Published:Updated:

2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்!

பொன்.விமலா

2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்!

பொன்.விமலா

Published:Updated:

பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத் எழுதிய '2 ஸ்டேட்ஸ்’ எனும் ஆங்கில நாவலைத் தழுவி, அபிஷேக் வர்மன் இயக்கிய இந்தி திரைப்படம், '2 ஸ்டேட்ஸ்’. ரிலீஸான இரண்டு வாரங்களுக்குள் 75 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ள இந்தத் திரைப்படம், தமிழகத்திலும் பரவலாக பேசப்படுகிறது. அதற்குக் காரணம், திரைக்கதையில் இருக்கும் தமிழகப் பின்னணி மற்றும் நம்ம ஊர் ரேவதி!

அழகான காதல் கதைதான் படம். ஹீரோ அர்ஜுன் கபூர், பஞ்சாபி பையன்' கிருஷ்’ கேரக்டரிலும்... ஹீரோயின் அலியா பட் தமிழ்ப்பெண் 'அனன்யா’ கேரக்டரிலும் வருகிறார்கள். அனன்யாவின் அம்மா வேடத்தில், 'ராதா ஸ்வாமிநாதன்' என தமிழ்த் தாயாக வலம் வருகிறார் நம்ம ரேவதி.

அகமதாபாத்திலிருக்கும் பிரபல கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்-மில் படிக்கும் கிருஷ் - அனன்யா இடையே வழக்கம்போல காதல். இருவருமே, பெற்றோரின் சம்மதத்தோடுதான் திருமணம் என முடிவு செய்கிறார்கள். பட்டமளிப்பு விழாவில் இருவரின் குடும்பமும் சந்திக்கும்போது... கருத்து வேறுபாடுகள் வெடிக்கின்றன. தமிழ்ப் பெண்களை தாழ்த்திப் பேசும் நாயகனின் அம்மா, பதிலடியாக பஞ்சாபிகளை வம்புக்கிழுக்கும் ராதா (ரேவதி)... என இரண்டு குடும்பங்களும் சலசலப்புகளுடன் பிரிகின்றன.

2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்!

விருப்பப்பட்டு சென்னை வேலையைத் தேடிக்கொள்ளும் கிருஷ், அனன்யா வீட்டுக்கு அடிக்கடி வந்து, அந்தக் குடும்பத்தின் அன்பை சம்பாதிக்க முயற்சிக்கும் காட்சிகள் அழகான ஓவியங்கள். அழகாய் வாரி முடித்த கொண்டை, நெற்றி வகிட்டில் குங்குமம், பெரிய பொட்டு, உப்பிய கன்னம், கண்களில் சாந்தம், பட்டுப்புடவை சகிதமாக தமிழ் அம்மாக்களை அப்படியே பிரதிபலிக்கிறார் ரேவதி.

திருமண வயதுள்ள ஒரு பெண்ணுக்குத் தாயாக இருந்தாலும், ராதாவுக்கு ஒரு தீராத காதல்... இசையின் மீது. எப்படியும் பாட கற்றுக்கொள்ள வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார். இதற்காக வரும் குருநாதர்கள் ஒவ்வொருவருமே, 'பாட்டுதான் வரலையே, அப்புறம் ஏன் இப்படி எங்க உயிரை வாங்கறேள்?’ என வெளிப்படையாகவே திட்டிவிட்டுப் போவார்கள். விருந்தினர் முன்பு அவமானப்பட்டாலும்கூட, விடாப்பிடியாக அடம்பிடித்து பாடல் கற்றுக் கொண்டுவிடுவார் ராதா. 'கிருஷ்’, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் கலைநிகழ்ச்சியில், அவரை பாட வைப்பார். அனைவர் மனதை மயக்கும்விதமாக தமிழ் மற்றும் இந்தி கலந்த பாடலைப் பாடி, கைத்தட்டலை அள்ளுவார் ராதா. பெரும்பாலும் பெண்கள் தங்கள் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் ஆசைகளை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். 'என்ன ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம்!’ என ஏங்கும் பெண்களுக்கு... இந்தப் படத்தில் ரேவதியின் கேரக்டர்... ஒரு ரோல் மாடல்.

2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்!

இதைப் பற்றி பெருமையோடு பேசும் ரேவதி, ''இதுவரைக்கும் 15 இந்திப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, பெருசா எந்தப் படமும் என்னை தனித்து அடையாளப்படுத்தல. பாலிவுட்டை பொறுத்தவரைக்கும் உயரமா இருக்கறவங்களுக்கும்... கிளாமரா இருக்கறவங்களுக்கும்தான் நல்ல வரவேற்பு. இப்ப... '2 ஸ்டேட்ஸ்' கண்டிப்பா இந்தியில நல்ல பேர் வாங்கித் தந்த படம்னு சொல்லலாம். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் தர்ற மாதிரியான படங்களா தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அந்த வகையில இந்த படம்... அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கருத்து சொல்லும் படமா இருக்கும்'' என்கிறார்.

'தமிழ்ப் பொண்ணு உனக்கு வேண்டாம். நீ பஞ்சாபி பொண்ணைத்தான் கட்டிக்கணும்' என்று தன் தாய் ஓயாமல் வற்புறுத்தும்போது... 'நீ கூடத்தான் பஞ்சாபி மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டே... இப்ப என்னாச்சு? உன் வாழ்க்கை நல்லாவா இருக்கு... உன் கணவர் உன்னை நல்லாவா நடத்தறார்? கல்யாணத்துக்கு மொழி, சாதி முக்கியம் இல்லம்மா... மனசுதான்' என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே இருக்கும் நெருடல்களைஎல்லாம் சுட்டிக்காட்டி கிருஷ் கேட்கும்போது... தியேட்டரே கைதட்டலால் அதிர்கிறது!

தமிழ்ப் பெண்ணுக்குரிய மிடுக்கும் வனப்பும் கதாநாயகி அலியாவிடம் தாராளமாக இருக்கிறது. பெற்றவரையும் காதலனையும் விட்டுக்கொடுக்க முடியாமல் அவர் நடத்தும் அத்தனை அசைவுகளும், அருமை! காதலுக்கு மொழி தேவையில்லை, உணர்வுகள்போதும் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பார்.

''இந்தப் படத்தில் அனன்யா ஸ்வாமிநாதன் கதாபாத்திரம் என் மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும். எனக்கு தமிழில் தெரிந்த ஒரே வார்த்தை, வணக்கம் மட்டும்தான். ஆனால், மெல்லிய உணர்வுகளை அழகாய்ப் பிரதிபலிக்கும் தமிழ் பிராமணப் பெண்ணாக நடித்தது, சுவாரஸ்யமாக இருந்தது. ஐ லவ் தமிழன்ஸ்!'' என்று பெருமையோடு சொல்கிறார்... அலியா பட்.

இரண்டு மாநிலங்களுக்கு (2 ஸ்டேட்ஸ்) இடைப்பட்ட கதை என்றாலும், படம் சொல்லும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ்... உண்மைக் காதல், யாரையும் காயப்படுத்தாமல் கைகூடும் என்பதுதான்!