Published:Updated:

அங்கமாலி டைரீஸ் முதல் பாகுபலி -2 வரை... மிஸ் பண்ணக்கூடாத பிறமொழிப் படங்கள்

அங்கமாலி டைரீஸ் முதல் பாகுபலி -2 வரை... மிஸ் பண்ணக்கூடாத பிறமொழிப் படங்கள்
அங்கமாலி டைரீஸ் முதல் பாகுபலி -2 வரை... மிஸ் பண்ணக்கூடாத பிறமொழிப் படங்கள்

கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஹாலிவுட், பாலிவுட் படங்களில் தவறவிடக் கூடாத படங்களைப் பற்றிப் பார்த்தோம். அதேபோல, மிஸ் பண்ணக் கூடாத மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்கள் பற்றி பார்க்கலாம். ஆண்டின் பாதி முடிந்துவிட்டாலும் தென்னிந்திய சினிமாக்களில் மிகப் புதுமையான படம், வித்தியாசமான முன்னெடுப்புகள் எல்லாம் மிகக் குறைவே. அதிலிருந்து அதிகம் கவனம் பெற்ற படங்களின் பட்டியல் இதோ...

மலையாளம்

எபி:

எபிக்கு (வினீத் ஸ்ரீனிவாசன்) சிறுவயதிலிருந்தே பறத்தலில் ஆர்வம். பறவைகளும், விமானங்களும் கண்டு வளர்ந்த எபிக்கு எதிர்படுபவர்கள் கூட இறக்கைகளுடனே தெரிவார்கள். பலமுறை பறக்கும் முயற்சியில் உயரமான இடங்களிலிருந்து குதித்து கைகால்களை உடைத்துக் கொள்கிறான். அவனை முதலில் பைத்தியமாக பார்க்கும் ஊர்காரர்களும், குடும்பத்தினரும் பிறகு ஆதரிக்கிறார்கள். எபி சிறடித்தானா என்பதுதான் கதை. நல்ல கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீகாந்த் முரளி.

அங்கமாலி டைரீஸ்:

அங்கமாலியின் சில இளைஞர்கள், அவர்களின் தினசரி நடவடிக்கைகள்தான் படம். பார் ஒன்றில் மத நல்லிணக்கத்தோடு ஒரு சிகரெட்டை, கடவுளர் வேடமிட்ட பலர் புகைக்கிறார்கள், அப்போது ஒரு சண்டை. பாரில் நடக்கும் சண்டை ரோட்டுக்கு வருகிறது (சண்டைக்கு புகைப்பிடித்தது காரணம் இல்லை). அங்கிருந்து ஆரம்பிக்கிறது படம். அதில் ஜீசஸாக வேடமிட்டு இருக்கும் வின்சென்ட் பீப்பே (ஆண்டனி வர்கீஸ்)தான் ஹீரோ. அவன் சந்திக்கும் பெண்கள், அவன் பார்க்கும் தொழில், அது சார்ந்து நடக்கும் பிரச்னைகள், அவனைச் சுற்றிய நண்பர்கள், அங்கமாலியின் உணவு இவ்வளவு தான் கதை. ஆனால், ஒவ்வொரு காட்சியையும் அமர்க்களப்படுத்தி எழுதி இருப்பார் இயக்குநர். படத்தில் 86 புதுமுகங்கள் நடித்திருந்தது, இசை என முழுக்க ஃப்ரெஷ்ஷான ஃபீல் கொடுக்கும் படம். 

டேக் ஆஃப்:

அதிக சம்பளத்திற்காக ஈராக்கிற்கு செல்கிறது கேரளாவில் இருந்து ஒரு செவிலியர் குழு. வேலையா இல்லை குடும்பமா என கணவர் ஃபைசல் முரண்டு பிடிக்க, வீட்டுக் கடன் சூழ்நிலை காரணமாக, விவாகரத்து செய்துவிட்டு, ஈராக் செல்ல ஆயுத்தமாகிறாள் சமீரா (பார்வதி). தன்னுடன் பணியாற்றும் சாஹீதை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறாள். பணத்திற்காக சென்று இருந்தாலும், ஈராக்கின் நிஜ நிலை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தீவிரவாதம், ரெஸ்க்யூ ஆப்ரேஷன், காணாமல் போன கணவனைத் தேடுவது என சுவாரஸ்யமான கதையமைப்பு கொண்டது டேக் ஆஃப். 

ரக்‌ஷாதிகாரி பைஜு ஒப்பு:

எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு மைதானம் இருக்கும். அங்குதான் நம் பால்யம் முதல் பல காலம் கழிந்திருக்கும். அப்படி ஒரு மைதானம்தான் கும்பளம் டீமுடையது. அதன் கேப்டன் பைஜு (பிஜு மேனன்). அந்த மைதானத்தில் நடக்கும் விளையாட்டு, ஆண்டு விழா போட்டிகள், வெற்றி, தோல்வி, கொண்டாட்டம்தான் படத்தின் கதை. கடைசியில் அந்த மைதானத்துக்கு சொந்தமானவர் அதை விற்றுவிடுவார். இடத்தை வாங்கியவர்கள் அங்கு மருத்துவமனை கட்ட வருவார்கள். பைஜு மற்றும் கிராமத்தினரை அங்கிருந்து வெளியேறச் சொல்வார்கள். வெளியே வந்து மைக்கில் பைஜு எல்லோருக்கும் இப்படி ஆறுதல் சொல்வார், "சரி இவ்வளவு நாள் விளையாடினோம், ஆரோக்யமா இருந்தோம். இனி விளையாட முடியாது, ஆரோக்யம் குறையும். அதை சரி செய்ய ஆஸ்பத்திரி வேணும்ல".

தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்:

ஆழப்புழாவில் வசிக்கும் பிரசாத்துக்கும் (சுராஜ்), ஸ்ரீஜாவுக்கும் (நிமிஷா சஜாயன்) காதல். சாதிப் பிரச்னையால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு பேருந்துப் பயணம் இந்தத் தம்பதியின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஏதோ பிரச்னைக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை, வேறு பிரச்னையைச் சந்திக்கத் தள்ளிவிடுகிறது அந்தப் பயணம். அது என்ன, இதில் ஃபஹத் எங்கு வருகிறார், கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை. படம் முழுக்க நிறைய புதுவிஷயங்கள், காமெடி, பிறகு ஃபஹத்தின் அசத்தலான நடிப்பு என அட்டகாசமாக இருக்கும்.

தெலுங்கு

கௌதம புத்ர சதகர்னி:

சதவாகனர் ராஜவம்சத்தைச் சேர்ந்த கௌதமிபுத்ர சதகர்னி பற்றிய படம் தான் இது. தனது ராஜ்ஜியத்தை பெரிதும் விரிவாக்க விரும்பினார் சதகர்னி. காரணம், நாட்டில் எப்போதும் போர் நடப்பது ஏன்? எல்லா நாடும் தனித் தனி ராஜ்ஜியமாக இருப்பதால் தானே. எல்லாவற்றையும் ஒரே ராஜ்ஜியத்துக்கு கீழ் கொண்டு வந்துவிட்டால் பின்பு போரே இருக்காதல்லவா... இது சிறு வயதில் சதகர்னிக்கு வரும் யோசனை. இந்த ஒற்றுமைக்காக நடத்தப்படும் போர்களும், அதில் சதகர்னி பெரும் வெற்றிகளும்தான் கௌதமிபுத்ர சதகர்னி படத்தின் கதைச் சுருக்கம். பாலகிருஷ்ணாவுக்கு இது நூறாவது படம், வழக்கமாக டான்ஸைக் கூட ஸ்டண்ட் காட்சி போல செய்யும் பழக்கமுடையவர் பாலகிருஷ்ணா. முடிந்தவரை அவர் அடக்கிவாசித்து நடித்திருந்தது, பலருக்கும் ஆச்சர்யம் தந்தது.

சதமானம் பவதி:

ராகவராஜூ (பிரகாஷ் ராஜ்) - ஜானகி (ஜெயசுதா) தம்பதிக்கு வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் மகன், மகள், பேரன்களைப் பார்க்க ஆசை. சாதாரணமாகக் கூப்பிட்டால் வரமாட்டார்கள் என நான் என் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என சொல்லி அத்தனை பேரையும் வரவழைக்கிறார். ஊருக்கு வருவதில் நித்யா (அனுபமா பரமேஷ்வரன்)வும் ஒருவர். அவரைப் பார்த்ததும் ராஜுவுக்கு (ஷர்வானந்த்) காதல். குடும்ப சென்டிமென்ட், காதல் என கம்ப்ளீட் ஃபேமிலி என்டெர்டெய்னராக வந்தது சதமானம் பவதி.

காஸி:

எதிரிகள் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வர, அதை வேவு பார்ப்பதற்காக, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் எஸ்21 கிளம்புகிறது. அதேபோல் பாகிஸ்தான் கடற்படை, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது பங்களாதேஷ்) இருக்கும் தங்களது படைகளுக்கு கடல் வழியாக ஆயுதங்களை அளிக்க இடையூறாக இருக்கும் இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்தை அழிக்கத் திட்டமிடுகிறது. அதற்காக பாகிஸ்தான் அனுப்பும் நீர்மூழ்கிக் கப்பல்தான் 'காஸி'. இந்த தாக்குதலில் யாருக்கு என்ன ஆனது, எப்படி முடிந்தது என்பதை நிறைய கற்பனை கலந்து, கொஞ்சம் நிஜ சம்பவங்களைத் தழுவி சொல்லியிருக்கும் படம்தான் காஸி. படத்தின் கிராஃபிக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், முதன்முறையாக ஆழ்கடல் யுத்தம் பற்றிய கதை, கடலுக்குள் இருப்பதுபோலவே ஃபீல் கொடுக்கும் சவுண்ட் டிசைனிங் எனப் பல விஷயங்கள் படத்தில் புது அனுபவம் தரும்.

குரு:

தமிழ் உருவான 'இறுதிச்சுற்று' படத்தின் தெலுங்கு ரீமேக்தான் குரு. மாதவன் நடித்த ரோலில் வெங்கடேஷ் நடித்து வெளியானது. தமிழில் இருந்த அதே எதிர்பார்ப்பு வரவேற்பு தெலுங்கிலும் கிடைத்தது. படம் பார்க்காதவர்களுக்காக, எந்த லட்சியமும் இல்லாமல் சுற்றும் ராமேஸ்வரிக்குள் (ரித்திகா சிங்) இருக்கும் பாக்ஸரை அடையாளம் கண்டுபிடிக்கிறார் ஆதித்யா (வெங்கடேஷ்). அவளின் சேட்டை, திமிரை சமாளித்து அவளை எப்படி சாதிக்க செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. 

பாகுபலி 2:

"ஒய் கட்டாப்பா கில்டு பாகுபலி?" இந்தக் கேள்வியை ஒருமுறையாவது கேட்காதவர் இருக்க முடியாது. அந்தக் கேள்விக்கான பிரமாண்ட பதிலாய் பாகுபலி 2-வை நம் முன்னால் வைத்தார் ராஜமௌலி. முதல் பாகத்தில் ஷிவு, பாகுபலியைப் பற்றியும், தான் யாரென்றும் தெரிந்து கொண்டது போல, இரண்டாம் பாகத்தில் பாகுபலியின் காதல், பாகுபலியைக் கொன்ற பகை பற்றி தெரிந்து கொண்டு பழிதீர்த்தானா என்பதுதான் கதை.

கன்னடம்

சுதி - உர்வி - ஆகே: 

அமெரிக்காவில் இருக்கும் பெண் புகைப்படக்காரர் கர்லின், பெங்களூருவில் சில குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வருகிறார். பத்திரிகையாளரான ஜோதி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர போராடுகிறார். இதோடு நகரம் முழுக்க குற்றவாளியைத் தேடி அலைகிறது போலீஸ். இந்த மூன்று கதையும் எப்படி இணைகிறது? என்பதுதான் சுதி. படத்தில் பெண்கள் சம்பந்தபட்ட பிரச்னைகளைப் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் அடர்ஷ் ஈஸ்வரப்பா. 

மருத்துவ மாணவி ஆஷா, விபசார விடுதியில் இருக்கும் சூஸி, டெய்சி இந்த மூன்று பெண்கள் பற்றிய கதைதான் 'உர்வி'. சான்டல்வுட்டின் மிக தைரியமான முயற்சிகாகக் கொண்டாடப்படுகிறது உர்வி.

தமிழில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி நடிப்பில் வெளியான படம் 'மாயா'. இதன் கன்னட ரீமேக்தான் 'ஆகே'. நயன்தாரா நடித்த ரோலில் ஷர்மிளா மிந்த்ரே நடித்திருந்தார். படம் கன்னடத்திலும் பலத்த வரவேற்பைப் பெற்றது.