தான். அந்த வலிகளே எங்களை வலிமைப்படும்'’ என்கிற சின்னப்பொண்ணு குரலில் வைராக்கியம் தெரிகிறது. 

இன்று வைரலாக இருக்கும் 'பிக் பாஸ்' பற்றி பேச ஆரம்பித்தவர், ''கமல்ஹாசன் சார்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உலகநாயகன் நடத்தும் நிகழ்ச்சி எனச் சில நாள்கள் பார்த்தேன். இடையில் பார்க்க ஆரம்பிச்சதால் எனக்குப் புரியலை. என் பொண்ணுக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ தொடர்ந்து பார்த்துட்டிருக்கேன். நானும் விஜய் டி.வி சமையல் புரோகிராம்ல கலந்திருக்கேன். அங்கேயும் சில வாக்குவாதங்கள், பிரச்னைகள் இருக்கும். இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பிரச்னைகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனா, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறவங்க ரொம்பவே தைரியசாலிங்கதான். எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கலையோனு தோணுச்சு. இந்த நூறு நாள்கள் முடிஞ்சு வெளியில வரும்போது அவங்களுக்கு எப்பவும் போல வாய்ப்புகள் கிடைக்குமா? எல்லோரும் அவங்களை எப்படி எடுத்துப்பாங்க என்கிற பயமும் இருக்கு. ஆனாலும், சில நேரங்களில் பிரச்னை வரும்போது உடைந்து அழுவது சகஜம்தான். பார்ப்பவர்கள் எப்படி எடுத்துப்பாங்கனுதான் தெரியலை. நான் எப்பவும் ஆன்லைன்ல இருக்கும் ஆளில்லை. அதனால், அதை கவனிக்க முடியறதில்லை'' என்கிறார் சின்னப்பொண்ணு.