Published:Updated:

“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive

“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive
“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருப்பவர்  ராகுல் தாத்தா. பூஜை போடும்போதே இவரின் கால்ஷீட் வாங்கும் அளவுக்கு தாத்தாவுக்கு செம டிமாண்ட். `நானும் ரெளடிதான்' ஃபேமஸ் ராகுல் தாத்தாவுக்கு, 70 ப்ளஸில் தொடங்கியிருக்கிறது செகண்ட் இன்னிங்ஸ். சிம்புவுடன் `அன்பானவன்... அசராதவன்... அடங்காதவன்', உதயநிதியுடன் `இப்படை வெல்லும்', ஜீவாவுடன் `கீ' என தாத்தா நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 40-க்கும் மேல்!

சினிமா கனவுகளைச் சுமந்தபடி வாழும் நூற்றுக்கணக்கான மக்களின் ஏரியா, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள விஜயராகவாபுரம்தான். அந்த ஏரியாவின் குறுகலான தெருவில் உள்ள ஒடுங்கிய ஒற்றை பெட்ரூம் வீட்டுக்குள்ளிருந்து நம்மை வரவேற்கிறார் தாத்தா. இவரின் நிஜப் பெயர் உதயபானு. ஆனாலும் தெருக் குழந்தைகள் முதல் ட்ரூகாலர் வரை எல்லோருக்கும் அவர் ராகுல் தாத்தா!

“நாகப்பட்டினம் பக்கத்துல அந்தணப்பேட்டைதான் என் ஊர். அப்பா ரயில்வேயில் இருந்தவர். அவரோட ரெளடியிசம் பிடிக்காம வேளாங்கண்ணிக்குப் போய் ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். சின்ன வயசுலேயே பாடுறதும் ஆடுறதும் எனக்குப் பிடிக்கும். படங்கள் பார்க்கிறது, அதுலயும் ஹாலிவுட் படங்கள் பார்க்கிறதுதான் என் பொழுதுபோக்கே. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பார்த்த நாள்கள் இன்னும் ஞாபகத்துல இருக்கு. அந்த ஆர்வத்துல சென்னைக்கு வந்தேன். பாண்டிபஜார்ல ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். நல்லா சமைப்பேன். அது மூலமா சினிமா கம்பெனிகளுக்குச் சாப்பாடு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். அப்பதான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. `அடிமைப்பெண்' படத்துல நானும் ஓர் அடிமையா நடிச்சிருக்கேன். அப்படியே எம்.ஜி.ஆர்கூட `ரிக்‌ஷாக்காரன்', `இதயக்கனி', `உழைக்கும் கரங்கள்'னு பதினஞ்சுக்கும் மேலான படங்கள்ல நடிச்சிருக்கேன்'' எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் சிம்பு, விஜய் சேதுபதி வரை அத்தனை திரை நட்சத்திரங்களுடனும் சிரித்தபடி இருக்கும் பேப்பர் கட்டிங்குகளைக் காட்டியபடி தொடர்கிறார் தாத்தா.

``நடிக்க வாய்ப்பு கிடைக்கிறபோது நடிப்பேன். வாய்ப்பு இல்லாதப்போ புரொடக்‌ஷனுக்குக் கேட்டரிங் வேலைபார்ப்பேன். செல்வராகவனோட `ஆயிரத்தில் ஒருவன்', ஏ.ஆர்.முருகதாஸோட `கத்தி', எஸ்.பி.ஜனநாதனோட `புறம்போக்கு'னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். `மாரி' படத்துல புறா வளர்க்கிற கேரக்டருக்காகக் கூப்பிட்டாங்க.  தனுஷ் ஆபீஸ்லதான் போட்டோ ஷூட். `நானும் ரெளடிதான்' படமும் அவங்க கம்பெனிதானே... அப்போ அங்கே வந்திருந்த விக்னேஷ் சிவன் என் படங்களைப் பார்த்துட்டு அவரோட படத்துக்கு என்னைக் கேட்டிருக்கார். என்னை கட்டாயம் செலெக்ட் பண்ணச் சொல்லி ரஜினி சார், தனுஷ்னு பலபேர்கிட்டருந்தும் ஸ்ட்ராங் சப்போர்ட். என் படங்களைப் பார்த்துட்டு ரஜினி சார் தவறாமப் பாராட்டுவார். அவர் என்னைவிட 10 வயசு இளையவர். என்னை அண்ணேனுதான் கூப்பிடுவார். அவர் ராகவேந்திரர் பக்தர்ங்கிறதால நான் அவரை குருவேனு கூப்பிடுவேன்'' கெத்தாகச் சொல்லும் தாத்தாவுக்கு நடிகராவதற்கு முன்பிலிருந்தே நண்பராம் ரஜினி. அந்த நட்பு இன்று வரை தொடர்வதில் தாத்தாவிடம் துளியும் கர்வமில்லை.

`` `நானும் ரெளடிதான்' படம் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததுன்னா, அனிருத் டைரக்ட் பண்ணின `அவளுக்கென்ன' மியூசிக் ஆல்பம் என்னை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிடுச்சு. நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்கிறேன். விவசாயிகளோட பிரச்னையைப் பற்றி `என்னங்க சார் உங்க சட்டம்...' குறும்படம் சினிமா வட்டாரத்துல என்மேல தனி கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கு'' வயதானாலும் இளமைத் துள்ளலுடன் சிரிக்கும் தாத்தாவுக்கு, 76 வயதில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லாமே மெடிக்கல் மிராக்கிள்ஸ்.

`இப்படை வெல்லும்' படத்துல நானும் உதயநிதியும் சேர்ந்து மஞ்சிமாவை சைட் அடிப்போம். `கீ' படத்துல ஜீவாவும் நானும் சேர்ந்து நிக்கி கல்ராணியை சைட் அடிப்போம்.  `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'ல ஸ்ரேயாகூட எனக்கு சீன் இருக்கு. படத்துக்குப் படம் கலர் கலரா காஸ்ட்யூம்ஸ் கொடுக்கிறாங்க. ஹீரோவுக்குக்கூட அவ்வளவு காஸ்ட்யூம்ஸ் இல்லை. அந்த ஸ்டைலான லுக்கே இப்போ எனக்கு நிரந்தர அடையாளமாகிருச்சு'' கண்ணாடி பார்த்தபடியே கழுத்து ஸ்கார்ஃபை அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறார் தாத்தா.

``நம்பிக்கை உள்ளவங்களைக் கலைத்தாய் கைவிட மாட்டாங்கிறதுக்கு நான்தான் உதாரணம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர்னு எல்லா பெரிய நடிகர்கள்கூடவும் நடிச்சிருக்கேன். ஆனாலும் இடையில கொஞ்ச காலத்துக்குப் படங்கள் இல்லை. அதுக்காக நான் ஒருநாளும் தளர்ந்ததில்லை. எனக்குனு ஒருநாள் வரும்கிற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீண்போகலை. பொற்காலத்துலயும் வாழ்ந்தேன்... போர்க்காலத்துலயும் வாழ்றேன். இன்னிக்கு `ராகுல் தாத்தா வேணும்... ஒரு சீன்லயாவது அவரை நடிக்கவையுங்க'னு எல்லா பெரிய ஹீரோக்களும் கேட்கிறாங்க. இந்த வயசுல நான் பண்ற ஆக்‌ஷனையும் என் ஸ்பீடையும் பார்த்து மிரண்டுபோறாங்க.

எனக்குப் பெரிய ஆசைகளோ கனவுகளோ இல்லை. இத்தனை வயசுக்குப் பிறகு பேரும் புகழும் குவியுது. தெருவுல இறங்கி நடந்தா குழந்தைங்க ஓடிவந்து சூழ்ந்துக்கிறாங்க. ஆடியோ ரிலீஸ், சினிமா சம்பந்தப்பட்ட ஃபங்ஷனுக்குப் போனா பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் என்கூட செல்ஃபி எடுத்துக்கிறாங்க.  `தாத்தா... தாத்தா...'னு சினிமா உலகமே இப்போ என்னைக் கொண்டாடுது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.  `குப்பத்து ராஜா', `ஓடி ஓடி உழைக்கணும்', `பதுங்கிப் பாயணும் தல'னு செம மாஸ் காட்டியிருக்கிற படங்கள் வரிசையா ரிலீஸாகப்போகுது. நம்ம ரேஞ்சை வேற வெவலுக்குக் கொண்டுபோகப் போற படங்கள் அதெல்லாம்'' எனத் தெறிக்கவிடுகிறார் தாத்தா.