Published:Updated:

''அழகு மலராட பாட்டுல ஜதி சொன்ன என் அப்பா இப்ப பார்வையிழந்துட்டார்'' - பாடகி கல்பனா உருக்கம்

''அழகு மலராட பாட்டுல ஜதி சொன்ன என் அப்பா இப்ப பார்வையிழந்துட்டார்'' - பாடகி கல்பனா உருக்கம்
''அழகு மலராட பாட்டுல ஜதி சொன்ன என் அப்பா இப்ப பார்வையிழந்துட்டார்'' - பாடகி கல்பனா உருக்கம்

''அழகு மலராட பாட்டுல ஜதி சொன்ன என் அப்பா இப்ப பார்வையிழந்துட்டார்'' - பாடகி கல்பனா உருக்கம்

"அழகான இந்த வாழ்க்கையே வாழத்தானே... அதைத் தாமதமாகப் புரிஞ்சுகிட்டாலும், இப்போ அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழறேன். அப்பா ராகவேந்தருக்கு மகளாவும், மகனாகவும் இருந்து அவரை குழந்தை மாதிரி பார்த்துக்கிற கொடுப்பினை கிடைச்சிருக்கு" என நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார், பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர். பிரபல இசையமைப்பாளர் ராகவேந்தரின் ('வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பவர்) மகள். மிகப்பெரிய வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற்று, இன்று பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். பார்வைத்திறனை இழந்த தந்தைக்கு ஒரு தாயாக மாறியிருக்கிறார். 

"குழந்தைப் பருவத்திலேயே பன்முகத் திறமையுடன் இருந்திருக்கீங்களே..." 

"தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமா என் சினிமாப் பயணத்தை ஆரம்பிச்சேன். 'புன்னகை மன்னன்', 'பூ பூவா பூத்திருக்கு', 'ஆண்பாவம்' என பல தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடிச்சேன். சைல்டு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வொர்க் பண்ணினேன். ஐந்தரை வயதில் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. 'என் ராசாவின் மனசுல' படத்தில் பாடின 'போடா போடா புண்ணாக்கு' பாட்டு எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து இசைத் துறையில் முழு கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்." 

"உங்களுக்கான பாடகி அடையாளத்தை சுபலபமா பெறமுடிஞ்சதா?" 

"ஒரு மியூசிக் டைரக்டரின் மகளாக இருந்தாலும், 'எல்லா இடத்திலும் உனக்கான திறமையை மட்டுமே சொல்லி உன்னை அடையாளப்படுத்திக்க'னு அப்பா சொல்வார். சின்ன வயசுல நிறைய மேடைக் கச்சேரிகளில் பாடிப் பாடியே எனக்கான அடையாளத்தை தக்கவெச்சுகிட்டேன். தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தாலும், எனக்குப் பெரிய ஆர்வமில்லை. காலேஜ் படிக்கிறப்போ, மணிசர்மா சார்கூட கொஞ்ச காலம் வொர்க் பண்ணினேன். அடுத்தடுத்து தேவிஶ்ரீ பிரசாத், கீரவாணி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு இசையமைப்பாளர்களுக்கு முந்நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடினேன். தமிழில் 'நரசிம்மா' படத்தில் பாடின 'லா லா நந்தலா' பாட்டு பெரிய பிரேக் கொடுத்துச்சு.'' 

"உங்களோட ஹிட் பாடல்கள் என்னென்ன?'' 

" 'கடவுள் தந்த அழகிய வாழ்வு', 'காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே', 'பெண்ணே நீயும் பெண்ணா', 'ஒரு சின்ன வெண்ணிலா போலே', 'மதுரை ஜில்லா மச்சம்தாண்டா', 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு', 'டார்லிங் டம்பக்கு', 'ஓயா ஓயா' என நிறைய சொல்லலாம். தமிழ், தெலுங்கு என இதுவரைக்கும் ஆயிரத்து ஐநூறுப் பாடல்களைப் பாடியிருக்கேன்." 

"மிகப்பெரிய வாழ்க்கைப் போராட்டத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்ட தருணங்கள் பற்றி..." 

"கல்யாண வாழ்க்கை கொஞ்ச காலத்திலேயே விவாகரத்தில் முடிஞ்சது. அப்போ மனசு உடைஞ்சு அழுகையே கதின்னு இருந்ததால், என்னைப் பலரும் மறந்துட்டாங்க. பாடல் வாய்ப்புகள் இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ நடந்த, ஒரு மலையாள சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அதில் ஜெயிச்சு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசா வாங்கினேன். அது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. 25 கிலோ வரை என் உடல் எடையைக் குறைச்சு புத்துணர்ச்சியோடு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிச்சேன். அந்தக் கஷ்டமான வாழ்க்கைப் போராட்டத்தில் தற்கொலை முயற்சிக்குப் போயிருக்கேன். இந்த அழகிய வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டதும் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அந்தச் சமயத்தில் என் பொண்ணும் குடும்பமும்தான் எனக்குப் பக்கபலமா இருந்தாங்க. மறுபடியும் பாடகிப் பயணம் வேகமெடுத்துச்சு. தெலுங்கில்தான் அதிகப் புகழைக் கொடுத்துச்சு. அதனால், அங்கே நிறைய சினிமா பாடல்களைப் பாடியும், நிறைய நிகழ்ச்சிகளிலும் ஆக்டிவா இருக்கேன்.'' 

''அப்பாவை குழந்தையாகப் பார்த்துக்கொள்ளும் அனுபவம் எப்படி இருக்கு?" 

"என் வாழ்க்கையில் நான் பார்த்து வியந்த முதல் இசைக் கலைஞர் அப்பா. குருவாக, தகப்பனாக, நண்பனாக, வழிகாட்டியாக என் வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய ரோல் அவருடையது. ஆரம்பக் காலத்தில் நிறைய மேடைப் பாடல்கள் பாடிட்டிருந்தேன். அப்போ, 'ஏற்கெனவே பெரிய சிங்கர்ஸ் பாடினப் பாட்டை நாம பாடும்போது, அதை அப்படியே காப்பி அடிச்சுப் பாடக்கூடாது. 'அந்த சிங்கர் மாதிரியே பாடிட்டே'னு பாராட்டலாம். ஆனால், அதில் பெருமைப்பட எதுவுமில்லை. நமக்கான தனித்துவத்தோடு இருக்கணும்'னு அப்பா சொல்வார். 

'வைதேகி காத்திருந்தாள்(ரேவதியின் அப்பா)', 'சிந்து பைரவி',' நீ வருவாய் என' எனப் பல படங்களில் அப்பா நடிச்சிருக்கிறார். 'தாயே நீயே துணை', 'சர்வம் சக்தி மயம்' என சில படங்களில் அப்பாவும் நானும் சேர்ந்து நடிச்சிருக்கோம். இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராவும், நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் பாடியும் இருக்கார். 'தியாகச் சாலை', 'தேன் சிட்டுக்கள்' எனப் பல படங்களுக்கு இசையமைப்பாளரா வொர்க் பண்ணியிருக்காரு. மியூசிக் ஃபீல்டுல இருந்தவங்களுக்கு அப்பாவை நல்லாத் தெரியும். ஹார்டு வொர்க் பண்ணினதாலும் உடல்நலப் பாதிப்பினாலும் அவருக்கு பார்வைத்திறன் போயிடுச்சு. இப்போ அவரை நானும் குடும்பமும் குழந்தையாகப் பார்த்துக்கிறோம். அப்பா, அம்மாவுக்கே ஒரு தாயாக மாறி பார்த்துக்கிறதை நினைச்சு பெருமைப்படுறேன்.'' 

"பாடகி... டீச்சரானது எப்படி?" 

"ஸ்கூல் படிக்கிறப்போ படிச்ச ஹெலன் கெல்லர் வாழ்க்கை, என் மனசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. பார்வை இல்லாம, காது கேட்காம, வாய் பேச முடியாம இருந்த ஒரு குழந்தை எப்படி தன் தேவைகளையும் உணர்வுகளையும் அம்மாகிட்டயும் மத்தவங்ககிட்டயும் சொல்லியிருக்கும் நினைப்பேன். அந்தக் குழந்தை பிற்காலத்தில் தலைசிறந்த நாவல் ஆசிரியரானதோடு, நோபல் பரிசும் வாங்கினது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. நாம எதுக்கும் கலங்க கூடாதுனு நினைச்சுப்பேன். அதனால், 2004-ம் வருஷம் சில மாசத்துக்கு சென்னையில் இருக்கும் காது கேளாதோர் கல்லூரியில் டீச்சராக வொர்க் பண்ணினேன். அந்த அனுபவம் என் கவலைகளை போக்கி, மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்துச்சு. 

மாற்றுத்திறன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அதிக ஆசிரியர்கள் இல்லை. அந்தச் சவாலான பணியை செய்யணும்னு பெரிய ஆசை. அதனால், இன்னும் ஆழமான புரிதலோடு அந்தக் குழந்தைகளை அணுகினேன். அந்தப் பணிக்கு வர்றதுக்கு முன்னாடி குடும்பத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நினைச்சேன். அதுக்காக இசைத் துறையில் வேகமா உழைச்சுகிட்டு இருக்கேன். இதுக்கிடையே பெங்களூருல இருக்கும் ஒரு காது கேளாதோர் பள்ளியில் மூணு மாசம் தங்கிப் படிச்சேன். அந்தப் படிப்புக்கான முதல் லெவல்ல பாஸாகிட்டேன். இன்னும் ரெண்டு லெவல் இருக்கு. அதையும் முடிச்சு, முழுமையான ஆசிரியையாக என் அடுத்த பயணத்தை தொடர்வேன்" என்கிறார் புன்னகையுடன். 

"கடவுள் தந்த அழகிய வாழ்வு. உலகம் முழுதும் அவனது வீடு. கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு" என தன் மெல்லியக் குரலால் கல்பனா பாடும்போது, நம்மை நெகிழ வைக்கிறார்.

படங்கள்: ரா.வருண் பிரசாத்

அடுத்த கட்டுரைக்கு