வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (09/07/2017)

கடைசி தொடர்பு:08:07 (09/07/2017)

"சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா!" - திரையில் கலக்கிய சில அரசியல்வாதிகள்

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமில்ல... இந்த அரசியல்தலைவர்களும் சினிமாவில் தடம் பதித்தவர்கள்தான். 

'தி.மு.க செயல் தலைவர்'  மு.க.ஸ்டாலின் 

மு.க.ஸ்டாலின்

மாணவர் பாசறையில் இருந்து தி.மு.க-வின் 'செயல் தலைவர்' என்ற நிலை வரை... அரசியலில் ஸ்டாலின் கிராஃப் அபாரம். ஆனால், ஆரம்ப காலங்களில் கட்சித் தொண்டர்கள் மனதில் 'அரசியல்வாதி' ஸ்டாலினாகப் பதிந்ததைவிட, 'நடிகர்' ஸ்டாலினாக பளிச்செனப் பதிந்தார் மு.க.ஸ்டாலின். வார இதழ் ஒன்றில் மு.கருணாநிதி எழுதிய 'ஒரே ரத்தம்' திரைப்படமாக உருவானது. கார்த்திக் ஹீரோவாக நடித்த இப்படத்தில் 'நந்தகுமார்' என்ற கேரக்டரில் சாதி கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போராளியாக முகம் காட்டியிருந்தார் மு.க.ஸ்டாலின். 1988-ல் வெளியான இப்படத்தை எஸ்.சொர்ணம் என்பவர் இயக்கியிருந்தார். இதே ஆண்டில் விஜயகாந்த் நடிக்க, ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான 'மக்கள் ஆணையிட்டால்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இப்படத்தில் இடம்பெறும் 'ஆற அமர யோசிச்சுப் பாரு...' என்ற பாடலுக்கு தி.மு.க கொடிகள் பின்ணனி முழுக்கப் பறக்க ஸ்டாலின் பாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதுதவிர, தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'குறிஞ்சி மலர்', 'சூர்யா' ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோக்களாக நடித்த கார்த்திக், விஜயகாந்த் இருவரும் ஆளுக்கொரு கட்சியின் தலைவர்களாகச் செயல்படுவது 'அடடே' ஆச்சரியக்குறி. 

'பாட்டாளி மக்கள் கட்சி' தலைவர் சு.ராமதாஸ் 

ராமதாஸ்

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'தொண்டன்' தெரியும். ராமதாஸின் 'தொண்டன்' தெரியுமா? சினிமாவுக்கு எதிராக அடிக்கடி குரல் உயர்த்தும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸும் இரண்டு திரைப்படங்களில் நடித்து கெத்து காட்டியவர்தான். 1990-ல் முரளி ஹீரோவாக நடிக்க, கார்வண்ணன் இயக்கிய 'பாலம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். இதே படத்தில் இனியன் சம்பத், சோ.ராமசாமி ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். பிறகு, 1995-ல் மீண்டும் இயக்குநர் கார்வண்ணன் - நடிகர் முரளி காம்பினேஷனில் வெளியான 'தொண்டன்' என்ற படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்தார் ராமதாஸ். சஞ்ஜீவி ராமன் என்ற டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த ராமதாஸ், படத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராகப் போராடுவார். குழந்தைத் தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுவார். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்ற திருநாவுக்கரசர், ராம்விலாஸ் பஸ்வான், வாழப்பாடி ராமமூர்த்தி, மு.கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுபோலக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி' தலைவர் தொல்.திருமாவளவன் 

தொல்.திருமாவளவன் - அரசியல்

அரசியலில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த திருமாவளவன், 2007-ல் வெளியான 'அன்புத்தோழி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். படத்தில் இவர் ஏற்றிருந்த 'கருப்பு' என்ற கேரக்டர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிரதிபலிப்பதாக, சென்சார் பிரச்னையில் சிக்கி பின்னர் ரிலீஸ் ஆனது. இதே ஆண்டில் மு.களஞ்சியம் இயக்கத்தில் 'கலகம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக 'போராளி' போட்டோஷூட்டில் கம்பீரமாகத் தயாரானார் தொல்.திருமாவளவன். சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. பிறகு, 'மின்சாரம்' என்ற படத்தில் தமிழக முதல்வராகவும், மன்சூர் அலிகான் இயக்கிய 'என்னைப்பார் யோகம் வரும்' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார். 

'தமிழக காங்கிரஸ் கமிட்டி' தலைவர் திருநாவுக்கரசர் 

திருநாவுக்கரசர்

பட்டியலின் ஹைலைட் திருநாவுக்கரசர்தான். அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ்... எனப் பல கட்சிப் பொறுப்புகளில் வலம்வந்த திருநாவுக்கரசர் சினிமா ஆசையில், 'அக்னி பார்வை' என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். பி.மாதவன் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் விறைப்பு முகம் காட்டியிருக்கிறார் திருநாவுக்கரசர். ஆக்‌ஷன் காட்சிகளில் இவர் செய்திருக்கும் அதகளத்தை ரசிக்க, யூ-டியூபில் இருக்கும் இப்படத்தைப் பொறுமையாகப் பார்க்கவும்.  

சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்