Published:Updated:

”பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்....?!" - நெகிழும் இளையராஜா

”பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்....?!" - நெகிழும் இளையராஜா
”பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்....?!" - நெகிழும் இளையராஜா

கம்பீரக் குரலும், பல தலைமுறைகளின் கற்பனைத்திறனைத் தூண்டிவிடும் இசைத்திறனும்கொண்ட மூத்த இசை அறிஞர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. `திருவிளையாடல்'  படத்தில் `ஒரு நாள் போதுமா...', `கவிக்குயில்' படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்...', `நூல்வெளி' படத்தில் `மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...' இப்படி இன்னும் ஆயிரமாயிரம் பாடல்களின் மூலம் சென்ற ஆண்டு வரை இசையில் நம்மைத் திளைக்கச்செய்தவர். பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது 2005-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. உலகம் முழுவதும் 25 ஆயிரம் இசைக் கச்சேரிகளை அரங்கேற்றி, தன் குரலாலும், இசை ஞானத்தாலும், இசை சார்ந்த கண்டுபிடிப்புகளாலும் பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீதக் கலாநிதி, சங்கீதக் கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி போன்ற பல விருதுகளைப் பெற்றார். மேலும், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஆகியவை இவருக்கு இரண்டு முறை கிடைத்துள்ளன. இசை குறித்த இவரது ஆய்வுகள்தான் இவரின் வாழ்நாள் சாதனைகள். தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரும் புலமை உடையவர். இசையைத் தவிர்த்து `பக்தப்பிரகலாதன்' படத்தில் `நாரதர்' கதாபாத்திரமாக மாறி நடிப்பிலும் தன் ஆர்வத்தை வெளிக்காட்டியவர். 

400-க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை 72 மேளகர்த்தாக்களைக்கொண்டு அரங்கேற்றியது, பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது, சந்த ஒலிகளைக் கோவையாக்கித் தாள சங்கிலியில் ஸ்ருதி பேதத்தைக் கொண்டுவந்தது, தில்லானாக்களில் சங்கதிகளைப்  புதுப்பித்தது மற்றும் புதிய தாள முறைகளை உருவாக்கியது போன்ற இவரின் இசைப் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். முதன்முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புதுக் கீர்த்தனைகளைப் பாடி, இசைக் கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசை மேதையாகி, இசை உலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா

 இவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்கிற இடத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்தொண்டு புரிந்த மகாகலைஞரின் தாய் சூர்ய காந்தம்மாள், வீணை வாசிப்பதில் வல்லுநர். தந்தை பட்டாபி ராமய்யா, சிறந்த இசைக் கலைஞர். பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி நிகழ்த்தும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன. இசை ஆர்வம் காரணமாக, பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் நிலைமை இவருக்கு. இப்படிப்பட்ட இசை மேதையின் 87-வது பிறந்த நாள் இன்று. 

இதை முன்னிட்டு நேற்று, ஜூலை 5-ம் தேதி, `பாலமுரளி நாதா மஹோத்சவ் - 2017', சென்னை நாரதகான சபாவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இளையராஜா, பத்மா சுப்பிரமணியம், பி.உன்னிகிருஷ்ணன், க்லெவ்லேன்ட் சுந்தரம், சுதா ரகுநாதன், நல்லி குப்புசாமி மற்றும் கார்த்தி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். `பாலமுரளி கிருஷ்ணா மெமோரியல் டிரஸ்டை இளையராஜா தொடங்கிவைத்து, `பாலமுரளி தேசிய விருது' - 2017-ஐ `முரளி நாதா லகரி' என்ற பட்டத்துடன் டி.வி கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும், 24 பாடகர்கள் மற்றும் அவரது சீடர்களால்  முதன்முறையாக `பாலமுரளி பஞ்சரத்தினம்’  இசைக்கப்பட்டது. 

 இந்த ட்ரஸ்ட் சார்பில்  இசை பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் 'பாலமுரளி தேசிய விருது'  வருடா வருடம் வழங்கப்படும் எனவும் இசைக்கவி ரமணனால் அறிவிக்கப்பட்டது. டாக்டர். கே.கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் பாடிய 'பாலமுரளி பஞ்சரத்தினம்' பாடல் சிடியை டாக்டர். பத்மா சுப்ரமணியம், சுதா ரகுநாதன் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர். 

சுதா ரகுநாதன் பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றிக் கூறுகையில், 'நான் அவரைப் பார்க்கச் செல்லும் ஒவ்வொருமுறையும் அவர் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்,  ‘வா...சுதா’ என்று புன்னகைத்தபடி  கூப்பிடுவார். ஒருமுறை ரெக்கார்டிங்கிற்காக அவரது ஸ்டுடியோவுக்குச் சென்றபோது பாடல் வரிகளைக் கொடுத்து என்னைப் பாடச் சொன்னார். எனக்கு என்ன முயன்றும் அவர் முன் சரிவர பாட வரவில்லை.  ‘பாடு சுதா...உனக்கா பாட்டு பாட சொல்லிக்கொடுக்கணும்? நான் வேணும்னா ஒரு முறை பாடிக் காட்டட்டுமா?’ என்றபடி ஸ்ருதியையும், தாளத்தையும் சொல்லிக்கொடுத்தார். கூடவே பாடியும் காட்டினார். அப்போதும் எனக்கு ஒன்றுமே வரவில்லை. கேசட்டில் அவரின் குரலைப் பதிவு செய்து வீட்டுக்கு சென்றேன்.  திரும்பத் திரும்ப அவர் பாடியதைக் கேட்டுத்தான், அந்தப் பாடலைப் பாடக் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார். 

பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றி நெகிழ்ந்து பேசினார் இளையராஜா. ‘பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்  இந்த உலகத்தில் பிறக்க முடியாது’ என்று புகழ்ந்த அவர்  ‘பால முரளி லகரி’ பட்டத்தை வென்ற டி.விஜியைப் பற்றிக்கூறுகையில், "டி.விஜிக்கு உலகம் முழுவதும் சீடர்கள் இருப்பார்கள். ஆனால் என்னைப்போல் ஒரு சீடனை என்றைக்காவது நீங்கள் பார்த்திருப்பீர்களா? காலையில் 4 மணிக்கும், இரவு 12 மணிக்கும் எப்போது நீங்க வீட்டில் இருப்பீர்கள் என்று உங்களைத் தேடி வந்து பாட்டு கற்றுக்கொண்டேன். டி.வி.ஜியும் எனக்காக காலையில் குளித்த ஈரத் தலையோடு காத்துக்கொண்டிருப்பார். அப்படித்தான் வளர்ந்தது எங்களின் இசை உறவு."என்று கூறினார்.  

அடுத்த கட்டுரைக்கு